பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min read
High Court orders removal of statues of leaders in public places
7/10/2021
‛‛தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை 3 மாதத்தில் அகற்ற வேண்டும்,” என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைவர்கள் சிலை
வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா, கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளதால், சிலையை அகற்ற தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரராகவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைகளில் சிலைகள் வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், சிலையை அகற்றியதில் எந்தத் தவறும் இல்லை என, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அகற்ற உத்தரவு
இதையடுத்து, சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் எனத் தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலங்கள், பொதுச் சாலைகள், மேய்க்கால் புறம்போக்கு ஆகிய இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும். இது தொடர்பாக விரிவான விதிகளை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் தலைவர் பூங்கா உருவாக்கி சாலைகள் மற்றும் பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளைப் பூங்காவில் வைத்துப் பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சிலைகள் பராமரிப்பதற்கான செலவுகளைச் சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடம் வசூலிக்க வேண்டும். சிலைகள் பராமரிப்புத் தொகை செலுத்தாதவர்களிடம் இருந்து, அத்தொகையை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக, 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.
அரசியல் கட்சிகள், மதம், சாதி, மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைக்கின்றனர். தலைவர்கள் சிலைகளை வைக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அதேசமயம் பொது இடங்களில் சிலைகள் வைக்கக்கூடாது. சமுதாயத்துக்காகத் தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்தக் கூடாது.
ஆட்சி அதிகாரத்துக்கு வரும் கட்சி, தங்கள் தலைவர்களின் சிலைகளை வைக்கின்றனர். பொது இடங்கள், சாலைகளில் சிலைகள் வைப்பதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், இல்லையென்றால் மக்கள் மனதில் தற்போது நிலவும் அச்சத்தைப் போக்க முடியாது என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்தார்.