மேனகா காந்தி, வருண்காந்தி திடீர் நீக்கம்- தமிழகத்தில் 3 பேருக்கு கட்சியில் பொறுப்பு
1 min read
Maneka Gandhi, Varun Gandhi abruptly fired- 3 people in Tamil Nadu responsible for the party
மேனகா காந்தி, வருண்காந்தி திடீர் நீக்கம்
பாஜக தேசிய நிர்வாகக் குழுவில் இருந்து
7.10.2021
பாரதீயஜனதா தேசிய நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தி, அவரின் மகனும், எம்.பி.யுமான வருண் காந்தி இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
வருண்காந்தி கருத்து
லகிம்பூர் கெரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்றிய மந்திரி மிஸ்ரா, துணை முதல்-மந்திரிக்கு எதிராகப் போராடிய விவசாயிகளுக்கும், பாரதீயஜனதா வினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்தக் கலவரத்தின்போது விவசாயிகள் கூட்டத்துக்குள் மந்திரியின் வாகனம் புகுந்ததில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாரதீய ஜனதா எம்.பி. வருண் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், ‘வீடியோ மிகத் தெளிவாக இருக்கிறது. கொலை மூலம் போராட்டக்காரர்களின் வாயை அடைக்க முடியாது. ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் அகங்காரம், கொடூரம் பற்றிய செய்தி நுழைவதற்கு முன், அப்பாவி விவசாயிகளின் ரத்தத்துக்குக் காரணமாணவர்களை நீதி முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.
திடீர் நீக்கம்
இந்நிலையில் பாஜகவின் 80 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பட்டியலை தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதில் நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தி, பில்பித் எம்.பி. வருண் காந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அமித் ஷா, மூத்த தலைவர்கள், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
உத்தரபிரதேச தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதையடுத்து, நிர்வாகக் குழுவில் ஒன்றிய மந்திரி பி.எல்.வர்மா மற்றும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த தலைவர் சிறப்பு அழைப்பாளர்களாகவும், 80 உறுப்பினர்களில் 12 பேர் உ.பி.யைச் சேர்ந்தவர்களாகவும், சிறப்பு அழைப்பாளர்களில் 6 பேர் உ.பி.யைச் சேர்ந்தவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுப்பிரமணிய சுவாமிக்கு இடமில்லை
பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமிக்கு இடமில்லை. அதேசமயம், மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. ஹர்ஷவர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் தொடர்ந்து தேசிய நிர்வாகக் குழுவில் உள்ளனர்.
நவம்பர் 7-ம் தேதி புதிய தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
தேசிய செயற்குழு
பாரதீய ஜனதாவின் தேசிய செயற்குழுவில் நரேந்திர மோடி, மூத்தத் தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி, பியூஷ் கோயல் உள்ளிட்ட 80 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில், இக்குழுவுக்கு 50 சிறப்பு அழைப்பாளர்கள், 179 நிரந்தர அழைப்பாளர்களை பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.
குஷ்பு, எச்.ராஜா
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாட்டில் இருந்து குஷ்பு, எச்.ராஜா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தன்னை சிறப்பு அழைப்பாளராக நியமித்துள்ளதற்கு பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா ஆகியோருக்கு குஷ்புவும், எச்.ராஜாவும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. இது எனக்கு மிகவும் பெருமையான தருணம்,” என பதிவிட்டுள்ளார்.
பொன். ராதாகிருஷ்ணன்
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பாரதீய ஜனதா தேசிய பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய பொதுச் செயலாளராக இருந்த மேனகா, அவரது வருண் இருவரும் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
