பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மரணம்
1 min readLegendary actor Srikanth dies
12.10.2021
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று மரணம் அடைந்தார்.
ஸ்ரீகாந்த்
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் (வயது 82) வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று மரணம் அடைந்தார். இவர் தான். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 50 படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முன் அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போதிருந்தே மேடை நாடகங்களிலும் நடித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்த ஸ்ரீகாந்துக்கு 1964-ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து, இயக்கிய “வெண்ணிறாடை” படத்தில் கதாநாயகனாக நடக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் ஏற்று நடித்த டாக்டர் சந்துரு என்ற கதாபாத்திரத்திற்கு அழகு அப்போது பேசப்பட்டது. இந்தப் படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நடிகை வெண்ணிறாடைநிர்மலா மற்றும் நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.
ஸ்ரீகாந்தின் இயற் பெயர் வெங்கட்ராமன். மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தில் ஸ்ரீகாந்த் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து நாடகத் துறையில் இவர் பிரபலமாக இருந்ததால் தனது சொந்தப் பெயரான வெங்கட்ராமன் என்ற பெயரை பயன்படுத்தாமல் ஸ்ரீகாந்த் என்ற பெயரிலேயே சினிமாவிலும் நடித்தார்.
“வெண்ணிறாடை” படத்திற்கு பிறகு இவருக்கு பெரும்பாலும் குணசித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களே கிடைத்து என்றே சொல்லலாம். இருப்பினும் பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.
அதேசமயம் தன்னால் எந்த கதாபாத்திரமும் ஏற்று நடித்து அதற்கு பெருமை சேர்க்க முடியும் என்று நிரூபித்தவர் ஸ்ரீகாந்த். குறிப்பாக “எதிர் நீச்சல்” “பூவா தலையா” “பாமா விஜயம்” நவகிரகம் மற்றும் “காசேதான் கடவுளடா” போன்ற படங்களை இவருடைய நகைச்சுவை நடிப்பிற்கு சான்றாக கூறலாம்.
1972 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “அவள்” என்ற திரைப்படத்தின் மூலம் இவர் வில்லனாகவும் அறிமுகமானார். அதன் பின் தொடர்ச்சியாக பல படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்தார்.
சிவாஜியோடு..
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் வியட்நாம் வீடு திரைப்படத்தில் நடித்தார். இதில் அவர் சிவாஜிகணேசனுக்கு மகனாக வந்தார். .
அதன்பி்ன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்த தங்கப்பதக்கம் திரைப்படம் இவருடைய திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் எனலாம்.
இந்தப் படத்தில் இவர் ஏற்று நடித்த “ஜெகன்” என்ற கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது. ராஜபார்ட் ரங்கத்துரை, அவன்ஒரு சரித்திரம் போன்ற படங்களில் சிவாஜிகணேசனுக்கு தம்பியாக நடித்தார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் நாவல்களான “சில நேரங்களில் சில மனிதர்கள்” “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” “கருணை உள்ளம்” போன்ற படங்களில் நடிகர் ஸ்ரீகாந்த முக்கிய வேடமேற்று நடித்திருப்பது பெருமைக்குரிய ஒன்று.
சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்த பெருமை மிக்கவர்.
இதுவரை இவர் எம்.ஜி.ஆரோடு மட்டும் இணைந்து நடிக்கவில்லை என்பது முக்கியமான ஒன்று.
இயக்குநர் ஸ்ரீதர் தொடங்கி கே.பாலசந்தர், ஏ.பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர், முக்தா ஸ்ரீனிவாசன், பி.மாதவன், கிருஷ்ணன் பஞ்சு மற்றும் எம்.ஏ.திருமுகம் என அனைத்து பெரும் இயக்குநர்களுடனும் பணியாற்றிய சிறப்பு பெற்றவர். சுமார் 200 படங்கள் வரை நடித்திருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் நடிகர் என்ற எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதிக்கு சொந்தக்காரர் என்பது மட்டும் உண்மை.
ஸ்ரீகாந்த்திற்கு ஒரு மகள் மட்டுமே உள்ளார். சென்னையில் அவருடன் வசித்து வந்தார். நண்பகல் வாக்கில் அவர் இறந்துள்ளார். மாலையிலேயே அவரது இறுதிச்சடங்கு தேனாம்பேட்டையில் உள்ள மயானத்தில் நடந்தது.