சமையல் எண்ணெயை 6 மாதத்துக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது; வியாபாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு
1 min read
Cooking oil should not be stored for more than 6 months; Federal order to merchants‘
25.10.2021-
வியாபாரிகள் சமையல் எண்ணெயை 6 மாதத்துக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெய் விலைகள், இருப்பு வரையறை ஆகியவைக் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு, உணவு மற்றும் பொது விநியோகத்துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளது.
இது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
விலை உயர்வை தடுக்க…
பண்டிகைக் காலத்தில் சமையல் எண்ணெய் விலைகளைக் குறைக்க உணவு மற்றும் பொது விநியோகத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சமையல் எண்ணெய் விலைகள், சமையல் எண்ணெய்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நிலவரம் ஆகியவற்றை உணவு மற்றும் பொது விநியோகத்துறை கண்காணித்து வருகிறது.
பண்டிகைக் காலத்தில் சமையல் எண்ணெய்களின் தேவை அதிகமாக இருக்கும். இதனால் அவற்றின் விலைகளும் உயரும். விலை உயர்வு மற்றும் பதுக்கலைத் தடுக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
இருப்பு
இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் சமையல் எண்ணெய் சங்கங்களுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகள் அடிப்படையில் பல நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. சமையல் எண்ணெய் இருப்புகளைத் தெரிவிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் வாராந்திர அடிப்படையில் எண்ணெய் இருப்பு நிலவரத்தைக் கண்காணிக்க இணையதளத்தை உணவு மற்றும் பொது விநியோகத்துறை உருவாக்கியுள்ளது.
சமையல் எண்ணெய்யின் தேவை மற்றும் நுகர்வு, நுகர்வோரின் விருப்பத்துக்கேற்ப மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். எந்த ஆயில் மில்களும், சுத்திகரிப்பு ஆலைகளும், மொத்த வியாபாரிகளும், கடந்த 6 மாத சராசரி இருப்பில், இரண்டு மாதங்களுக்கு மேலான இருப்பை வைத்திருக்கக் கூடாது.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.