தனி நீதிபதியின் கருத்து எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக நடிகர் விஜய் ஐகோர்ட்டில் மனு
1 min read
Actor Vijay has filed a petition in the court alleging that the opinion of a separate judge disturbed him
25.10.2021-
கொகுசு கார் இறக்குமதிக்கான வரிவிலக்கு தொடர்பான வழக்கில் தனி நீதிபதியின் கருத்து தன் மனதை புண்படுத்தி விட்டதாகவும் இதனால் மனஉளைச்ச் ஏற்பட்டதாவும் நடிகர் விஜய் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொகுசு கார்
நடிகர் விஜய் கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து புதிதாக ‘ரோல்ஸ் ராய்ஸ்’ சொகுசு காரை இறக்குமதி செய்தார். வாகன பதிவுக்காக, மண்டல போக்குவரத்து அதிகாரியை அணுகினார். நுழைவு வரி தொடர்பாக, ஆட்சேபனையில்லா சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கும்படி, போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார். இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்தும் பட்சத்தில், சான்றிதழ் வழங்குவதாக உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நுழைவுவரியில் இருந்து விலக்கு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் விஜய் மனு தாக்கல் செய்திருந்தார்.
ரீல் ஹீரோக்கள்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‛‛நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது. சாதாரண மக்கள் வரி கட்டும் நடிகர்கள் வரி விலக்கு கேட்பது ஏன். நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு என கடுமையாக விமர்சித்து இருந்தார். அதோடு விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் மேல் முறையீடு செய்தார். அதில் தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்ட விமர்சனங்களையும், அபராதத்தையும் நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-
சூர்யா, தனுஷ் உள்ளிட்டோரும் இதுபோன்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர். சட்டவிரோதமாக இந்த வழக்கை தொடரவில்லை, வரிவிலக்கு கோருவது சட்டப்பூர்வமான நடவடிக்கை என்பதாலேயே வழக்கு தொடர்ந்தோம். வரி ஏய்ப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை. நிலுவை வரித்தொகையான ரூ.32.30 லட்சம் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி செலுத்தப்பட்டு விட்டது.
மன உளைச்சல்
வழக்கு விவரங்களில் தொழிலை பற்றி குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை. இந்த வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்னை புண்படுத்தி உள்ளன. கஷ்டப்பட்டு உழைத்து கார் வாங்கிய நிலையில் நீதியின் விமர்சனம் தேவையற்றது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.