கண்ணாயிரத்தின் சேலை ரகசியம்/ நகைச்சுவை கதை
1 min read
Kannayiram and his Saree secret/ Story by Thabasukumar
10.11.2021
கண்ணாயிரம் தன் நண்பனுக்கு அடித்த திருமணபத்திரிக்கையில் தனது படம் தவறுதலாக அச்சிடப்பட்டுவிட்டது என்று பஞ்சாயத்தில் விளக்கம் அளித்தாலும் மோட்டார்சைக்கிள்வாலிபர் நம்பவில்லை. கண்ணாயிரம் கதை விடுகிறார், அவரை நம்பக்கூடாது என்று நினைத்தார்.
கண்ணாயிரத்தை பார்த்து, படம்மாறிபோச்சுன்னு சொன்னீங்க. சரி, அப்புறம் மணமேடையில் இருந்து கீழே இறங்க முடியலைன்னு சொன்னியளே. மணமேடையில் என்ன பண்ணீனிங்க என்று கேட்டான். கண்ணாயிரம் உடனே அதுவா நான் மாப்பிள்ளைக்கு தோழன். அதனால அவன் பக்கத்திலே இருந்தேன். அவனுக்கு கலர்சோடா வேணும்னா வாங்கிகொடுப்பேன். அவனுக்கு முகத்தில் வியர்த்துச்சுன்னா கர்சிப்பாலே துடைச்சுவிடுவேன். அவனிடம் ஏதாவதுபேசிக்கிட்டு இருப்பேன். ரொம்ப ஜாலியாபோச்சி.. என்று சொன்னார். அப்போதும் அவன்கேட்கவில்லை. நான் நம்ப முடியாது. நீங்க கவுசல்யா கணவர் இல்லைன்னா கவுசல்யா ஏன் கண்ணாயிரம் அக்கவுண்டில் சேலை வாங்கிச்சு. அதுக்கு பதில் சொல்லுங்க என்று கேட்டார்.
கண்ணாயிரம் பதில் செல்லாமல் விழித்தார். மோட்டார் சைக்கிள் வாலிபர் உடனே பாத்தியளா.. அவர் பதில் சொல்லாமல் விழிக்கிறாரு என்று மாட்டிவிட்டார்.
அருவா அமாவாசை சூடாகி ஏய் பதில் சொல்லுடா என்று கண்ணாயிரத்தை மிரட்டினார்.
கண்ணாயிரம் அது வந்து என்று இழுத்தார். ஏய் தம்பி அவன் சொல்லமாட்டான். அந்த ஜவுளிக்கடைக்காரரை வரச்சொன்னியா, இல்லையா. இன்னும் அவரு வரக்காணோம். போய்பாத்திட்டுவா என்று மோட்டார்சைக்கிள்வாலிபரிடம் அருவா அமாவாசை கூறினார்.
அப்போது, யாருய்யா எங்க ஊர் ஜவுளிக்கடைக்காரை பஞ்சாயத்துக்கு அழைச்சதுன்னு அதட்டலாக ஒரு சத்தம் கேட்டது. அதுவந்த திசையை எல்லோரும் பார்த்தார்கள். அங்கு அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் ஈட்டி ஏகாம்பரம் கையில் ஈட்டியுடன் வந்துகொண்டிருந்தார். அவருடன்ஜவுளிக்கடைக்காரர் வந்தார்.
அவர்களை பார்த்ததும் கண்ணாயிரம் அய்யய்யோ ஈட்டி ஏகாம்பரம் வேறவர்ராரே.. எப்படி சமாளிக்கப்போறேன் .. என்று நடுங்கினார். அங்கிருந்து போயிரலாமுன்னு நினைச்சு கண்ணாயிரம் மெல்ல நடக்கதொடங்கினார். அதை பார்த்த மோட்டார் சைக்கிள் வாலிபர்.. ம். என்ன தப்பச்சிடாலாமுன்னு பாத்தியளா. விடமாட்டேன். என்று கண்ணாயிரத்தை வழிமறித்தான்.
டேய்,தாகமா இருக்குடா.. கொஞ்சம் தண்ணிகுடிச்சிட்டுவந்திடுறேன். விடுறா என்றார். அவன் விடவில்லை. அதெல்லாம் பிறகு குடிக்கலாம். நான் விடவேமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான்.
தம்பி, உனக்கு தரவேண்டிய பைசா தரலைன்னுமாட்டிவிடாதடா. பஞ்சாயத்து முடிஞ்சதும் கூடுதலாக பணம் தர்றேன்னு சொன்னார். அந்த வாலிபர், ம்.. நான்ஏமாறமாட்டேன். நான் ரொம்ப விவரமானவன் என்று சொல்லி சிரித்தான். இனிதப்பமுடியாது என்று நினைத்த கண்ணாயிரம் ம்… இனி வருவதுவரட்டும். பாத்துக்கலாமுன்னு நினைத்தார்.
ஈட்டி ஏகாம்பரம் ஒல்லியாக வழுக்கை தலையுடன் இருந்தார். வேட்டியை மடக்கிகட்டியபடி சின்னமீசையை தடவியபடி பஞ்சாயத்துக்கு வந்து சேர்ந்தார். யாரவன் என் கட்சிக்காரரை பஞ்சாயத்துக்கு அழைத்தவன் என்று முழங்கினார்.
அதை கேட்டதும் அருவா அமாசையின் மீசை துடித்தது. அவன், இவன் என்ற ஏக வசனம் எல்லாம் இங்கே வேண்டாம். கேட்டதுக்கு பதில்சொன்னாபோதும் என்றார். ஈட்டி ஏகாம்பரம் தரையில் ஈட்டியை ஓங்கி குத்தினார். பின்னர் கேள்விகளை நீர் கேட்கிறீரா இல்லை நான் கேட்கட்டுமா என்று கேட்டார்.
உடனே அருவாஅமாவாசை, கேள்விகளை நானே கேட்கிறேன். நீர் பதில் சொல்லும் என்றார்.
சரி கேளும், கேட்டுப்பாரும் என்றார் கரகரத்த குரலில்ஈட்டி ஏகாம்பரம்.
உடனே அருவா அமாவாசை மீசையை முறுக்கிவிட்டபடி, கண்ணாயிரம் அக்கவுண்டில் இந்தபொண்ணுக்கு ஜவுளிக்கடைக்காரர் ஏன் சேலை கொடுத்தார். கேட்டு சொல்லுங்கள் என்றார்.
ஈட்டி ஏகாம்பரம் ஜவுளிக்கடைக்காரரிடம் சிறிதுநேரம் பேசினார். பின்னர் அருவாஅமாவாசையை பார்த்து, கண்ணாயிரம் அக்கவுண்டில் இந்த பெண்ணுக்குமட்டுமல்ல ஏகப்பட்ட பெண்களுக்கு சேலை கொடுக்கப்பட்டிருக்கு.என்றார்.
அதைகேட்டதும் அருவாஅமாவாசை கோபத்தில் ஏகப்பட்ட பெண்களுக்கா, என்னய்யா அநியாயம். யார்சொல்லி கடைக்காரர் கொடுத்தார் என்று கொந்தளித்தார்.
உடனே ஜவுளிக்கடைக்காரர், எல்லாம் கண்ணாயிரம் சொல்லி தான் கொடுத்தேன். அவர்தான் என்பெயரைசொல்லி பெண்கள் சேலைகேட்டால் கொடுத்திடுங்க. பணம் பிறகு தருவேன் என்று சொன்னார். இதுவரை பத்துபெண்களுக்கு தள்ளுபடி விலையில் சேலை கொடுத்திருக்கேன். இந்த பெண்ணும் கண்ணாயிரம் பேரைசொல்லிச்சு. அந்த பெண்ணுக்கும் சேலை கொடுத்தேன்.என்று சொன்னார்.
அருவா அமாசை ஆத்திரத்தில் அவன் கொடுக்க சொன்னா ன்னா நீங்க கொடுக்கிற தா. உங்களுக்கு அறிவு இல்லையா என்று கேட்டார். உடனே ஈட்டி ஏகாம்பரம் வேகமாக என் கட்சிக்காரர் மீது அவதூறாக குற்றம்சாட்டக்கூடாது. கண்ணாயிரம் சேலை கொடுக்க சொன்னாரா இல்லையா அதை கேளு என்று அருவா அமாசை யிடம் கூறினார். அதை கேட்டதும் அவர் கண்ணாயிரத்தை பார்த்து, சேலை கொடுக்க சொன்னியா இல்லையா என்று கேட்டார். கண்ணாயிரம் அதற்கு என்ன.. சேலை கொடுக்க சொன்னியா என்று இழுத்தார்.
அருவா அமாவாசை பற்களை கடித்த படி, அரிவாளைத்தான் இரண்டு முறைக்கு மேல எடுக்கமாட்டேன்னு என்பொண்ணுக்கிட்ட சொல்லிஇருக்கிறேன். செம்பை எடுத்து வீசமாட்டேன்னு சொல்வில்லை. சரியா பதில் சொல்ல லைன் னா செம்பை தூக்கிஅடிச்சிருவேன் என்று மிரட்டினார். கண்ணாயிரத்தைபார்த்து சேலை கொடுக்க சொன்னியா இல்லையா என்று மீண்டும் கேட்டார்.
என்ன.. சேலை கொடுக்க சொன்னியா என்று கண்ணாயிரம் சொல்லிவிட்டு ஓடபார்த்தார்.
பொது மக்கள் அவரை அமுக்கிப்பிடித்து கொண்டார்கள். கண்ணாயிரம் ஓடமுடியாமல் தவித்தார். பூங்கொடி ஓடிப்போய் அவரைவிடுங்க, அவரை விடுங்க என்று சொன்னார். பொது மக்கள் விடுவித்ததும் கண்ணாயிரம் அப்பாட தப்பித்தேன் என்றுநினைத்தார்.
பூங்கொடி அவர் அருகே வந்து ஏங்க சேலை கொடுக்க சொன்னியளா இல்லையா என்று கேட்டார்.
கண்ணாயிரம் மெல்ல பூங்கொடி என் பக்கத்திலே வா. உன்காதில சொல்லுறேன் என்றார். பூங்கொடி சரி சொல்லுங்க. என்று அவர் அருகில் வந்தார். கண்ணாயிரம் தன்மனைவியின் காதில் ஆமா நான்தான் சேலை கொடுக்க சொன்னேன் என்று கிசுகிசுத்தார்.
பூங்கொடி கடுப்பாகி அடப்பாவி.. என்று கத்தினார். அருவா அமாசை தன் மகளைப் பார்த்து, பூங்கொடி , கண்ணாயிரம் என்ன சொல்லுறான் என்று கேட்டார்.
அப்பா, அவர்தான் சேலை கொடுக்க சொன்னாராம். உங்களுக்கு பயந்துகுட்டுதான் எங்கிட்டசொல்லுறாரு என்றார்.
அருவா அமாசை கோபத்தை அடக்கிக்கொண்டு, ஏம்மா, பொண்ணுகளுக்கு ஏன் சேலை கொடுக்க சொன்னாருன்னு கேட்டுசொல்லு என்று பூங்கொடி யிடம் கூறினார்.
அவர், ஏங்க. உங்களால பெரிய பிரச்சினையா போச்சு. பெண்களுக்கு ஏன் சேலை கொடுக்க சொன்னீங்க என்று கண்ணாயிரத்திடம் கேட்டார்.
கண்ணாயிரம் மெல்ல இது தெரியாதா. சேலை உடுக்கத்தான் கொடுக்க சொன்னேன் என்றார். பூங்கொடி உடனே அப்பா, பெண்கள் உடுக்கிறதுக்குதான் சேலை கொடுக்க சொன்னாராம் என்றார். அருவா அமாவாசை பெருமூச்சுவிட்டார், இந்தபய எதையோ மறைக்கிறான்.பெண்கள் சேலை உடுக்க அவங்க வீட்டுக்காரர் வாங்கிகொடுக்கமாட்டாரா. கண்ணாயிரம் ஏன் வாங்கி கொடுத்தான். அதை கேளு என்று பூங்கொடியிடம் கூறினார்.
பூங்கொடி தன் கணவரிடம் ஏங்க, பெண்கள் உடுக்க நீங்க ஏன்சேலைவாங்கிகொடுத்தீங்க, சொல்லுங்க என்றார். கண்ணாயிரம், ஏய் அதெல்லாம் வெளியே செல்லக்கூடாது. அது ரகசியம் என்று மனைவியிடம் சொன்னார். பூங்கொடி தன் தந்தையிடம், அப்பா சேலைவாங்கிகொடுத்தது ரகசியமாம். அதை வெளியே சொல்லக்கூடாதாம். அவர் சொல்றாரு என்றார்.
அருவாஅமாவாசை கோபத்தில்.. டேய். என் கோபத்தை கிளப்பாதேடா என்று செம்பை கையில் தூக்கினார்
.
வே.தபசுகுமார், புதுவை.