April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

தெரிந்துகொள்வோம் தேர்தல் வரலாறு(15): 2016: மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார், ஜெயலலிதா/மணிராஜ், திருநெல்வேலி

1 min read

Let’s know Election History (15): 2016: Returned to power, Jayalalithaa / Maniraj, Tirunelveli

2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தல் தமிழகம் சந்தித்த 15-வது தேர்தலாகும். 1952,57,62,67 ஆகிய ஆண்டுகளில் மதராஸ் மாகாண சட்டமன்றமாகவும், 1971 முதல் தமிழ்நாடு சட்டமன்றமாகவும் தாய்த்தமிழகம் தேர்தலை சந்தித்து
வருகிறது.
2016-ம் ஆண்டு மே 16-ந் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 2014 நாடாளுமன்றத்தேர்தல் போலவே அதிமுக இதிலும் தனித்துப்போட்டியிட்டது. ஒப்புக்கு 6 சிறு கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொண்டது. மனிதநேய ஜனநாயக கட்சி (2), குடியரசு கட்சி (1), சமத்துவ மக்கள் கட்சி (1), கொங்கு இளைஞர் பேரவை (1), முக்குலத்தோர் புலிப்படை (1), தமிழ் மாநில முஸ்லிம் லீக் (1) ஆகியவையே அந்தக்கட்சிகள். அவை இரட்டை இலைச்சின்னத்திலேயே போட்டியிடவேண்டும் என்ற நிபந்தனையுடன் அதிமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் சேர்ந்து இருந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, விவசாயத்தொழிலாளர் கட்சி, சமூக சமத்துவப் படை
ஆகியவை திமுகவுடன் அணி சேர்ந்து போட்டியிட்டன.

இந்தத்தேர்தலின்போது, திமுக தலைவர் கருணாநிதிக்கு 92 வயதாகி இருந்தது. எனவே தீவிர தேர்தல் பிரசாரம் செய்ய அவர் உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. எனவே, திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

மக்கள் நலக்கூட்டணி

3-வது அணியாக ‘மக்கள் நலக்கூட்டணி’ அமைந்தது. இதில் தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ, விடுதலைச்சிறுத்தைகள் ஆகியவை இடம் பெற்றன. பாமக, ‘மாற்றம் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் அன்புமணியை முன்னிறுத்தி தனித்துப்போட்டியிட்டது.
சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் கண்டது.
திமுகவின் தேர்தல் பிரசாரத்தில், “நமக்கு நாமே” என்ற தலைப்பில் முக ஸ்டாலின் நடத்திய மக்கள் சந்திப்புக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் ஒழிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு பெண்கள்
மத்தியில் பெரும் ஆதரவு கிட்டியது. இருந்தும், நூலிழை வித்தியாசத்தில் திமுகவின் ஆட்சிக்கனவு கை நழுவியது.
74.81 சதவீத வாக்குகள் பதிவான இத்தேர்தலில் அதிமுக 134
தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.
திமுக 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 1 தொகுதியையும் வென்றன. வாக்குப்பதிவு நாள் நெருங்கியநிலையில், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவாக்குறிச்சி தொகுதிகளுக்கு 5 மாதங்களுக்குப்
பின்னர் நடத்தப்பட்ட தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, தன் கணக்கை 136 ஆக உயர்த்தியது.
அதிமுக அணி வாக்குகள் 1,76,17,060 (40.88 சதவீதம்) திமுக அணி வாக்குகள் 1,71,75,374 (39.85 சதவீதம்).
இரு அணிகளின் வாக்கு வித்தியாசம் 1.03 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புமணி, விஜயகாந்த் படுதோல்வி மக்கள் நலக்கூட்டணி, பாமக ஆகியவை ஒரு இடம் கூட பிடிக்க முடியவில்லை. பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி, 2014 நாடாளுமன்றத்தேர்தலில் திமுக, அதிமுகவை
தோற்கடித்து தர்மபுரியில் வென்று எம்பி பதவி வகித்த நிலையில், சட்டமன்றத்துக்கு பென்னாகரத்தில் போட்டியிட்டு தோற்றது மட்டுமின்றி, 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், உளுந்தூர்பேட்டையில்
தோற்று 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டை பறிகொடுத்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கோவில்பட்டியில் போட்டியிடுவதாக முதலில் அறிவித்து இருந்தார். ஆனால் திடீரென்று தேர்தலில் போட்டியிடவில்லை என்று பின்வாங்கிக்கொண்டார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் தவிர வேறு எந்தக்கட்சிக்கும் இடம் இல்லை என்ற தீர்ப்பை மக்கள் அளித்தது, 2016 தேர்தலில் தான் என்பது
குறிப்பிடத்தக்கது.


4-வது முறையாக ஆட்சியைப்பிடித்த ஜெயலலிதா, 23-5-16 அன்று மீண்டும் முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.ஆனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 5-12-16 அன்று மரணம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு முதல்வராக பதவி வகித்து, ஜெயலலிதா மரணத்துக்குப்பின், 6-12-16 அன்று முதல்- அமைச்சராகப்பதவி ஏற்றார்.
சசிகலாவின் முதல்வர் ஆசை ஓ.பன்னீர்செல்வம் பதவியில் இருந்த கொஞ்ச நாளிலேயே ஜெயலலிதாவின் தோழி சசிகலா முதல்வராக ஆசைப்பட்டு, ஓ.பன்னீரசெல்வத்தை பதவி விலகவைத்து, சட்டமன்ற அதிமுக தலைவராகவும் தேர்வு பெற்றார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில், பெங்களூரு நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு சசிகலா சிறை செல்ல நேரிட்டது. எனவே, அவர் எடப்பாடி பழனிசாமியை
முதல்வராக்கி விட்டு சிறை சென்றார். எடப்பாடி பழனிசாமி 16- 2-17 அன்று முதல்வராகப்பதவி ஏற்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.