தமிழகத்தில் 15-18 வயது வரையிலான மாணவர்களுக்கு 3-ந் தேதி முதல் தடுப்பூசி
1 min read
Vaccination for students aged 15-18 years in Tamil Nadu from 3rd January
29.12.2021
தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு வருகிற (ஜனவரி) 3-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
பேட்டி
சென்னையில் இன்று காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தனிமைப்படுத்துதல்
நாடு முழுவதுமே கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னையிலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று(அதாவது நேற்று முன்தினம்) சென்னையில் 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில், சென்னை அசோக் நகர், எல்.ஜி.ஜி.எஸ் காலனி 19வது தெருவில் உள்ள இரண்டு வீட்டில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதி தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்கள் அனைவருமே முகக்கவசம் அணியவும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் ஒமைக்ரான் பாதித்த 45 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அனைவருமே அறிகுறிகள் அற்ற பாதிப்புடன் உள்ளனர்.
இவர்களைத் தவிர 120 பேருக்கு எஸ் ஜீன் குறைபாடு கண்டறியப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வேகமாகப் பரவும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசி
தமிழ்நாட்டில் 15 முதல்18 வயது வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வரும் (ஜனவரி) 3-ந் தேதி சென்னை போரூர் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். மேலும், மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.