தமிழகத்திற்கு மத்திய அரசு 10வது தவணையாக ரூ.183 கோடி நிதி
1 min read
183 crore for the 10th installment of the Central Government to Tamil Nadu
6.1.2022
17 மாநிலங்களுக்கு 10வது தவணையாக ரூ.9,871 கோடி வருவாய் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறை
மத்திய – மாநில அரசுகளுக்கிடையே வருவாயை பகிர்ந்து கொள்வது தொடா்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதிக் குழு வழங்கும். வருவாயை விட செலவினம் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை நிதியை வழங்குவதற்கு நிதிக் குழு பரிந்துரைக்கும். அவ்வாறு வழங்கப்படும் நிதி மாநிலங்களின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க உதவும். அதன்படி, 15-வது நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை நிதியை மாதந்தோறும் ஒவ்வொரு தவணைகளாக விடுவித்து வருகிறது.
இந்நிலையில், 10வது தவணையாக தமிழகம், ஆந்திரா, அசாம், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்குவங்கம் ஆகிய 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை வருவாய் பற்றாக்குறை நிதியாக மத்திய அரசு விடுவித்துள்ளது.
ரூ.183.67 கோடி
இதில் தமிழகத்துக்கு ரூ.183.67 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. இந்த 17 மாநிலங்களுக்கும் மொத்தமாக இதுவரை ரூ.98,710 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் இதுவரை ரூ.1836.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.