May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

நாளை பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

1 min read

Schools opening tomorrow: Guidelines announced

31.1.2022
தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளும் நாளை திறக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

பள்ளிகள் திறப்பு

கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை (1-ந்தேதி) முதல் மீண்டும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா பரவல் காரணமாக சுழற்சி முறையிலேயே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஆனால் நாளை முதல் 100 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 முதல் 12-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் நாளை முதல் முழுமையாக செயல்பட உள்ளன.

ஏற்பாடுகள்

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நாளை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. நாளை மாணவர்கள் வகுப்புகளில் சுகாதாரமான முறையில் அமரும் வகையில் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்கள் அமரும் இருக்கைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் நாளை முழு அளவில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் வருகை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து சுமார் 1 கோடி மாணவ-மாணவியர் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை அறிவித்த சுழற்சி முறை வகுப்புகள் கிடையாது. அதனால் தினமும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் வழக்கம் போல உட்கார வைக்கப்படுவார்கள். முன்னதாக அவர்களுக்கு கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு கைகள் தூய்மை செய்யப்படுவது உள்ளிட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இன்று அனைத்து பள்ளி ஆசிரியர்கள் குழு ஏற்பாடு செய்யும். அதனால் அனைத்து ஆசிரியர்களும் இன்று தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆன்லைன்

இதனிடையே நிருபர்கள் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், “மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி மூலம் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்று உலக சுகாதாரநிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும். மாவட்டம் முழுவதும் காய்ச்சல் கண்காணிப்பு குழுக்கள் செயல்படுத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.