உக்ரையுடன் போர்: ரஷ்யாவின் 800 வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு
1 min readWar with Ukraine: 800 Russian soldiers killed
25/2/2022
உக்ரையுடனான போரில் ரஷ்யாவின் 800 வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
800 வீரர்கள்
உலக நாடுகளின் எதிர்ப்பு, பொருளாதார தடை விதிப்புகளை புறந்தள்ளி, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றும் வகையில், அந் நாட்டுக்குள் ரஷ்யப் படைகள் புகுந்தன. 2வது நாளாக தொடரும் இந்த தாக்குதலில் இதுவரை 137 வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இன்று கீவ் நகரில் ஏவுகணை தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவில் செயின்ட்பீட்டர் சதுக்கத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை ஏதும் நடவாமல் தடுக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளளனர். இதற்கிடையே ரஷ்யாவை சேர்ந்த 800 வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
உக்ரைனின் 70க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை முற்றிலும் அழித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. சோவியத் ரஷ்யாவில் இருந்த அண்டை நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ள, ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு, உக்ரைன் விருப்பம் தெரிவித்திருந்தது.இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இதற்கிடையே, உக்ரைனின் எல்லையில் கடந்த சில மாதங்களாக, 1.50 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள், ராணுவத் தளவாடங்களை, ரஷ்யா குவித்து வந்தது.
அதனால், எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. பதற்றத்தை தணிக்கும் வகையில், ரஷ்யாவுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பேச்சு நடத்தி வந்தனர். ‘உக்ரைனை ஆக்கிரமிக்கும் வகையில் தாக்குதல் நடத்தினால், பொருளாதார தடை உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்’ என உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்த பேச்சுகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையே, உக்ரைனின் கிழக்கு பகுதியில், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள, ‘டான்பாஸ்’ பிராந்தியத்தை, தன்னாட்சி பெற்ற நாடாக ரஷ்யா அறிவித்தது. அந்த பகுதிக்கு, ராணுவ உதவி உள்ளிட்டவை வழங்கப் போவதாகவும் அறிவித்தது.அதையடுத்து, ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் போர் மூளும் அச்சம் அதிகரித்ததது.
இந்நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு ஒப்புதல் அளித்தார்.
இது தொடர்பாக, ‘டிவி’ வாயிலாக வெளியிட்ட அறிவிப்பில் அவர் கூறியதாவது:-
உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் இனப்படுகொலை நடக்கிறது. அதை தடுக்கும் வகையிலேயே, அந்தப் பகுதி மக்களை காப்பாற்றும் வகையிலேயே, ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைனை நாங்கள் ஆக்கிரமிக்க முயற்சிக்கவில்லை. அங்குள்ள நிலைமையை சீர்படுத்தவே ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையில் எந்த நாடாவது, அமைப்பாவது தலையிட முயன்றால், அவர்கள் இதுவரை சந்தித்திராத கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குண்டு சத்தம்
ரஷ்ய அதிபரின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், உக்ரைனுக்குள் மூன்று திசைகளில் இருந்து ரஷ்யப் படைகள் முன்னேறத் துவங்கின. உக்ரைன் தலைநகர் கீவ், கிழக்கே உள்ள கார்கிவ், மேற்கே உள்ள ஒடேசா உள்ளிட்டப் பகுதிகளில் குண்டுகள் வீசப்படும் பெரும் சத்தம் எழுந்தது.உக்ரைனிடமிருந்து ஏற்கனவே கைப்பற்றிய கிரீமியா பகுதி வழியாகவும், நட்பு நாடான பெலாரஸ் எல்லை வழியாகவும், உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் புகுந்தன. இதைத் தொடர்ந்து, ரஷ்ய விமானப் படைகள், உக்ரைன் மீது வான்வழி தாக்குதலையும் நடத்தின.
உக்ரைன் விமானப் படையின் 11 தளங்கள் உட்பட, 70க்கும் மேற்பட்ட ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக, ரஷ்யா அறிவித்தது. உக்ரைனின் வான்வழியைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.
கண்டனம்
ரஷ்யாவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் பங்கு சந்தைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்தது.
இதற்கிடையே, உக்ரைனில் கீவ் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் அச்சமடைந்தனர்.வீடுகளிலேயே இருக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலர் நாட்டை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர்.
”ரஷ்யாவுக்கு எதிராக நம் படைகள் தீரத்துடன் போரிட்டு வருகின்றன. நம் எல்லையை ஆக்கிரமிக்கும் வகையில் வந்த ரஷ்யப் படையைச் சேர்ந்த, 50 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய விமானங்களும் வீழ்த்தப்பட்டுள்ளன. நம் வீரர்கள், 40 பேர் இந்த தாக்குதல்களில் உயிரிழந்தனர்,” என, உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குள் ரஷ்ய ராணுவம் நேற்று இரவு அதிரடியாக நுழைந்தது. இங்குள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தொடர்ந்து முன்னேறி வருவதால் கீவ் நகரம், எந்த நேரத்திலும் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கீவ் நகருக்கு 5 கி.மீ., தொலைவில் உள்ள வோர்செல் நகரை ரஷ்ய படைகள் வந்தடைந்துள்ளது. இதனையடுத்து மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கீவ் நகரை ரஷ்ய விமானங்கள் தாக்கியதாக தெரிவித்துள்ள ரஷ்யா, வான் பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் அருகில் இருந்த குடியிருப்பு கட்டடங்களில் மோதி கீழே விழுந்து எரிந்தது. இதனால், அங்கு சேதம் ஏற்பட்டது.
தவிப்பு
உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து, ரஷ்ய வீரர்கள் போர் தொடுத்து வருவதால், உக்ரைன் மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். தலைநகர் கீவில் உள்ள பிரதான பகுதிகளில், அந்நாட்டு அரசு ஒலிபெருக்கிகள் வாயிலாக மக்களுக்கு வழிகாட்டுதல்களை அளித்து வருகிறது. மறுபுறம், குண்டுகளின் சத்தம் தொடர்ந்து ஒலிக்கிறது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். உயிர் பிழைக்க, பதுங்கும் இடங்களை தேடி அலைந்து திரிகின்றனர். மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. ஏ.டி.எம்.,களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.