கண்ணாயிரத்தை குழப்பிய பச்ச முட்டை/ நகைச்சுவை கதை
1 min read
Kannayiram Confusion of Green egg / comedy story by Thabasukumar
1.3.2022
கண்ணாயிரம் மனபலம் வருவதற்காக தன் மனைவியுடன் சிலம்பம் கற்றுக்கொள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றார்.அங்கு காவலுக்கு நாய் உண்டு என்று காவலாளி சொன்னதால் கண்ணாயிரம் உள்ளே செல்லாமல் பயந்துபோய் நின்றார். உடற்பயிற்சி கூட மாஸ்டர் தெரியும் என்று கண்ணாயிரம் மனைவி பூங்கொடி சொன்னதால் காவலாளி உள்ளே இருந்த மாஸ்டரிடம் இண்டர்காமில் தகவல் சொன்னார். அவர் உடனே அவர்களை உள்ளே அனுப்பு என்று கூறினார். காவலாளி அவர்களை பார்த்து உள்ளே மாஸ்டர் இருக்கிறார். நாயும் இருக்கிறது. பார்த்து ஜாக்கிரதையா போங்கள். ஓடாதீர்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார்.
பின்னர் பூங்கொடி முன்னே செல்ல கண்ணாயிரம் அவர் பின்னால் பதுங்கி பதுங்கி சென்றார். அப்போது காவலுக்கு நின்ற நாய் ஒன்று வேகமாக ஓடிவந்தது. அதை பார்த்ததும் கண்ணாயிரத்துக்கு உடம்பு படபடத்தது. பூங்கொடி அவரிடம் ம்..பயப்படாதீங்க…ஓடாதீங்க..நான் பாத்துக்கிறேன் என்றார். நாய் ஓடிவருவதை கண்டதும் பூங்கொடி..கையை காட்டி நில்லு…எல்லாம் நம்ம ஆளுதான்…அப்படியே நில்லு…என்றார். ஓடிவந்த நாய் அப்படியே பூங்கொடியின் குரலுக்கு கட்டுப்பட்டு தூரத்தில் அப்படியே நின்றது.
நாக்கை தொங்கவிட்டபடி கண்ணாயிரத்தையே பார்த்தது.கண்ணாயிரம் கண்களை உருட்டினார்.ஏங்க…நாயை ஏன் பயங்காட்டுறீங்க…என்று கண்ணாயிரத்தை பூங்கொடி அதட்டினார். கண்ணாயிரம் உடனே…அது என்ன முறைச்சு பாக்கு என்று குற்றம்சாட்டினார். பேசாம..வாங்க என்று பூங்கொடி அவரை சத்தம் போட்டார். கண்ணாயிரத்தை நாய் முறைப்பதை பார்த்த மாஸ்டர் தன் ஆள்காட்டிவிரலால் ஆணையிட்டு ஜிம்மி இங்கே வா என்றுஅந்த நாயை தன்பக்கம் வரவழைத்தார்.
கண்ணாயிரம் பயந்து நடுங்கியபடி மெல்ல மெல்ல பூங்கொடியின் பின்னால் மாஸ்டர்பக்கம் போனார் மாஸ்டரிடம் பூங்கொடி தன்னை பற்றியும் தனது தந்தை அருவா அமாவாசை பற்றியும் கூறினார். அருவா அமாவாசை என் அருமை நண்பர். அவர்தான் எனக்கு சிலம்பு கற்று கொடுத்தார். இப்போது அவர்எப்படி இருக்கிறார் என்று மாஸ்டர் கேட்டார்.
அவர் நல்லா இருக்கிறார் என்று கூறிய பூங்கொடி தன் கணவரை காட்டி….இவர் என் கணவர் .பெயர் கண்ணாயிரம். எதுக்கெடுத்தாலும் பயப்படுறாரு.ஒரு ரவுடியை நினைச்சு வேற நடுங்குறாரு.அதனால இவருக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்தா கொஞ்சம் தைரியமா இருப்பாரு.சிலம்பம் கற்றுக்கொடுங்க என்றார்.
மாஸ்டர் உடனே கண்ணாயிரத்தை ஏற இறங்க பார்த்தார்.இவர் ரொம்ப பயப்படுறாரா…இவருக்கு நாய்பிடி ஓட்டம் தேர்வு வைக்கமுடியாது. நாயை கண்டாலே ஆடுறாரு. தினம் அவர் இங்கே வந்து சிலம்பம் கற்றுக்கொள்வது கஷ்டம்தான். இதனால என்னபண்ணலாம் என்று மாஸ்டர் யோசித்தார்.
பூங்கொடி அவரிடம் எப்படியாவது சிலம்பம் கற்றுக்கொடுங்கள் என்றார். மாஸ்டர் உடனே…உங்க வீட்டுக்கு வந்து என் சிஷியரை சிலம்பம் கற்றுக்கொடுக்க சொல்லுறன். அவருக்குரிய அமவுண்டை கொடுத்துடுங்க .உங்க வீட்டு முன்னால மைதானம் இருக்கா என்று கேட்டார்.பூங்கொடி …ஆமா ஒரு மைதானம் இருக்கு …என்றார்.
சரி…தினமும் காலையிலே எட்டு மணியிலிருந்து பத்து மணிவரை பயிற்சிவரை பயிற்சி உண்டு. கண்ணாயிரத்துக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்கிறவரை பாக்கிறீங்களா என்று மாஸ்டர் கேட்டார். பூங்கொடி சரி பார்க்கிறோம் என்றார்.
உடனை மாஸ்டர் அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பயில்வான் பலவேசத்தை அழைத்தார். அவர்…கூப்பிட்டிங்களா மாஸ்டர் என்றபடி அங்கு ஓடிவந்து நின்றார். மாஸ்டர் அவரிடம் இவர் பெயர் கண்ணாயிரம்.இவர் வீட்டுக்கு போயி நீங்க தினமும் காலையிலே எட்டு மணியிலிருந்து பத்து மணிவரை சிலம்பம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.சரி மாஸ்டர்…நீங்க சொல்கிறபடி செய்யுறன் என்றார்.
கண்ணாயிரத்தின் உடல் பலத்தை அறிய அவர் முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்தார்.அவ்வளவுதின் கண்ணாயிரம் பொசுக்கென்று கீழே விழுந்தார். பயில்வான் பலவேசம் சிரித்தபடி….கண்ணாயிரத்தின் கையைபிடித்து தூக்கினார்.என்ன இவ்வளவு வீக்கா இருக்கீங்க…தினமும் காலையிலே இரண்டு பச்சமுட்டை சாப்பிடுங்க..உடம்பு ஸ்டிராங்காயிடும் என்றார்.
கண்ணாயிரம்…ஆ..சாதாரணமா முதுகில் தட்டியதே இப்படி இருக்கு…சிலம்பாட்ட பயிற்சி எப்படி இருக்குமோ என்று பயந்தார்.அவரிடம் நாளைக்கே ரெடியா இருங்க. சிலம்பாட்ட பயிற்சியை தொடங்கிடலாம் என்றார் பயில்வான் பவவேசம்.
கண்ணாயிரம் சரி என்று தலையை ஆட்டினார்.மாஸ்டர் அவர்களிடம்….ஒருமாசம் சிலம்பாட்ட பயிற்சி முடிந்ததும் வாங்க என்று அனுப்பிவைத்தார். பயில்வானிடம் கண்ணாயிரம் முதுகில்வாங்கிய அடியின் வலி இருந்ததால் முதுகை தடவியபடியே நடந்தார்.பூங்கொடி அவரை பார்த்து ஏங்க..பயில்வான் ஒரு சின்ன தட்டு தட்டுனாரு…அதுக்கு போயி அம்மாடி ஆத்தாடிங்கிறீங்க…போங்க என்றார்.
அதற்கு கண்ணாயிரம் என் உடம்பு வீக்கா இருக்கு.தினமும் இரண்டு பச்ச முட்டை சாப்பிடச்சொன்னாரே.. பயில்வான்…அது உனக்கு சத்தம் கேட்கலையா…என்றார்.
பூங்கொடி ….ஆமா..ஆமா..கேட்டுச்சு என்று சொன்னார்.உடனே கண்ணாயிரம் மெல்ல….இந்த பயில்வான் பச்ச முட்டை சாப்பிடச்சொன்னாரே…அந்த பச்சமுட்டை எங்கே கிடைக்கும் .இதுக்கு முன்னால நான் அதை பார்த்தது இல்லை என்று பூங்கொடியிடம் கேட்டார். அதைகேட்டதும்..வெள்ளையா இருக்குமே கோழிமுட்டை…அதை நீங்க பார்த்தது இல்லையா என்று பூங்கொடி கேட்டார்.அதற்கு கண்ணாயிரம்…என்ன நீ தப்பா சொல்லுற….கோழி முட்டை வெள்ளையா இருக்கும். பயில்வான் பச்ச முட்டையில்ல குடிக்க சொன்னாரு..அது எங்கே கிடைக்குமுன்னு கேட்க மறந்துட்டேனே…என்றார்.
பூங்கொடி உடனே…கோழி முட்டைதான் பச்சை முட்டைங்க என்று சொன்னார்.ஆனால் கண்ணாயிரம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பச்ச முட்டை…பச்ச முட்டை என்று சொல்லியபடி நடந்தார். பூங்கொடி அவரிடம் நாளைக்கு பயில்வான் வருவாரில்ல…அவரிடம் கேட்போம் என்றார்.இது கூட தெரியாதா என்று அவர் முதுகில் அடித்தால் என்ன பண்ணுவது..நாளைக்கு மூணு மேல்சட்டை மாட்டிக்கொள்ள வேண்டியதுதான் என்றபடி வீட்டுக்கு நடந்தார். (தொடரும்)
வே.தபசுக்குமார்.புதுவை.