காரில் செம்மரம் கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது
1 min read3 people from Tamil Nadu arrested for smuggling sheep in car
30.7.2022
சித்தூர் அருகே காரில் செம்மரம் கடத்திய தமிழகத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செம்மரம்
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி வாகனங்களில் சித்தூர் வழியாக பெங்களூருவை நோக்கி கடத்தப்படுவதாக, சித்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் சித்தூர் கிராமிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலையா, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா மற்றும் போலீசார் திருப்பதி-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் செர்லோபள்ளி கிராமம் அருகே தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனைச் செய்ய முயன்றனர். காரில் வந்த 4 பேர் கீழே இறங்கி திடீரெனத் தப்பியோடினர். அவர்களை, போலீசார் விரட்டிச் சென்று 3 பேரை பிடித்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார். பிடிபட்டவர்கள் தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா கீரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க வாலிபர், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த வெள்ளம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் (வயது 52), திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தாலுகா லட்சுமிநகர் பகுதியைச் சேர்ந்த சச்சின் (20) என்றும், தப்பியோடியவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தாலுகா கவுண்டபுதூர் கிராமத்தைச் சேர்ந்த காது என்றும் கூறினர். அவர்கள் வந்த காரில் சோதனைச் செய்தபோது, அதில் 25 செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. அவர்கள் பெங்களூரு கடிகனஹள்ளி பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் மூலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதிக்குச் சென்று, அங்குள்ள செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றி பெங்களூருவுக்கு கடத்தி செல்வதாகத் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்துல்லாவை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து சித்தூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.