மசூதியில் நடந்த தீமிதி திருவிழா; இந்துக்களும் பங்கேற்பு
1 min read
Dimithi festival celebrated jointly by Hindus and Muslims
8.8.2022
விழுப்புரம் அருகே மசூதியில் நடந்த தீமிதி திருவிழாவில் இந்துக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திமிதி விழா
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது மரகதபுரம் என்ற கிராமம். இந்த ஊரில் உள்ள மசூதியில் நேற்று இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மசூதியை சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு 11.30 மணியளவில் மசூதியின் உள்ளே முஸ்லிம்களும், அய்யப்ப பக்தர்களும் மாலை அணிந்தபடி வெற்றிலை, பாக்கு, ஊதுவர்த்திகள் ஆகியவற்றை வைத்து சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டனர்.
பின்னர் இரவு 11.45 மணியளவில் முஸ்லிம்கள் மேளதாளம் முழங்க அருகில் உள்ள தென்பெண்ணையாற்றுக்கு சென்று புனித நீராடிவிட்டு மீண்டும் மசூதிக்கு வந்தனர். இதனை தொடர்ந்து மசூதி முன்பு இருந்த தீக்குண்டத்தில் நள்ளிரவு 12.15 மணியளவில் முஸ்லிம் பெரியவர் ஒருவர் இறங்கினார். அப்போது அவருக்கு வலதுபுறம் இந்து மதத்தை சேர்ந்த ஒருவரும், இடதுபுறம் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரும் அவருடன் தீக்குண்டத்தில் இறங்கினார்கள். இது அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை உணர்த்துவதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். இவர்களை தொடர்ந்து இரு மதத்தினரும் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
பின்னர் மேள, தாளம் முழங்க மரகதபுரத்தில் உள்ள அனைத்து வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது ஊர் மக்கள் அவர்களது காலில் விழுந்து வணங்கினார்கள்.
இந்த விழாவில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான இந்துக்கள், முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். ஆண்டுதோறும் இந்த விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக மரகதபுரத்தில் நடைபெறும். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எப்படி விரதமிருந்து கோவிலுக்கு செல்கிறார்களோ அதுபோல் இந்த விழாவில் பங்கேற்ற இந்துக்களும், முஸ்லிம்களும் 10 நாட்கள் விரதமிருந்து கலந்துகொண்டனர். பெண்கள் நேர்த்திக்கடன் விழாவில் பங்கேற்ற இரு மதத்தை சேர்ந்த பெண்களும், தென்பெண்ணையாற்றில் புனித நீராடிவிட்டு ஈரச்சேலையுடன் மசூதிக்கு வந்து தீக்குண்டத்தின் ஓரமாக அமர்ந்திருந்தனர்.
இதனை தொடர்ந்து முஸ்லிம் பெண் ஒருவர் ஜல்லிக்கரண்டியுடன் தீக்குண்டத்திற்கு வந்தார். அப்போது குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் நீராடி, ஈரச்சேலையுடன் முந்தானையால் தலையை மூடிக்கொண்டு அவர் முன் மண்டியிட்டு நின்றனர். உடனே அந்த பெண், தீக்குண்டத்தில் இருந்த நெருப்பு துண்டுகளை ஜல்லிக்கரண்டியால் அள்ளி அந்த பெண்களின் முந்தானைமேல் 3 முறை கொட்டினார். குழந்தை இல்லாத பெண்கள் தங்களது முந்தானைகளில் அந்த நெருப்பு துண்டுகளை ஏந்திச்சென்றால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.