நாடாளுமன்ற மக்களவையில் மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல்
1 min read
Electricity Act Amendment Bill tabled in Lok Sabha
8.8.2022
நாடாளுமன்ற மக்களவையில் மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மின்சார திருத்த மசோதா
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பல நாட்கள் நாடாளுமன்றம் முடங்கியிருந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு இன்றுமீண்டும் கூடியது.
இன்றுநாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை மின்துறை மந்திரி ஆர்.கே. சிங் தாக்கல் செய்தார்.
இதற்கு தி.மு.க.,காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் மின்சார சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மக்களின் கருத்து
மின்சாரச் சட்டம் 2003இல் பல முக்கிய திருத்தங்களைச் செய்து புதிய திருத்தச் சட்ட வரைவை கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மக்களின் கருத்திற்காக மத்திய அரசு வெளியிட்டது. இந்த திருத்தப்பட்ட மசோதாவில், மாநில மின்வாரியங்ளுக்கு பதிலாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதனிடம் அனுமதி பெற்று மின் விநியோகத்தில் நேரடியாக தனியார் நிறுவனம் ஈடுபடலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் மக்களுக்கு அளித்து வரும் இலவச மின்சாரம் உள்ளிட்ட மானியங்களை நேரடியாக மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தவும் இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மசோதாவின்படி, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடமே ஏகபோக உரிமை இருக்கும் என்பதால், அது மாநிலங்களில் உரிமையை பறிக்கும் செயல் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஆர்ப்பாட்டம்
இந்த சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடிவடிக்கை குழு சார்பில் இன்றுதமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.