June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜெய்பீம் திரைப்பட விவகாரம்: நடிகர் சூர்யா மீது பதிவான வழக்கு ரத்து

1 min read

Jaibeem movie case: Case filed against actor Suriya quashed

11/8/2022
ஜெய்பீம் திரைப்படம் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வேளச்சேரி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னைஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஜெய்பீம்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்த படத்தில் வன்னியர் சமூக மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக்கூறி படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை கோர்ட்டு, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில் சூர்யா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டது. இதன்படி, வேளச்சேரி போலீசார் நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும் இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், தங்களுக்கு எதிராக புகார் கொடுக்கும் முன்பாகவே ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு விட்டது. வன்னியர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக்கூற எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரர் தரப்பில், இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *