May 31, 2024

Seithi Saral

Tamil News Channel

குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு

1 min read

Allotment of government house to Kumari Ananthan

27.9.2022
குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை, குமரி அனந்தன், கன்னியா குமரி மாவட்டம், குமரி மங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரி கிருட்டிணன்-தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19-ஆம் நாளன்று பிறந்தவர். பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர்-காங்கிரசுப் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர், ஓய்வறியாத உயரியத் தொண்டர், மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டதோடு, இலக்கியச் செல்வராகவும், மேடை மன்னராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் மிளிர்பவர் அன்பில் சிறந்த குமரி அனந்தன் அவர்கள். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் அரும் பணியாற்றியவர். தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்து வரும் அவர், தான் வாழ்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், அவரது கோரிக்கையினைக் கனிவுடன் ஏற்று, அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்து உள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில், வீடு வழங்கி, அதற்கான ஆணையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இலக்கியச் செல்வர் குமரி அனந்தனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹிதேஷ்குமார் எஸ். மக்வானா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந.அருள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.