தென்காசியில் குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்த முயற்சி- ஆட்சியரிடம கம்யூனிஸ்ட் புகார்
1 min read
Attempt to dispose of drinking water tank in Tenkasi-Communist complaint to Collector
31.5.2024
தென்காசி வடக்கு மாசி வீதியில் பல வருடங்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகிற குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்த முயற்சிப்பதை தடுத்து நிறுத்திடவும், புதிய சின்டெக்ஸ் டேங்க் கட்டுமானப் பணியை நிறுத்தி அப்புறப்படுத்திட கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட்) விடுதலை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவினை அளித்தனர்
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது ;-
தென்காசி நகராட்சி வடக்கு மாசி வீதியில் தற்போது நல்ல நிலையிலும் பொது மக்களுக்கும், அந்தப் பகுதி மக்களுக்கும் பல வருடங்களாக தேவையான குடிநீர் பற்றாக்குறையை போக்கி அந்தப் பகுதி மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் தேவையான நீர் ஆதாரத்தை பூர்த்தி செய்து கொண்டிருக்கிற நீர்த்தேக்க தொட்டியை ஒரு தனி நபரின் நலனுக்காக தனி நபர் தூண்டுதலின் பேரில் அப்புறப்படுத்த முயற்சி நடப்பதாக செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் கவலையும் கொண்டுள்ளோம் என்பதை தங்களது கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
இந்நிலையில் பீட்டர் அல்போன்ஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது அந்த நீர் தேக்க தொட்டி உருவாக்கப்பட்டு இன்றளவும் அந்தப் பகுதியில் குறைந்தபட்சம் 500 குடும்பங்களும், வியாபார பெருமக்களும் பயன் அடைந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் புதிய நீர்த்தேக்க தொட்டியினை ஏற்படுத்துகிறோம் என்ற நோக்கத்தில் அருகில் இருந்த பன்னீர் மரத்தை எவ்வித அனுமதியில்லாமல் வெட்டி புதிய சின்டெக்ஸ் டேங்க் அமைத்திட கட்டுமான பணிகள் நடை பெறுகிறது. இது அரசின் பணத்தை விரயம் செய்யக் கூடிய ஏற்பாடாக உள்ளது. அந்த சம்பந்தப்பட்ட நீர் தேக்க தொட்டியின் அருகில் இருந்த பன்னீர் பூ மரம் வெட்டப்பட்டதற்கான காரணம், வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் புதிய சின்டெக்ஸ் டேங்க் கட்டுமான பணியை நிறுத்தி அப்புறப் படுத்திடவும் ஏற்கனவே உள்ள தண்ணீர் தொட்டியை தொடர்ந்து மக்கள் பயன்பாட்டிற்கு விடவும் தேவையற்ற மக்கள் போராட்டத்திற்கு எங்களை இழுத்துச் செல்லாமல் இருந்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சி பி ஐ எம் எல் மாவட்ட செயலாளர் புதியவன் என்ற சுப்ரமணியன், 30வது வார்டு காங்கிரஸ் ஆறுமுகம், ஆகியோர் அளித்தனர்.