May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆராய்ச்சிக்கு தாமிரபரணி தண்ணீர்பிடித்த கண்ணாயிரம்/நகைச்சுவை கதை/தபசுகுமார்

1 min read

Tamiraparani watershed Kannayiram for research/Comedy story/Tapasukumar

25.11.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்லும் வழியில் மதுரையிலிருந்து நெல்லை சென்றார். நெல்லை பழைய பஸ்நிலையம் அருகே பஸ் நின்றபோது கண்ணாயிரம் அவரது மனைவி பூங்கொடிமற்றும் சுடிதார் சுதா உள்பட அனைவரும் தாமரபரணி ஆற்றில் குளிக்க சென்றார்கள். கண்ணாயிரம் தாமரைபரணியா…தாமரபரணியா என்ற சந்தேகத்தை எழுப்ப சுடிதார்சுதா தலையிட்டு தாமரைபரணியல்ல இது தாமிரபரணி ஆறு.தாமிரம் கலந்த இந்த ஆற்றில் தொடர்ந்து குளித்தால் முகம் பளபளப்பாக மாறும் என்று கூறினார்.
அதை கேட்ட கண்ணாயிரம் அப்படியா…எனக்கு ஜலதோஷம் என்பதால் குளிக்கமுடியாது. ஆனா ஆற்றிலே இறங்கி முகத்தை கழுவுவேன்..அது பளபளப்பாகிடுமுல்ல என்று நினைத்தார். மற்றவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது கண்ணாயிரம் தனியாக ஆற்றில் இறங்கி முகத்தை கழுவ நினைத்தார்.நடு ஆற்றில் தண்ணீர் சுத்தமாக இருக்கும் என்று எண்ணி ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றார்.
அப்போது காலில் மீன் கடிக்க..ஆ..என்று கத்தினார். அதைப்பார்த்த துபாய்க்காரர்…ஏய் அங்கே ஏய்யா போன..பள்ளம் கிள்ளம் கிடக்கும்..முங்கிறப்போற..இங்கே வாய்யா என்று கத்தினார். கண்ணாயிரம்..பள்ளம் கிள்ளம் இல்லை..ஏதோ கடிக்குது என்று சொல்ல…துபாய்க்காரர்..யோவ்..ஏதாவது தண்ணிபாம்பு கிடக்கப்போவுது என்று கத்த கண்ணாயிரம் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார்.
என்னய்யா..ஒரு ஆத்துல முகத்தை கூட நல்லா கழுவமுடியலையே என்று முணங்கினார்.போகும் போது பக்கெட்டில் தண்ணி கொண்டு போகணும்..அப்ப அப்ப முகத்தை கழுவிடணும்…என்று முடிவெடுத்தார்.
அப்போது பயில்வான் அங்கே வந்தார்.என்ன கண்ணாயிரம் குளிக்கலையா என்று கேட்க கண்ணாயிரமோ..அதை ஏன் கேட்கிறீங்க…ஜலதோஸம் போகமாட்டேங்குது. அதனால பூங்கொடி என்னை குளிக்கவேண்டாமுன்னுட்டா..அதான் வெளியே நிக்கேன் என்றார். சரி..சரி..ஆத்துக்கு நடுவிலே ஏன் போனிய என்று பயில்வான் கேட்க தண்ணியிலே தாமிரம் இருக்குல்ல..அந்த தண்ணியிலே முகம் கழுவினா பளபளபப்பாயிருமுல்ல என்று கேட்டார்.
பயில்வானும்..ஆமா..ஆமா என்று சொல்ல கண்ணாயிரம் மெல்ல..நானும் ஆத்துல நடுவிலே போய்பார்த்தேன்..தண்ணியிலே தாமிரம் ஒண்ணும் தெரியலையே என்று சந்தேகத்துடன் கேட்டார்.

இது என்ன வம்பா போச்சு..எப்படியாவது சமாளிக்கணுமே என்று நினைத்த பயில்வான்..ஆமா..ஆமா..உங்க சந்தேகம் நியாயமானதுதான். இங்கே பாருங்க..கடல் தண்ணி உப்பா இருக்கு…ஆனா கண்ணுக்கு உப்பு தெரியுதா..தெரியாது.அதற்காக உப்பு இல்லைன்னு அர்த்தமா.. கடல் தண்ணி யை வாயாக்கால் கட்டி தேக்கிவைச்சா.. நாளைடைவில் அந்த தண்ணி வற்றி உப்பு கிடைக்கும்.சரியா என்றார்.
உடனே கண்ணாயிரம் அப்போ தாமிரபரணி தண்ணியை வாய்க்கால்கட்டி பாய்ச்சினா தாமிரம் கிடைக்கும் இல்லையா என்க பயில்வான்…ஆமா…ஆமா என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்.

பெண்கள் பகுதியில் சுடிதார் சுதா சுடிதாரில் ஆற்றில் நீச்சல் அடித்து உற்சாகமாக குளித்தார். பூங்கொடி ஆற்றங்கரையிலே முங்கி முங்கி குளித்தபடி..வெளியூரிலே தண்ணி எப்படி இருக்குமுன்னு யாருக்கு தெரியும். இந்த சுடிதார்சுதாவுக்கு பயமே கிடையாது..அதுவாட்டுக்கு நீச்சல் அடித்து குளிக்கிறா.. ஒரு அடக்க ஒடுக்கமே கிடையாது என்று மனதுக்குள் ஏசினார்.
இளைஞர்கள் அவர்கள் பகுதியில் முங்கு நீச்சலில் சென்று ஒருவர் காலை ஒருவர் பிடித்தபடி விளையாடினார்கள். திடீரேன்று ஒருகொலுசு கால் தென்பட..அதிர்ச்சியில் மேல தண்ணியிலிருந்து எழுந்தனர். யாரது..நம்ம பக்கம் என்றபோது..பே..என்றபடி சுடிதார்சுதா எழுந்தார்.
இளைஞர்கள் பயந்துபோய் ஏங்க இப்படி பயம்காட்டுறீங்க..உங்க இடத்தைவிட்டு இங்கே வந்தீங்க என்று சத்தம்போட்டனர். அவள் அதைப் பற்றிகவலைப்படாமல்..ஏங்க..இதுக்கே பயப்படுறுங்க…நான் ஆத்துல நூறு எண்ணும் மட்டும் மூச்சை அடக்கி இருப்பேன் தெரியுமா..என்றாள்.
இளைஞர்கள்..அய்யோ..அந்த விளையாட்டெல்லாம் இங்கே வேண்டாம்..பேசாம உங்க இடத்திலேப்போயி குளிங்க..இது இளைஞர்கள் இடம்..போங்க..போங்க என்றனர்.
சுடிதார்சுதா..ஏன் இப்படி பயப்படுறுங்க…நான் இப்போ முங்கிறேன்…எண்ணுங்க என்றபடி சுடிதார்சுதா ஆற்றில் மூச்சடக்கி பதுங்கிக்கொண்டார்.
: இளைஞர்களும் ஒண்ணு இரண்டு என்று எண்ணத்தொடங்கினார்கள்.தண்ணீரிலிருந்து நீர்குமிளி வந்துகொண்டிருந்தது.நாப்பது ஐம்பது அறுபது எழுபது என்று எண்ணியவர்கள் தொண்ணூரை நெருங்கியபோது தண்ணுரிலிருந்து நீர்குமிளி வராததால் இளைஞர்களை அச்சம் சூழ்ந்தது. என்னாச்சு என்றவர்கள் நூறு எண்ணிமுடிந்தவுடன் சுடிதார் சுதா எழுந்துவருவார் என்று ஆற்றை வெறித்துப்பார்த்தனர். அவர் வரவில்லை.பதட்டத்துடன் தண்ணீரில் மூழ்கி தேடினர். சுடிதார்சுதாவை காணவில்லை.
பயத்துடன் கரைக்கு ஓடிவந்து..சுடிதார்சுதாவை காணவில்லை என்று கத்தினர். கண்ணாயிரம்.என்ன ஆச்சு..நாம ஒழுங்காத்தானே இருக்கோம் என்று தன்னைத்தானே பார்த்துக்கொண்டார். சுடிதாரை காணமா..சுதாவை காணமா என்று கேட்க..அடபோய்யா..சுடிதார்சுதாவை காணோம் என்று கண்ணாயிரத்தை இளைஞர்கள் திட்டினர். பெண்கள் என்ன சுடிதார்சுதாவை காணமா தேடுங்க..தண்ணியிலே இல்லையா..அது ஒரு துடுக்கான புள்ள..எங்கே போச்சோ..என்று அங்கும் இங்கும் தேடினர்.
நான் அப்பவே சொன்னேன்..இந்த சுடிதார்சுதா ஆத்துல மூங்கு நீச்சலிலே அங்கும் இங்கும் போனா…யாரு சொல்லை அவா கேட்பா..என் வீட்டுகாகாரரை பாருங்க..குளிக்காதீங்கன்னு சொன்னேன்..குளிக்கல..முகத்தை கழுவிட்டு ஜம்முன்னு நிக்கிறாரு.. சுடிதார் சுதா வுக்கு ஒரு கட்டுப்பாடும் கிடையாது..எங்கே போச்சோ…என்று திட்டினார்.
பயில்வான் அங்கு வந்தார்..என்ன சுடிதார் சுதாவை காணமா..அது தைரியமான பொண்ணாச்சே…எல்லோரும் சுடிதார்சுதான்னு சத்தம்போட்டு கூப்பிடுங்க என்றார்.
பூங்கொடியும் கண்ணாயிரத்தையும் தவிர அனைவரும் சத்தம்போட்டு கூப்பிட்டார்கள். எந்த பதிலும் இல்லை. பயில்வான் உடனே பூஙாகொடியை பார்த்து நீங்க கூப்பிடுங்க என்க பூங்கொடி கோபத்தில்..ஏய் கழுதை எங்கே இருக்க ஓடிவா என்க கழுதை ஒன்று கத்தியபடி ஓடிவர..பூஙாகொடி..கழுதை கடிக்க வருது..கடிக்கவருது ஓதுங்கிக்க..நீ ஏன் கழுதையை கூப்பிட்ட என்று கண்ணாயிரம் கண்டிக்க..அனைவரூம் சிரித்தனர்.
பூங்கொடியோ..இந்த கழுதையை நான் கூப்பிடல…அந்த கழுதையைத்தான் கூப்பிட்டேன்..என்றார்.
உடனே பயில்வான் கண்ணாயிரத்தைப் பார்த்து..ஏங்க நீங்க..சுடிதார்சுதாவை கூப்பிடுங்க என்க கண்ணாயிரம் பூங்கொடியைப் பார்த்தார். பூங்கொடியோ ..கூப்பிட்டுத்தொலைங்க என்றார்.
கண்ணாயிரம் குரல் சரியாக வராத நிலையில் பூங்கொடி..பூங்கொடி என்க..பயில்வான் கோபத்துடன் கண்ணாயிரம்…உங்க மனைவியை கூப்பிடாதீங்க..சுடிதார்சுதாவை கூப்பிடுங்க என்க கண்ணாயிரம் தொண்டையை சரி செய்துகொண்டு..ஆமா..தப்பாசொல்லிட்டேன்..இனி சரியா கூப்பிடுறேன்..என்றபடி சுடிதார் சுதா சுடிதார் சுதா..சுடிதார் சுதா என்று மூன்று முறை கூப்பிட அந்த சத்தம் கேட்டு முள்புதர் மறைவில் உடைமாற்றிவிட்டு கையில் ஈர சுடிதாருடன் வந்துட்டேன் என்றபடி சுடிதார்சுதா ஓடிவந்தார்.
ஆ..கண்ணாயிரம் குரலுக்குத்தான் தனி மரியாதை இருக்கு என்று பயில்வான்புகழ..கண்ணாயிரம்..ம்..பாராட்டாதீங்க…என்று நெளிந்தார்.
சுடிதார் சுதாவைப்பார்த்த இளைஞர்கள்..என்னங்க..உங்களை காணாம நாங்க ஆடிப்போயிட்டோம்…ஏன் இப்படி காணாம போனீங்க என்று கோபத்தை காட்டினர்.
அவர்களிடம்…கொஞ்ச நேரம் என்னை காணவில்லை என்றவுடன் இப்படி பதட்டமாகிட்டிங்களே..ஒருவேளை நான் நிரந்தரமா…என்று இழுக்க அவரிடம் இளைஞர்கள் அப்படியெல்லாம் சொல்லாதீங்க..உங்க புன்னகை முகத்தை பார்த்துக்கிட்டே இருக்கணூம். அதுதான் எங்க விருப்பம் என்று சொல்ல சூடிதார்சுதா கலகலகலன்னு சிரித்தார்.
கண்ணாயிரம் தன்பங்குக்கு..ஓ..ஹா..ஹா என்று சிரிக்க பூங்கொடி அவர்கையை பிடித்து கிள்ளினார்.: கண்ணாயிரம் நிலைமையை உணர்ந்து அமைதியானார்.
இளைஞர்கள் சுடிதார்சுதாவிடம் எங்கே போனிங்க..என்று கேட்க நான் முங்கு நீச்சலிலே அந்தப்பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் வந்துட்டேன்..நீங்க அங்கே தேடியபோது இங்கே வந்து முள்புதருகாகுளா சென்று உடைமாற்றிட்டு வந்தேன். கண்ணாயிரம் கூப்பிட்டவுடன் ஓடிவந்தேன் என்று சொல்ல இளைஞராகள் பேருமூச்சுவிட்டனர்.
சரி எல்லோரூம் குளிச்சாச்சா..கிளம்புங்க என்று பயில்வான் சொல்ல எல்லோரும் புறப்பட்டனர்.
அனைவரும் குறுக்குத்துறை முருகனை வழிபட்டனர்.கண்ணாயிரம் பூங்கொடியிடம் பக்கெட்டை கொடு..தாமிர பரணி தண்ணியை பிடிச்சிட்டுவர்ரேன் என்று சொன்னார். எதுக்குங்க என்று பூங்கொடி கேட்க..கண்ணாயிரம் அவரிடம்..சத்தம் போடாத..தாமிரபரணி தண்ணியிலே தொடர்ந்து முகம் கழுவினா முகம் பளபளன்னு வந்திரும்..அப்புறம் பாத்திரத்தில தண்ணியை ஊத்திவச்சா அது வத்தி தாமிரம் கிடைக்கும்.யாருக்கிட்டேயும் சொல்லாத..ரகசியமா இருக்கட்டும் என்று சொன்னார்.
பூங்கொடி..ம்…என்னமும் பண்ணுங்க…இன்னாங்க பக்கெட்டு என்று கொடுத்தார். கண்ணாயிரம் அதை வாங்கிக்கொண்டு பூங்கொடி போயிடாத..எனக்கு பயமா இருக்கு..நீ என் ஒரு கையை பிடிச்சுக்க..நான் ஒருகையாலே ஆத்து தண்ணிய பக்கெட்டுல பிடிக்கிறேன் என்றார்.
சரி..சீக்கிரம் பிடிங்க என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் பூங்கொடியின் ஒருகையை பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் பக்கெட்டில் ஆத்துத்தண்ணீரை பிடித்தார். அப்போது யாருங்க..தண்ணீரை பிடிக்கிறது என்று ஒரு குரல்வர கண்ணியிரம் அந்த திசையை பயத்துடன் பார்த்தார்.
(தொடரும்)

  • வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.