May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

தாமரை பரணியா.. தாமிரபரணியா..கண்ணாயிரம் சந்தேகம்/நகைச்சுவை கதை /தபசுகுமார்

1 min read

Tamarai Pharanya..Thamiraparanya..Kannayiram Doubt/Comedy Story/Tapaskumar

21.11.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்லும்வழியில் மழையில் நனைந்து மதுரையில் ஜிகர்தண்டா சாப்பிட்டதால் தொண்டை கட்டிக்கொள்ள திருமங்கலத்தில் இறங்கி கிளினிக்குக்கு சென்று நர்சை திணறவைத்து பின்பக்கத்தில் ஊசி குத்துவாங்கிவிட்டு டீகடைக்கு வந்தார். அங்கு பிளாக்சில் வெந்நீர் வாங்கிக்கொண்டு நடந்தார். மருந்துக்கடையில் மாட்டிவிட்ட முககவசம் மற்றும் அங்கு வாங்கிய முககவச பாக்கெட்டுடன் மனைவி பூங்கொடியுடன் பஸ்வந்து ஏறினார். கண்ணாயிரம் முககவசம் அணிந்ததால் கண்ணாயிரத்துக்கு ஏதாவது தொற்றோ என்று நினைத்து அது தங்களிடம் பரவாமல் இருக்க இளைஞர்கள் வாங்கிக்கொடுத்த முககவசத்தை பஸ்சில் டிரைவர் உள்பட அனைவரும் அணிந்திருந்தனர்.
பஸ் அங்கிருந்து புறப்பட்டு சாத்தூர் அருகே நெருங்கியபோது போலீசார் அந்த பஸ்சை நிறுத்தி கள்ளநோட்டு கும்பல் தலைவனை தேடி சோதனையிட்டனர். பஸ்சில் அனைவரும் முககவசம் அணிந்திருந்ததால் ஏதாவது தொற்று பரவிவிடும் என்று பயந்து சோதனையை நிறுத்திவிட்டு பஸ்சைவிட்டு வேகமாக இறங்கி ரைட்டு ரைட்டு போகட்டும் என்று அனுப்பிவைத்தனர். சுடிதார் சுதா ஆச்சர்யத்துடன் எல்லாம் கண்ணாயிரம்தான் காரணம். அவர் முககவசம் அணிந்ததால்தான் நாம எல்லோரும் முககவசம் அணிந்தோம்.அதைப்பாத்து பயந்து போலீஸ்காரர்கள் சோதனைபோடாம அனுப்பிட்டாங்க…கண்ணாயிரம் எது செஞ்சாலும் நன்மையாகத்தான் இருக்கு என்று புகழ்ந்தார்.
கண்ணாயிரம் முககவசத்துக்குள் பூங்கொடிக்கு தெரியாமல் சிரித்துக்கொண்டார். பூங்கொடி .என்ன ..சிரிப்பு வாழுது..இந்தாங்க..மாத்திரை சாப்பிடுங்க என்று ஒரு மாத்திரையை பிய்த்துக்கொடுத்தார். கண்ணாயிரம் முககவசத்தை சற்றுவிலக்கிவிட்டு மாத்திரையை வாங்கி முழுங்கியவர்…ஆ..என்ன கசப்பு கசக்குது..என்று முணங்கினார்.
பூங்கொடி..ஏங்க..மாத்திரை கசக்காம இனிக்கவா செய்யும்.வெந்நியை குடிங்க…உங்க குரல் இன்னும்மாறல என்று வெந்நீரை கொடுத்தார். கண்ணாயிரம் கொஞ்சம் முககவசத்தை ஒதுக்கிவிட்டு பிளாஸ்கில் இருந்த வெந்நீரை ஒரு மடக்கு குடித்தார்.ஆ…சூடு…நாக்கு பொத்துப்போச்சு..ஆத்தலையா..ஆஎன்று மெல்லிய குரலில் கத்தினார். பூங்கொடி..ம்.சூடா குடிங்க அப்பதான் தொண்டை திறக்கும்…என்று அதட்டினார். கண்ணாயிரம் மாத்திரை சாப்பிடும் அழகை அனைவரும் பார்த்து ரசித்தனர்.
சுடிதார்சுதா பயில்வானை பார்த்து பஸ் இப்போ எங்கே வந்திருக்கு என்று கேட்க சாத்தூரை நெருங்கிக்கிட்டு இருக்கோம் என்றார். உடனே சுடிதார் சுதா உற்சாகமாக..சாத்தூரா…அந்த ஊர் சேவு ரொம்ப ருசியா இருக்கும்.அடுத்து கோவில்பட்டிவரும்.அந்த ஊர் கடலைமிட்டாய்க்கு பேமஸ்.ரொம்ப நல்லா இருக்கும் என்றார்.
அதைக்கேட்டதும் கண்ணாயிரம்..ஆ எனக்கு சேவு…எனக்கு கடலைமிட்டாய் என்று சிணுங்கினார். பூங்கொடி கோபத்தில் ஏங்க ஏற்கனவே சாப்பிட்டதே சரியாகல..மாத்திரை சாப்பிடுறீங்க…இதுல வேற சேவு கடலைமிட்டாய்..வாயைப்பொத்திக்கிக்கிட்டு இருங்க என்றார். கண்ணாயிரம் கப்சிப் ஆனார்.
பயில்வான் சுடிதார்சுதாவிடம் ஏற்கனவே நேரமாகிட்டு பஸ் பைபாஸ்சிலே போகும்..அப்பதான் சீக்கிரம் நெல்லைக்கு போகலாம். அங்கு தாமரபரணியில் குளிச்சிட்டு ..சாப்பிடலாம் என்றார்.
தாமரை பரணி குளியல் என்றதும்..சுடிதார்சுதா மனம் குளிர்ந்தது.ஆமா..சீக்கிரம் நெல்லை செல்வோம்..தாமர பரணியிலே ஒரு குளியல்போட்டா…உற்சாகமாக இருக்கும் என்று சொல்ல பயில்வானும் ஆமா..ஆமா என்றார்.
கண்ணாயிரம் உடம்பை பூங்கொடி தொட்டுப்பார்த்தார். கொதித்தது.ஆ..காய்சல் வேறு அடிக்குது..நீங்க தாமர பரணியிலே குளிக்கமுடியாது..வெளியிலே நின்னு வேடிக்கை பாருங்க என்று சொல்ல கண்ணாயிரம் வேதனையில் இருமினார்.
அதைப்பார்த்த பூங்கொடி…ம் கோபப்படாதுங்க…எல்லாம் உங்க நன்மைக்குத்தான் சொல்லுறேன்…குற்றாலம்போயி நல்லா குளிக்கலாம் சரியா என்று சமாதானப்படுத்தினார். கண்ணாயிரம் சமாதானம் ஆகாமல் ஆ..ஊ..என்று கத்தினார். இருமல் அதிகமாக..ஆச்..ஆச்..ஆச்..ஆச் என்று தும்ம எல்லோரும் பயந்துபோய் முககவத்தை சரிசெய்துகொண்டனர். பூங்கொடி ஆத்திரத்தில்..ம்..பாருங்க..இன்னும் தும்மலே குறையல..டானிக் குடிங்க என்று டானிக்பாட்டிலை திறந்து குடிக்கக்கொடுத்தார்.ம்..டானிக்குடிச்சா..தும்மல் குறைஞ்சிடுமா என்று கேட்டவாறு ஒரு மடக்கு குடித்தவர் டானிக் இனிக்கத்தான் செய்யுது.. இன்னொரு மடக்கு குடிக்கட்டுமா என்று கேட்க..பூங்கொடி அந்த பாட்டிலைபிடுங்கி கீழேவைத்தார்.ம்..கொஞ்சம் வெந்நி குடிங்க..உங்களோட..எனக்கு மல்லுக்கட்டமுடியாது என்று பிளாஸ்கை நீட்ட கண்ணாயிரம் வாங்கி குடிக்கமுயன்றபோது பஸ் ஒரு திருப்பத்தில் வேகமாக திரும்பியது. கண்ணாயிரம் நிலைதடுமாற பிளாஸ்கிலிருந்த வெந்நீர் சிந்த சூடுதாங்காமல் கண்ணாயிரம் கத்த..பாத்து குடிக்கவேண்டியதுதானே என்று பூங்கொடி பதிலுக்கு கத்த டம்ளரில் ஊத்திக்கொடு என்று கண்ணாயிரம் சொன்னார். உடனை பூங்கொடி ஒரு டம்ளரை எடுத்து வெந்நீரை ஊற்றிக்கொடுக்க..கண்ணாயிரம்..ஊ..ஊ..ஊ..என்று ஊதி வெந்நீரை குடித்தார். அப்பாட…இப்பத்தான் குடிச்சமாதிரி இருக்கு என்றபடி மீதி வெந்நீரையும் குடித்து முடித்தார்.ம்..சீக்கிரம் காய்சாசல்விட்டுறும் என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டார்.
பஸ் சாத்தூரைத்தாண்டி கோவில்பட்டியை நோக்கி மின்னல் வேகத்தில் சென்றது.
டானிக் குடித்ததால் கண்ணாயிரத்துக்கு தூக்கம் கண்களை தழுவ..ஆ..ஊ..என்று முககவசத்துக்குள் கொட்டாவி விட்டவர் பஸ்சில் சாய்ந்துபடுத்துக்கொண்டார்.சரி..கொஞ்சம் தூங்குங்க..நெல்லை வந்ததும் எழுப்புறேன் என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம்..ம்..என்று ஒற்றைக்குரல் எழுப்பிவிட்டு சுருண்டுபடுத்துக்கொண்டார்.
பஸ் கோவில்பட்டியைத் தாண்டி கயத்தாறை நோக்கிவிரைந்தது.சுடிதார்சுதா பயில்வானிடம் அடுத்து எந்த ஊர்வருது என்று கேட்க..வெள்ளையராகளை எதிர்த்து போரிட்ட வீரபாண்டியகட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறு வருகிறது…என்று பயில்வான் சொன்னார்.
பஸ் கயத்தாறு வந்ததும் அங்கிருந்த வீரபாண்டிய கட்டப்பொம்மன் சிலையை எட்டிப்பார்த்து வீரவணக்கம் செலுத்தியவாறு இருந்தனர்.இதை அறியாமல் கண்ணாயிரம் குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
கண்ணாயிரத்தை பூங்கொடி எழவைக்க முயற்சி செய்ய அவர் சுருண்டு படுத்துக்கொண்டார். சிறிது நின்ற பஸ் மீண்டும் வேகமாக சென்றது.கண்ணயிரம் எழவில்லை.ம்..பிறகு கட்டப்பொம்மன் சிலையை ஏன் காட்டலைன்னு கேட்கக்கூடாது…சரியா என்று பூங்கொடி சொன்னார்.
பயில்வான் அவரிடம் கண்ணாயிரத்துக்கு கட்டப்பொம்மன் ரொம்ப பிடிக்குமா என்று கேட்க..அதை ஏன் கேட்கிறீங்க… அவரு பெரிய சிவாஜி ரசிகர்… கரண்டியை தூக்கிவச்சிக்கிட்டு..வானம் பொழிகிறது பூமிவிழைகிறது.உனக்கேன் கொடுப்பது கிஸ்தி..நீ மாமனா..மச்சானா..மானங்கெட்டவனே..யாரைப்பார்த்து கேட்கிறாய்வரி..யாரைப்பார்த்து கேட்கிறாய் கிஸ்தி என்று வசனம் பேசத்தொடங்கிவிடுவார்.
ஒரு முறை ஒரு அதிகாரி வீட்டுவரி வசூலிக்க வந்திருப்பது தெரியாமல் அவர் மானங்கெட்டவனே யாரைப்பார்த்து கேட்கிறாய்வரி என்று பேசிப்புட்டாரு.அப்புறம் தெரியாம பேசிப்புட்டாருன்னு அந்த அதிகாரியை சமாதானப்படுத்தி வரியை கொடுத்து அனுப்புமுன்னால படாதபாடு பட்டுட்டேன்…இப்போ டானிக்குடித்த மயக்கத்திலே இருக்காரு என்றார்.
பயில்வான் சிரித்தவாறு கண்ணாயிரத்தை பார்த்தார்.பஸ் கயத்தாறை தாண்டி தாழையூத்தை நெருங்கியது. சிமெண்டு தொழிற்சாலை இருப்பதை பார்த்தபடி அனைவரும் நெல்லை எப்போது வரும் என்று காத்திருந்தனர். பஸ் உற்சாகமாக காற்றை கிழித்துக்கொண்டு நெல்லையை நோக்கி சீறிப்பாய்ந்தது.
கண்ணாயிரம் தூக்கம் கலையவில்லை.பஸ் நெல்லை பழைய பஸ்நிலையம் அருகே வட்டமடித்துவந்து நின்றது. பஸ் ஒரு மணிநேரம் நிக்கும்..தாமரபரணி ஆற்றிலே குளிச்சிட்டு சாப்பிட்டுவாங்க..என்று பயில்வான் சொல்ல அனைவரும் இறங்க தயாரானார்கள். கண்ணாயிரத்தை பூங்கொடி உசுப்பினாள். அவர் அசையவில்லை. பூங்கொடி வெந்நீரை டம்ளரில் ஊற்றி கண்ணாயிரம் கையில் ஒத்தடம் கொடுப்பதுபோல் ஒத்தினார்.சூடு தாங்காமல் கண்ணாயிரம்..ஆ..என்று கத்தியபடி கண்களை திறந்தார்.
குற்றாலம் வந்துட்டா என்று கண்ணாயிரம் கேட்டதும் பூங்கொடி..ம்..கூம்..இப்பத்தான் நெல்லை வந்திருக்கொம்…எழும்புங்க என்று அவரது தோளை குலுக்கினார்.கண்ணாயிரம் அப்படியா..நெல்லை வந்தாச்சா..தாமரைபரணியிலே குளிக்கணுமா என்று கேட்டவாறு எழுந்தார்.
ஏங்க..நீங்க குளிக்கக்கூடாது..கைகாலை அலம்பி முகத்தை கழுவுங்க..என்றார் பூங்கொடி.அதைக்கேட்டதும் கண்ணாயிரம்..ம் சரி..ஜோசியரும் தண்ணியிலே கண்டமுன்னு சொல்லியிருக்காரு..ஏற்கனவே தொண்டை சரியில்லே என்றபடி பஸ்சைவிட்டு இறங்கினார். மற்றவர்கள் துண்டு வேட்டி பக்கெட்டுடன் தாமரை பரணியை நோக்கி நடந்தனர்.
சுடிதார்சுதா சுடிதார் மற்றும் துண்டு ஷாம்பு சோப்பு..பக்கெட்டுடன் நடக்க..இளைஞர்கள் அவர் பின்னால் அணிவகுத்து வந்தனர். கண்ணாயிரம் இடுப்பை ஒரு புறம் சாய்த்தப்படி பூங்கொடியுடன் நடந்து சென்றார். குறுக்குத்துறை முருகன் கோவில் அருகே அனைவரும் தாமிரபரணி ஆற்றை நெருங்கினர். தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
கண்ணாயிரம் ஆ..தாமரைபரணி..ஆ தாமரை பரணி என்று கீச் குரலில் சொல்லியவாறு ஆற்றை எட்டிப்பார்த்தார். அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஆற்றையே உற்று உற்றுப்பார்த்தார்.பிறகு அங்கு வந்த பயில்வானிடம் இது என்ன ஆறு என்று கேட்க அவர் தாமரபரணி என்று சொன்னார்.
கண்ணாயிரம் ..ம் நான் நம்பமாட்டேன்..இது தாமரைபரணி ஆறுன்னு சொன்னா..இங்கே ஒரு தாமரையையும் காணமே..என்ன ஏமாத்தப்பாக்கிறீயளா..நான் எவ்வளவு உஷார் தெரியுமா என்று மெல்லிய குரலில் சொன்னார்.
சுடிதார்சுதா அங்கு வந்து என்னபிரச்சினை என்று கேட்க பயில்வான் விளக்கினார். அதைக்கேட்ட சுடிதார்சுதா சிரித்தபடி இது தாமரைபரணி ஆறு கிடையாது. இது தாமிரபரணி ஆறு போதுமா..அதனால தாமரையைத் தேடக்கூடாது சரியா என்றார்.
கண்ணாயிரம் அதை ஏற்காமல் அது எப்படி சரியாகும்..தாமிரபரணின்னா..தாமிரத்தை எங்கே என்று கேட்டார்.அதைக்கேட்ட சுடிதாராசுதா..ஆ.நீங்க இங்கே இருக்கவேண்டிய ஆளே இல்லை.நீங்க கேட்டது நல்ல கேள்விதான். இந்த ஆற்றுத்தண்ணுரிலே தாமிரசத்து கலந்திருக்கு..இந்த ஆத்துல தொடர்ந்து குளிச்சா நம்ம உடம்பும் பளபளன்னு மின்னும் என்றார்.அப்படியா என்று கேட்ட கண்ணாயிரம் நான்தான் குளிக்கமுடியல..முகத்தை நன்றாக கழுவணும்..பளபளன்னு வந்திடும் என்று நினைத்தார். மற்றவர்கள் குளிப்பதற்கு தயாரானபோது கண்ணாயிரம் கரையில் இருந்தபடி யோசிக்கத்தொடங்கினார். பின்னர் லேசாக கீழே இறங்கி ஆற்றில் முகத்தை கழுவினார். கொஞ்சம் தள்ளிப்போய் முகத்தை கழுவோம் .அங்கேதான் நல்ல தண்ணீர் இருக்கும் என்று அவர் நகர்ந்தபோது காலில் மீன்கடிக்க…ஆஎன்று கத்தினார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.