May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

காமராஜர் சிலை வைக்க இடம் ஒதுக்க கோரி கடையடைப்பு-மறியல்

1 min read

Shop closure- picket demanding space for Kamaraj idol

29.11.2022
ஆலங்குளத்தில் காமராஜர் சிலை வைக்க இடம் ஒதுக்க கோரி கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவ.பத்மநாபன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது.

காமராஜர் சிலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே தென்காசி திருநெல்வேலி சாலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் காமராஜர் சிலையை நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் சிலையை அப்புறப்படுத்த அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். இந்த நிலையில் அதே சிலையை மாற்றிய இடத்தில் வைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது மாற்று இடம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் ஆலங்குளம் பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையடைப்பு போராட்டம்

திருநெல்வேலி – தென்காசி சாலையில் இருந்து வரும் பெருந்தலைவர் காமராஜர் சிலையை 4 வழிச்சாலை விரிவாக்கம் செய்வதற்காக அப்புறப்படுத்தும் வேலையில் அந்தச் சிலையை பாதுகாப்பாக அதே பகுதியில் அம்பை – ஆலங்குளம் சாலையில் வைக்க அனுமதிக்க வேண்டுமென அந்த பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர் ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இடம் ஒதுக்கி தரவில்லை.

இந்நிலையில் காமராஜர் சிலை வைப்பதற்கு ஆலங்குளம் – அம்பாசமுத்திரம் சாலையில் மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கூறி நேற்று ஆலங்குளத்தில் வியாபாரிகள் அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டம் நடத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து காமராஜர் சிலை அருகே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழையில்..

தகவல் அறிந்த ஆலங்குளம் தாசில்தார் ரவீந்திரன், டிஎஸ்பி சுப்பையா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியாளர் தான் எங்களுக்கு பதில் கூற வேண்டும் என கூறி போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.

அப்போது ஆலங்குளம் பகுதியில் பலத்த மழை பெய்தது. ஆனாலும் மழை பெய்த போதும் பொதுமக்கள் நனைந்து கொண்டே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து தென்காசி கோட்டாட்சி தலைவர் கங்கா தேவி, நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் கஸ்தூரி ராணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் அங்கு வந்தனர். பொதுமக்கள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

உறுதி

பேச்சுவார்த்தையின் முடிவில் ஆலங்குளம் – அம்பாசமுத்திரம் சாலையில் பெருந்தலைவர் காமராஜர் சிலை வைப்பதற்கு நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த் துறையினர் இடம் ஒதுக்கி தருவதாக உறுதியளித்ததோடு அந்த இடத்தையும் அளந்து கல் நட்டினார்கள். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி

இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு அதிகாரிகளை வரவழைத்து உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி ஆலங்குளம் – அம்பாசமுத்திரம் சாலையில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை வைப்பதற்கு இடம் பெற்றுத்தந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதனு க்கு அந்த பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.