June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

நட்டா, அண்ணாமலை பரபரப்பு பேச்சு

1 min read

Natta, Annamalai sensational talk

27.12.2022
இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து 25 பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக பொதுக்கூட்டம்

கோவையில் இன்று பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில் கூறியதாவது:-
இந்தியாவில் பிரதமர் மோடி 3-வது முறையாக 400 எம்.பி.க்களுக்கு மேலே பெற்று ஆட்சியில் அமரப்போகிறார். தமிழ்நாடு 2 முறை சிறிய தவறை செய்திருக்கின்றோம். 2014-ல் இங்கிருந்து நாம் பாஜக எம்.பி.க்களை அனுப்ப முடியவில்லை. 2019-ம் ஆண்டிலும் பாஜக எம்.பி.க்களை அனுப்ப முடியவில்லை.
அதனால் தான் நமது கட்சி மிக தைரியமாக கூறுகின்றோம்… இந்த முறை பாஜக கட்சியில் இருந்து 25 எம்.பி.க்களுக்கு மேல் தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள். தமிழுக்கு என்ன செய்ய வேண்டும்… தமிழ்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் துடித்துக்கொண்டிருக்கும்போது நாம் அவருக்கு எம்.பி.யை கொடுக்கும்போது அந்த எம்.பி. மூலமாக நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு நிச்சயம் தெரியும். இப்போதில் இருந்து அடுத்த 16 மாதத்திற்கு செய்ய வேண்டிய ஒரே வேலை நமது பூத்தை பலப்படுத்த வேண்டும். வீடு வீடாக சென்று பாஜகவினர் பிரதமருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று கோட்டைக்கு செல்ல வேண்டும். நம்மை நம்பி தான் ஜேபி நட்டா தனது முதல் பயணமாக இங்கு வந்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.

நட்டா

இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் ஜேபி நட்டா பேசியதாவது:-
தமிழ்நாடு வளர்ச்சியை பொறுத்தவரை 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 4 வழிச்சாலைகள் 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. 8 ரெயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசில் இருந்து நிறைய திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருகின்றன. ஆனால் உங்களிடம் ஒன்றை கூறிக்கொள்ள நினைக்கிறேன்… இந்தியா பாதுகாப்பான கையில் உள்ளது… ஆனால், தமிழ்நாடு பாதுகாப்பான கையில் இல்லை… திமுக மாநில கட்சி அல்ல… அது குடும்ப கட்சி… மாநில உரிமைகளுக்காக அது எதுவும் செய்யவில்லை… மாறாக குடும்பத்திற்கு மட்டுமே செய்கிறது. குடும்பமும் ஒரே ஒரு குடும்பம் தான்…. சகோதர், சகோதரிகள் கிடையாது. ஒரே ஒரு குடும்பம் தான். ஆகையால், அது கருணாநிதி மற்றும் குடும்பத்தினர்.. மேலும் இது திமுக. தி என்பது குடும்ப அரசியல்… மு என்பது பணமோசடி… க என்பது கட்ட பஞ்சாயத்து. தமிழ்நாடு மக்களுக்கு திமுக ஒன்றும் செய்யவில்லை.
உங்களுக்கு சேவை செய்யவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். எங்களை பொறுத்தவரை நாடு முதலில், கட்சி இரண்டாவது, குடும்பம் கடைசி. ஆனால், திமுகவை பொறுத்தவரை குடும்பம் முதல், கட்சி இரண்டாவது, நாடு கடைசி. நாட்டை இணைக்க நாங்கள் (பாஜக) இருக்கிறோம். நாட்டை பிளக்க அவர்கள் (திமுக) இருக்கிறார்கள். எனது கவலை என்னவென்றால் நாடு பாதுகாப்பான கையில் உள்ளது ஆனால் தமிழ்நாடு பாதுகாப்பான கையில் இல்லை. ஆகையால், கையை மாற்றுவது நல்லது.
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *