May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை பயமுறுத்திய ஹாலிங்பெல்/நகைச்சுவை கதை/தபசுகுமார்

1 min read

Hallingbell who scared Kannayira/comedy story/Tapaskumar

29.12.2022
புதுவையிலிருந்து குற்றாலம் புறப்பட்ட கண்ணாயிரம் நெல்லைவந்தார். பின்னர் அங்கிருந்து சுற்றுலா பஸ்சில் இரவில் குற்றாலம் சென்றார். குற்றாலத்தில் அவர் பஸ்சைவிட்டு இறங்கி சூட்கேசுடன் ஓட்டலுக்கு நடந்தபோது அவரது சூட்கேசை குரங்கு ஒன்று பறிக்கமுயன்றது. கண்ணாயிரம் அந்த குரங்கோடு போராடிக்கொண்டிருந்தபோது சுடிதார்சுதா அங்குவந்து வாழைப்பழத்தை நீட்டி குரங்கை திசை திருப்ப குரங்கு சூட்கேசைவிட்டுவிட்டு வாழைப்பழத்தின் மீது தாவியது. அந்த நேரத்தில் கண்ணாயிரத்தை அவரது மனைவி பூங்கொடி காப்பாற்றி ஓட்டலுக்குள் இழுத்துசென்றார்.
ஓட்டலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை கண்டுபிடிக்க கண்ணாயிரமும்பூங்கொடியும் அலைமோதினர். இறுதியில் 66வது நம்பர் அறை கண்ணாயிரத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கண்ணாயிரம் சூட்கேஸ் மற்றும் பொருட்களுடன் அந்த அறைக்குரிய சாவியைவாங்கி திறக்கமுயன்றார். திறக்கவில்லை. பூங்கொடி கோபத்தில்..சாவியை கொடுங்க என்க பூங்கொடி சாவியைவாங்கி திறக்கமுயல திறக்கவில்லை.
என்ன டா இது வம்பா இருக்கு என்று கண்ணாயிரம் கோபத்தில் கத்த ஓட்டல் ஊழியர் அங்கேவந்தார்.
அவசரப்படாதீங்க..கொடுங்க சாவியை என்று கேட்டுவாங்கி சாவியை மெதுவாக உள்ளே அனுப்பி..அண்டாகா கசம் அபுல்கா குசும் திறந்திடும் சீசே என்று கூறியவாறு… சாவியை மேலே திருப்பினார். கதவு திறந்து கொண்டது.
என்ன இது புதுமையா இருக்கு…இந்த மந்திரசாசொல்லை நான் எப்படி நினைவில்வைப்பேன் என்று கண்ணாயிரம் ஏங்கினார்.
ஓட்டல் ஊழியரிடம் அந்த மந்திரச்சொல்லை எனக்கு எழுதிக்கொடுங்க என்று கேட்க..ஓட்டல் ஊழியரோ..அது ரகசியம். .யாருக்கும் சொல்லக்கூடாது..கதவை பூட்டணுமுன்னா கீழேவந்து சொல்லுங்க நாங்க வந்து பூட்டுறோம்…என்றார்.
எல்லா ரூமும் இப்படித்தானா என்று கண்ணாயிரம் கேட்க…இல்லை…இல்லை..இந்த ரூம்தான் அப்படி..ரொம்பநாள் யூஸ்பண்ணாம இருந்த ரூம். அதான் கதவு எளிதில் திறக்கமாட்டேங்குது…மற்றபடி ஒண்ணும் கிடையாது. இரவு ஏதாவது சத்தம் கேட்டா..கீழே தகவல் சொல்லுங்க என்று சாவியை கொடுத்துவிட்டு ஓட்டல் ஊழியர் கீழே ஓடினார்.

இரவு சத்தம் கேட்குமா…என்று கண்ணாயிரம் கேட்பதற்குள் ஓட்டல் ஊழியர் கீழே சென்றுவிட்டார். என்ன பதில் சொல்லாம போறான்…ஆரம்பமே..பயமாக இருக்கு என்றபடி கண்ணாயிரம் விழிபிதுங்க..பூங்கொடி ஏங்க..ஏன் பயப்பிடுறீங்க..இது கடைசி ரூம்..எந்த தொந்தரவும் இருக்காது..சும்மா இருங்க என்றபடி மின்விளக்கை எரியவிட்டார்.
ஆ..ரூம் பளிச்சின்னு இருக்கு…டிவி இருக்கு..பாத்ரூம் இருக்கு..பயமும் இருக்கு என்று கண்ணாயிரம் மனதில் சொல்லிக்கொண்டார். பூங்கொடி தனது டிரங் பெட்டியை வைத்துவிட்டு அறையை சுத்திப்பார்த்தார். ஏங்க..நாம இரண்டுபேருமட்டும் தங்குற ரூம் இது..மற்றவங்களுக்கெல்லாம் பெரிய ரூம்..நாலைந்துபேர் தங்குறாங்க என்றார். அப்படியா என்று கண்ணாயிரம் கன்னத்தில்விரல்வைத்தார். கதவை பூட்டுங்க..கொசுவருது என்று பூங்கொடிகத்த கண்ணாயிரம் வேகமாக சென்று கதவை சாத்தினார்.
ஏங்க கதவை பூட்டாதீங்க..பிறகு திறக்கிறது கஷ்டமாயிடப்போகுது என்று பூங்கொடி எச்சரிக்க கண்ணாயிரம் உஷாரானார்.ஆமா…ஆமா..அதுவும் சரிதான்..பூட்டினா அதை திறக்க மந்திரம் தெரியாது.. அய்ய்யோ அகம்..போய்யாநகம்..என்ன ..சரியாவரமாட்டேங்குது..என்று ஏங்கினார்.
அப்போது இண்டர்காம் ஒலித்தது. பூங்கொடி எடுத்து பேசினார். எதிர்முனையில் பேசியவர் சாப்பாடு என்ன வேணும் என்று கேட்டார். பூங்கொடி பத்து இட்லி பத்து தோசை என்று ஆர்டர் கொடுத்தார். அதைப்பார்த்த கண்ணாயிரம் என்ன பூங்கொடி எல்லாம் பத்து பத்தா ஆர்டர் பண்ணுற..பத்துமா என்று கேட்டார். பூங்கொடி கோபத்தில் ஏன் பத்தாது ஒரு ஆளுக்கு இது பத்தாதா..இதுக்குமேல நான் சாப்பிடமாட்டேன் என்றார். உடனே கண்ணாயிரம்..அப்போ எனக்கு என்று கேட்க உங்களுக்கு இன்னும் உடம்பு சரியாகலை..அதிகம் சாப்பிடக்கூடாது..உங்களுக்கு இரண்டு இட்லி தர்ரேன் என்றார். கண்ணாயிரம்..ஏய்..எனக்கு. உடம்பு சரியாகிவிட்டது..என்மேல கூட வச்சிப்பாரு..காய்ச்சல் அடிக்கலை என்றார்.
பூங்கொடி கைவைத்துபார்த்துவிட்டு..லேசா காய்ச்சல் இருக்குங்க..டானிக் இருக்கு..குடிக்க மறந்திடாதீங்க..என்றார். கண்ணாயிரம் தனது உடம்பு நல்லாயிட்டு என்று சொல்லிப்பார்த்தார். ஆனால் பூங்கொடி கேட்கவில்லை.
உடனே கண்ணாயிரம் உட்கார்ந்து எழுந்து உட்கார்ந்து எழுந்து தன்பலத்தை காட்டினார். பூங்கொடி..சரி..சரி..பலமெல்லாம் சரிதான்…குரங்கு சூட்கேசை இழுத்தாமட்டும் பயப்புடுறீங்க என்று சத்தம்போட்டார். இனிநான் எதற்கும் பயப்படமாட்டேன் என்று கண்ணாயிரம் நெஞ்சை நிமிர்த்தினார்.
அந்த நேரத்தில் ஹாலிங்பெல் ஒலிக்கும் சத்தம் கேட்டது. யாரு என்றபடி கண்ணாயிரம் சாத்திய கதவை தன்பலத்தை பயன்படுத்தி இழுத்து திறந்தார். வாசலில் ஓட்டல் ஊழியர் தோசை இட்லியுடன் நின்று கொண்டிருந்தார். கண்ணாயிரம் வாங்க..வாங்க..என்று வரவேற்று உள்ளே அழைத்தார். மேஜை மீது இட்லி தோசை அடுக்கிய பார்சலை வைத்து பில்லை நீட்டினார்.
பூங்கொடி அதைவாங்கி பார்த்துவிட்டு பணத்தை கொடுத்தார். கண்ணாயிரம் நாக்கில் எச்சில் ஊறியது. ஊழியர் பணத்தைவாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றார். கண்ணாயிரம் வேகமாக…பூங்கொடி தட்டை எடு..தட்டை எடு என்று சொல்ல பூங்கொடி இரண்டு தட்டுகளை கழுவி..எடுத்துவந்தார். கண்ணாயிரத்துக்கு மூன்று இட்லி மற்றும் ஒரு தோசை எடுத்துவைக்க கண்ணாயிரம் கூட ஒண்ணு என்று சொல்ல பூங்கொடி மனம் இரங்கி கூடுதலாக ஒரு தோசைவைத்தார். கண்ணாயிரம் சாம்பாரை ஊற்றி முதலில் தோசையை ருசிப்பார்த்தார். நல்லாயிருக்கு…நல்லா இருக்கு..என்று உச்கொட்டிசாப்பிட்டார். பூங்கொடியும் தட்டில் இட்லியை அடுக்கி சட்னியை தொட்டு தொட்டுசாப்பிட்டார். ஆ..காரம் அதிகம் என்று சொல்லியபடி பிளாக்சிலிருந்த தண்ணீரை குடித்தார். எனக்கும் தண்ணி என்று கண்ணாயிரம் கத்த பிளாக்சை பூங்கொடி நீட்ட கண்ணாயிரம்வாங்கி குடித்தார். எவ்வளவு முயன்று சாப்பிட்டபோதும் மூன்று தோசை மஞ்சிவிட்டது..ம்..இருக்கட்டும் நைட்டு பசிச்சாசாப்பிடலாம் என்றார் பூங்கொடி.

சாப்பிட்டுமுடித்ததும் கைகழுவிவிட்டு இருவரும் அப்பாட…வயிறு நிறைஞ்சபிறகுதான் நிம்மதியா இருக்கு என்றனர். கண்ணாயிரத்துக்கு கொட்டாவி வந்தது.கொஞ்சநேரம்விழிச்சிருங்க…உடனே படுக்காதீங்க என்று பூங்கொடி எச்சரித்தார்…மீதி தோசையை மேஜையில் எடுத்துவைத்த பூங்கொடி படுக்கைமீது போர்வையை விரித்தார். கண்ணாயிரம் எப்போது படுக்கலாம் என்று பூங்கொடியையே எதிர்நோக்கினார். கதவை பூட்டிவிட்டுவந்து படுங்க என்று என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் சாவியை எடுத்துக்கொண்டு பாய்ந்துசென்றவர் பூட்டினா திறக்காம போயிட்டுனா உள்ளேமாட்டிக்குவமே என்று யோசித்தவர் ஒருநிமிடம் தயங்கிநின்றார்.
அவரது தயக்கத்தை உணர்ந்துகொண்ட பூங்கொடி..சரி..சரி..பூட்டவேண்டாம்..லாக்மட்டும் பண்ணுங்க என்றார். லாக்குன்னா என்ன என்று கண்ணாயிரம் யோசிக்க..அந்த கொண்டியை மட்டும் இழுத்துவிடுங்க என்றார் பூங்கொடி.உடனே கண்ணாயிரம் கொண்டியை இழுத்துவிட்டுவிட்டு படுக்கைக்கு வந்தார். பூங்கொடியும் சரி படுங்க என்று கண்ணாயிரத்திடம் சொல்லிவிட்டு விளக்கை அணைத்தார். பூங்கொடி ஒரே இருட்டா இருக்கு..ஒருவிளக்கைபோடு என்று கத்தினார். பூங்கொடி..என்னங்க..விளக்கு ஏரிஞ்சா ஏப்படி தூங்கமுடியும் என்று கேட்டார். கண்ணாயிரமோ தெரியாத இடம்…ஒண்ணுக்கிடக்க ஒண்ணு நடந்திட்டா என்னப்பண்ணுறது .ஏற்கனவே சத்தம் கேட்டா கீழே சொல்லுங்க என்று சொல்லியிருக்காங்க என்று நினைவுபடுத்தினார். பூங்கொடி இரவுவிளக்கை எரியவிட்டார்.
அப்பாட..இப்போதான் நிம்மதியா இருக்கு ..படுத்து தூங்கு என்று பூங்கொடியிடம் கண்ணாயிரம் சொன்னார்.
பூங்கொடியும் படுக்கையில்வந்து படுத்தார்.கண்ணாயிரம் நெஞ்சுமேல்கைவைத்தபடி வாயைபிளந்தவாறு தூங்கத்தொடங்கினார்.சிறிது நேரத்தில் குறட்டைசத்தம் கேட்டது.மணி பனிரெண்டை நெருங்கியது. கண்ணாயிரத்தின் முகத்தை சுற்றி கொசு பறந்தது.கண்ணாயிரம் கண்விழித்துப்பார்த்தார். இது எப்படி வந்தது…ஜன்னலெல்லாம் பூட்டிதானே இருக்கு..பிறகு எப்படி கொசுவந்தது…என்றபடி போர்வைமுகத்தில் மூடி இழுத்துப்போர்த்திப்படுத்தார். அது சின்னப்போர்வை என்பதால் கால்கள் வெளியேதெரிந்தன. கொசுக்கள் கால்களுக்கு படையெடுத்து கண்ணாயிரத்தைக் கடித்தன.ஆ…என்னடா இது..இப்படிவந்து நம்மளகடிக்குது..பூங்கொடி..பூங்கொடி..உன்னை கொசுக்கடிக்குதா…என்று கேட்டார். பூங்கொடியோ..ஏங்க என்னை ஒண்ணும் கடிக்கல..பேசாம தூங்குங்க ..சேட்டைபண்ணுற ஆளைத்தான் கடிக்கும் என்றார். என்ன சேட்டை பண்ணுற ஆளு கொசுவுக்கு எப்படிதெரியும். அது சும்மா..பூங்கொடியை கடிக்காத கொசு..என்னை மட்டும் ஏன் கடிக்குது. ஒருவேளை அது பெண்கொசுவாக இருக்குமோ என்று நினைத்தார்.
தூக்கம்வரவில்லை.எழுந்தார்.ச்சூ…ச்சூ..என்று கொசுவைவிரட்டினார். கொசு சுற்றி சுற்றிவந்தது.ம்..சரிப்படாது..இதுக்கிட்ட சொல்லிப்பார்ப்போம். கேட்கலைன்னா அடிதுவைச்சிடவேண்டியதுதான்..என்ன நினைச்சிக்கிட்டு
இருக்கு..இங்கேபாரு..கொசுவே..நீ என்னைவிட மிகவும் சிறிசு..நீ கடிச்சா எனக்கு ரத்தம்வராது. ஆனா நான் அடிச்சா உனக்கு ரத்தம்வரும்.ஜாக்கிரதை என்றார். கொசு கேட்பதாக இல்லை.கண்ணாயிரம் காலை பதம்பார்த்தன. கண்ணாயிரம் கோபத்தில் ..அடா..கிளி பிள்ளைக்கு சொல்லுறமாதிரி சொல்லுறன்.கேட்கமாட்டேங்கிற…இப்பே பாரு…என்வீரத்தை என்றபடி ஒரு கொசுமீது ஓங்கி அடித்தார்.கொசு செத்துகண்ணாயிரம் கையில் ரத்தம் அப்பியிருந்தது. பார்த்தியா
நான் அப்பவே சொன்னேன் கேட்டியா..இப்பபாரு..உன் ரத்தம் என்கையிலே..என்று வசனம் பேசினார். அதைக்கேட்டுக்கொண்டிருந்த பூங்கொடி..ஏங்க..கொசுவுக்கு ரத்தமெல்லாம் கிடையாதுங்க…அது உங்க ரத்தம்தாங்க..என்றார்.அட..அப்படியா..என் ரத்தமா..எவ்வளவு ரத்தத்தை குடிச்சிருக்கு….யாருக்கிட்டே கேட்டு குடிச்சுது..என்று தனது ரத்தத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.
ஏங்க.கையை கழுவிட்டுவாங்க…உடம்பிலே தேங்காய் எண்ணை தேய்த்துவிட்டு படுங்க..கொசுவராது என்றார்.
கண்ணாயிரம் எழுந்து கையை கழுவிவிட்டுவந்தார்.பின்னர் வேட்டியை மடித்து கட்டியபடி தேங்காய்எண்ணை பாட்டிலை எடுத்து உடம்பு முழுவதும் எண்ணை தேய்த்தார்.ஆ..இனி எப்படிவந்து கடிப்ப..என்று கொசுவுக்கு சவால்விட்டார்.

ஆமா..எண்ணையோட எப்படி படுப்பேன்..ஒண்ணுமே புரியலையே..
என்று புலம்பினார்.பூங்கொடி அவரிடம் ஏங்க…கொஞ்சநேரம் விழிச்சிருங்க..சரியாகிடும்.அப்புறம் கீழே போர்வையை விரிச்சிப்படுங்க என்றார். கண்ணாயிரம்..நாம விழிச்சிருந்தா..ஆளு விழிச்சிருக்குன்னு பார்த்து கொசு ஓடிரும்.கொஞ்சம் விழிச்சிருப்போம் என்றபடி கண்ணாயிரம் விழித்திருந்தார். உடம்பில் தேய்த்த எண்ணை குறைஞ்சிருக்கா இல்லையான்னு பார்த்துக்கொண்டார்.பூங்கொடி எதையும் கண்டு கொள்ளாமல்தூங்கினார். மணி பனிரெண்டு ஆகியது.கொசுவுக்கும் தூக்கம்வந்துவிட்டது போலும்.அவைகள் பறந்து ஓடின.கண்ணாயிரத்துக்கு தூக்கம் கண்ணைக்கட்டியது. ஆஹ..இனி விழிச்சிருக்கமுடியாது..தூங்கவேண்டியதுதான் என்றபடி போர்வையை தரையில்விரித்தார். இனி படுக்கவேண்டியதுதான்..என்றபடி மெல்ல போர்வையில்உடம்பை சரித்தார்.கைகளைமடக்கி தலையணையாகவைத்துக்கொண்டு..தூங்கலாம் என்று நினைத்தார்.அப்போது ஹாலிங்பெல் கத்தியது.என்னது இந்த நேரத்திலே எதுவா இருக்கும்..மணி பனிரெண்டு இருக்குமே..எது ஹாலிங்பெல்லை அடிக்குது ..புரியலையே என்று கண்ணாயிரம் விழித்தார்.பயத்தில் பூங்கொடி…பூங்கொடி என்று எழுப்பினார்.ஆனால் அவர் எழவில்லை.கண்ணாயிரத்தை பயம் கவ்விக்கொண்டது.

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.