May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் சூட்கேசை பறித்த குற்றாலம் குரங்கு/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram and Courtalam Monkey / Comedy story / Tapasu Kumar

23.12.2022
கண்ணாயிரம் நெல்லையிலிருந்து குற்றாலத்துக்கு சுற்றுலா பஸ்சில் புறப்பட்டார். பஸ்சில் வீரபாண்டியகட்டப்பொம்மன் படம் போடப்பட்டபோது ரசித்துப்பார்த்தார். படத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் வீரவசனம் பேசியபோது கண்ணாயிரமும் உணர்ச்சிபொங்க பேசினார். இறுதியில் வீரபாண்டிய கட்டப்பொம்மனை தூக்கிலிடும் காட்சிவந்தபோது சோகம் தாங்காமல் கண்ணாயிரம் மயங்கிவிழுந்தார். அவருக்கு மயக்கம் தெளியவைப்பதற்காக வீரபாண்டிய கட்டப்பொம்மன் படம் மீண்டும் முதலிலிருந்து போடப்பட்டது. என் தலைவர் வந்துட்டாரு என்று கண்ணாயிரம் மயக்கம் தெளிந்து உற்சாகமாக படம் பார்க்கத்தொடங்கினார். டிரைவரும் சிவாஜிகணேசன் ரசிகர் என்பதால் வசனத்தை ரசித்தவாறு பஸ்சை மெதுவாக ஓட்டினார். பஸ் நெல்லையைக் கடந்து ஆலங்குளம் சென்று தென்காசியை நோக்கி விரைந்தது. கண்ணாயிரம் முகத்தை தடவியவாறு படத்தை மீண்டும் ரசித்துப்பார்க்கத்தொடங்கினார்.
கட்டப்பொம்மனை தூக்கிலிடும் காட்சி வருவதற்குள் குற்றாலம் சென்றுவிடவேண்டும் என்று பயில்வான் நினைத்தார்.அதற்குள்ளாகவே பஸ் குற்றாலத்தை வந்து சேர்ந்தது. படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
பெரிய ஓட்டல் அருகே பஸ் நிறுத்தப்பட்டது. அப்பாட ஒருவழியா குற்றாலம் வந்தாச்சு..இங்கே வருவதற்குள் எங்கெல்லாம் போயிருக்கு என்று பயில்வான் நினைத்துக்கொண்டார்.
கண்ணாயிரம்..என்ன படத்தை நிறுத்திட்டீங்க..மீண்டும் போடுவீங்களா என்று பயில்வானிடம் கேட்டார். பயில்வான் உடனே..கண்ணாயிரம் குற்றாலம் வந்தாச்சு..பிறகு படம் போடுவோம் என்றார். கண்ணாயிரம் இவ்வளவு சீக்கிரத்தில் குற்றாலம் வந்துட்டா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
அதற்கு பூங்கொடி..ஆமாங்க…நீங்க படம் பாத்துக்கிட்டு இருந்ததால உங்களுக்கு பஸ் வேகமாக வந்தது தெரியல என்று சொன்னார்.
பயில்வான் எழுந்து அன்பான சுற்றுலாபயணிகளே…குற்றாலம் வந்தாச்சு…இங்கே இரண்டு நாள் தங்குவோம். நன்றாக அருவியிலே குளிங்க..பாதுகாப்பாக இருங்க..வேற எங்கேயும் போயிடாதீங்க என்றார்.
கண்ணாயிரம் சரி சரி என்று தலையை ஆட்டினார். கண்ணாயிரம் தனது சூட்கேஸ் மற்றும் பொருட்களை எடுத்தார். நைலான் கயிறு..துணி காயப்போட்டிருக்கே என்னசெய்யலாம் என்று நினைத்தார். எல்லோரும் கயிறை அவிழ்த்து துணிகளை பெட்டியில் அடுக்கி பஸ்சைவிட்டு இறங்கினார்கள். கண்ணாயிரமும் நைலான் கயிறை அவிழ்க்கப் பார்த்தார். முடிச்சி பலமாக போட்டதால் கயிறை எளிதில் அவிழ்க்க முடியவில்லை. பல்லைவைத்து கடித்து இழுத்துப்பார்த்தார். கயிறு அவிழவில்லை. என்னடா வம்பாபோச்சு என்றபடி யோசிக்கத் தொடங்கினார். இதைப்பார்த்த பூங்கொடி…இங்கே நவுறுங்க..ஒரு கயிறைகூட அவிழ்க்க முடியல…போங்க..நான் அவிழ்க்கிறேன் என்றார்.
கண்ணாயிரத்துக்கு வெட்கமாகபோய்விட்டது. இந்த நைலான் கயிறு நம்மை மாட்டிவிட்டுவிட்டதே என்று கவலைப்பட்டார். பூங்கொடி அந்த நைலான் கயிறை லாவகமாக அவிழ்த்து துணிகளை டிரங்பெட்டியில் அடுக்கினார். கண்ணாயிரம் பத்திரமாக அந்த நைலான் கயிறை வாங்கி தனது சூட்கேசில் போட்டுக்கொண்டார். பின்னர் தலையில் தொப்பி மாட்டி முகத்தில் கண்ணாடி மாட்டி கையில் சின்ன கம்புடன் புறப்பட்டார்.
சுடிதார்சுதா மற்றும் இளைஞர்கள் பெட்டி படுக்கையுடன் பஸ்சைவிட்டு இறங்கி ஓட்டலுக்கு சென்றார்கள். துபாய்க்காரர் அவரது மனைவி மற்றும் பலர் அப்பாட…அம்மாட என்றபடி ஓட்டலை நோக்கி நடந்தனர்.
கண்ணாயிரம் பஸ்சை விட்டு இறங்கியதும் சூட்கேசை யாரோ இழுப்பது போல் தெரிந்தது.யாரு என்று திரும்பிப்பார்த்தார். குரங்கு ஒன்று நின்று கொண்டிருந்தது. அடி ஆத்தாடி..இது என்ன சோதனை என்றபடி கண்ணாயிரம் சூட்கைசை பிடித்து இழுக்க.. குரங்கு மற்றொரு பக்கம் இழுக்க ..குரங்கு விடுவதாக இல்லை. கண்ணாயிரம் கையிலிருந்த கம்பால் குரங்கைவிரட்ட மேலும் இரண்டு குரங்குகள் ஓடிவந்தன. அம்மாடி..இனி என்னப்பண்ணுவேன் என்று அவர் திணற.. அங்கிருந்தவர்கள்.. அட.. கண்ணாயிரம் குரங்கை அடிக்காதே..அப்புறம் உன்னைவிடாது என்று எச்சரித்தனர். எனக்கு என் சூட்கேசு வேணும் என்று கண்ணாயிரம் அழ ஆரம்பித்தார். அந்த சத்தம் கேட்டு பஸ்சிலிருந்து பூங்கொடி ஓடிவந்தார். என்னங்க..இது..எங்கே போனாலும் உங்களுக்கு பிரச்சினையா இருக்கு..சூட்கேசை விட்டிருங்க..பாத்துக்கலாம் என்று பூங்கொடி சொன்னார். ஆனாலும் அவர் கேட்கவில்லை. இந்த நேரத்தில் ஒரு குரங்கு ஓடிவந்து கண்ணாயிரம் தலையில் ஏறி அமர்ந்துகொண்டு பேன்பார்த்தது. பின்னர் அங்கு நின்றவர்களை பார்த்து சிரித்தது. கண்ணாயிரம் அய்யோ..என் தலையிலே ஏறி உட்கார்ந்துக்கிட்டே என்று அலறியபோது அந்த குரங்கு கண்ணாயிரம் தலையில் ஓங்கி தட்டியது. கண்ணாயிரம்..ஆ..என்று பார்த்தபோது..சத்தம்போட்டா அடிச்சிறுவேன் என்பது போல குரங்கு கையை ஓங்கியது. கண்ணாயிரம் கப்சிப் என்று அடங்கிவிட்டார். பூங்கொடி..அய்யோ யாராவது வந்து காப்பாத்துங்களே என்று கத்தினார்.
பயில்வான் ஓடிவந்து துண்டால் குரங்கை விரட்டினார். அவரது துண்டை பறித்துக்கொண்டது. அட..துண்டு போச்சா என்று அவர் ஒதுங்கினார். ஒரு குரங்கு கண்ணாயிரம் சட்டைப்பையில் ஏதாவது வைத்திருக்காரா என்று சோதனைப்போட்டது. ஒன்றும் இல்லை என்றதும் ஓங்கி ஒரு அடி அடித்தது. சூட்கேசை பறிப்பதில் குரங்கு குறியாக இருந்தது.
: கண்ணாயிரம் குரங்கோடு போராடுவதை கேள்விப்பட்ட இளைஞர்கள் ஓட்டலில் இருந்து ஓடிவந்தார்கள். குரங்கு கண்ணாயிரம் தலையில் ஏறி அமர்ந்திருப்பதைப்பார்த்த ஒரு இளைஞர் அதை தன் செல்போனில் படம் எடுத்தார். கண்ணாயிரம் கோபத்தில் ஏய் நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நீ படமாக எடுக்க என்று திட்டினார். படம் எடுப்பதைப்பார்த்த இரண்டு குரங்குகள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து செல்போனை பறிக்கமுயன்றன. ஆஹா..அது பெர்மிஷன் இல்லாம படம் எடுத்தால்விடுமா. என்று கண்ணாயிரம் மெல்லசிரித்தார்.
அந்த சத்தம் கேட்டு கண்ணாயிரம் தலையில் இருந்த குரங்கு கண்ணாயிரத்தின் காதைபிடித்து திருகியது. ஆ…காதுவலிக்கு என்று கண்ணாயிரம் மவுனமாக அழ..குரங்குபார்த்து சிரித்தது.
குரங்கிடம் கண்ணாயிரமும் வாலிபரும் சிக்கிக்கொண்டதை அறிந்த சுடிதார் சுதா தான் வாங்கி வைத்திருந்த வாழைப்பழங்கைகளை ஒருபையில் எடுத்துக்கொண்டு அங்கே ஓடிவந்தார். வாலிபரை சுற்றிவளைத்த குரங்கு அந்த வாலிபரின் சட்டையை கிழித்தது. சூட்கேசை தராத கண்ணாயிரத்தின் கையை கடிக்க முயன்றன. நிலைமை மோசமாவதை அறிந்த சுடிதார்சுதா ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் காட்டினார். உடனே குரங்குகளின் கவனம் சுடிதார்சுதாவின் பக்கம் திரும்பியது. கண்ணாயிரத்தைவிட்டுவிட்டு வாழைப்பழத்தை தேடி சுடிதார் சுதாபக்கம் ஓடிவந்தன.
செல்போனில் படம்பிடித்த வாலிபரைவிட்டுவிட்டு வாழைப்பழம் வைத்திருந்த சுடிதார்சுதாவை நெருங்கின.
அப்பாட..ஆளைவிட்டுச்சு என்று கண்ணாயிரம் நினைத்தார். உடனே பூங்கொடி…ஏங்கே இங்கே ஓடிவாங்க.. திரும்பவந்திடப்போகுது என்று சொல்லி கண்ணாயிரத்தை பாதுகாப்பாக ஓட்டலுக்குள் கூட்டிச்சென்றார்.
சுடிதார்சுதாவைப்பற்றி அவர் கவலைப்படவில்லை.செல்போன் எடுத்த இளைஞரும் ஆ..ஆளைவிட்டா போதும்பா என்று தலைதெறிக்க ஓட்டலுக்குள் ஓடினார். சுடிதார் சுதா பாய்ந்து வந்த குரங்குகளுக்கு ஒரு வாழைப்பழத்தைக்கொடுத்தார். அதை பங்கு போடுவதில் குரங்குகள் சண்டையிட்டன. இதனால் சுடிதார்சுதா மற்றோரு வாழைப்பழத்தை நீட்டினார். ஒரு குரங்கு ஓடிவந்து அந்த பழத்தை வாங்கிச்சென்று தோலை உரித்து தனது ஜோடி குரங்குக்கு ஊட்டியது. அதை சுடிதார்சுதா பார்த்து ரசித்தார். குரங்குகள் சண்டை நீங்கி சமாதானமாக இரண்டு வாழைப்பழத்தை நீட்டினார். அவைகளை அவை வாங்கிக்கொண்டு தனியாகசென்றன. பழத்தை உரித்து ஆளுக்குபாதி கொடுத்து சிரித்து சிரித்து மகிழ்ந்து உண்டன. சுடிதார்சுதா ஒவ்வொரு பழமாக கொடுத்துக்கொண்டிருந்தார். குரங்குகள் அதை சாப்பிட்டு உற்சாக மூடில் ஆடின.
கடைசியாக ஒருபழம் இருந்தது. சடிதார்சுதா எடுத்து நீட்டினார். குரங்குகள் வெறிக்க வெறிக்கப்பார்த்துவிட்டு ஓடின. இறுதியாக வயதான ஒரு குரங்கு தள்ளாடியபடி வந்தது. சுடிதார்சுதா அந்த பழத்தை அதனிடம் கொடுத்தார். அது பவ்வியமாக வாங்கிவிட்டு சுடிதார்சுதாவை பாசமாக ஒரு பார்வைபார்த்துவிட்டு அங்கிருந்து சென்றது. பழமெல்லாம் கொடுத்துவிட்டு சுடிதார்சுதா திரேம்பிப்பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. எல்லோரும் சுடிதார்சுதாவைவிட்டுவிட்டு ஓட்டலில் தங்களது அறைகளை தேடிப்பிடிப்பதில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.சுடிதார்சுதா ஏக்க பெருமூச்சுவிட்டவாறு அங்கிருந்து எழுந்து ஓட்டலுக்குள் சென்றார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.