போதைமருந்து கடத்தல் தலைவன் முகமது இம்ரானை உடனடியாக கைது செய்ய அன்புமணி கோரிக்கை
1 min readAnbumani demands immediate arrest of drug trafficker Mohammed Imran
1.1.2023
போதைமருந்து கடத்தல் தலைவன் முகமது இம்ரானை உடனடியாக கைது செய்து நாடு கடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
போதைப்பொருள் கடத்தல்
உலகின் மிகக்கொடிய போதைமருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தமது கூட்டாளிகளுடன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. எல்லையோர பாதுகாப்பு குறைபாடுகளையே இது காட்டுகிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹெராயின், கோகெய்ன் கடத்தல் கும்பல்களுடன் முகமது இம்ரானுக்கு வலிமையான பிணைப்பு உண்டு. 2019-ஆம் ஆண்டில் துபையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இம்ரான், அங்கு பிணையில் விடுதலையான நிலையில் தப்பியுள்ளான்.
கைது செய்ய வேண்டும்
தமிழ்நாட்டில் போதைமருந்து கலாச்சாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முகமது இம்ரானின் ஊடுருவல் நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும். முகமது இம்ரானை உடனடியாக கைது செய்து நாடு கடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்