May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை கலக்கிய மல்லிகை பூவாசம் /நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Jasmine poowasam that stirred the Kannayiram/Comedy story/ Tabasukumar

2/1/2023
கண்ணாயிரம் நெல்லையிலிருந்து சுற்றுலாபஸ்சில் குற்றாலம் சென்றார்.அங்கு சூட்கேசைபிடித்து இழுத்த குரங்கிடமிருந்து தப்பி ஓட்டலுக்குள் சென்றார்.அங்கு அவருக்கும் அவர் மனைவி பூங்கொடிக்கும் கடைசி அறை ஒதுக்கப்பட்டிருந்தது.அந்த 66-வது எண் அறையில் அவர்கள் தங்கினார்கள்.கதவை திறப்பதற்கே அண்டாகாகுசம் பாஸ்வேர்டு சொல்லி ஓட்டல் ஊழியர் கதவை திறந்துகொடுத்தார். இரவு ஏதாவது சத்தம் கேட்டால் இண்டர்காமில் தகவல் சொல்லுங்கள் என்று ஓட்டல் ஊழியர் சொல்லியிருந்தார்.
இதையடுத்து கண்ணாயிரமும் பூங்கொடியும் சாப்பிட்டுவிட்டு படுத்தார்கள். கண்ணாயிரத்தை கொசு கடித்ததால் அவர் உடல் முழுவதும் எண்ணை தேய்த்துவிட்டு போர்வையை விரித்து படுக்கலாம் என்று மெல்ல உடலை சரித்தார். அப்போது திடீரென்று ஹாலிங்பெல் கிர்..கிர் கிர் என்று ஒலித்தது. முழித்திருந்த கண்ணாயிரம் இந்த நேரத்தில் யார்வந்து ஹாலிங்பெல்லை அழுத்துறது என்று பயத்துடன் எழுந்து உட்கார்ந்தார். மனைவி பூங்கொடியை எழுப்பினார்.அவரும் எழும்பவில்லை.மணியும் பனிரெண்டு ஆகிவிட்டது.ஹாலிங்பெல் சத்தம் குறையவில்லை.கண்ணாயிரம் எழும்பி பூங்கொடியை எழுப்பி…என்ன தூக்கம் …ஹாலிங்பெல் அடிக்குது ..உனக்கு கேட்கலையா என்று கேட்டார். அவர் தூக்ககலக்கத்தில்..எனக்கு தூக்கமா வருதுங்க…ஹாலிங்பெல்லை அழுத்துறது யாருன்னு கேளுங்க..என்றார் பூங்கொடி.அதைக்கேட்டதும் கண்ணாயிரம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு யாரது..யாரது…நான் கேட்கிறன்ல…யாரது..வெளியிலேயாரு..என்று அதட்டலாகக்கேட்டார். உடனே ஹாலிங்பெல் ஒலிக்கும் சத்தம் நின்றது.ம்..சத்தம் போட்டாத்தான் கேட்கிறாங்க…இல்லன்னா நம்மள கேணப்பயன்னு நினைச்சுக்குவாங்க..நான் யாரு..புதுவை சிங்கமாச்சே..ஆ..அந்த பயம் இருக்கோணும்.அப்பாட..இப்பம் சத்தம் இல்லை..இனி நிம்மதியாக தூங்கலாம்..என்றவாறு போர்வைமீது படுத்தார். உடம்பு முழுவதும் எண்ணை தேய்த்து பளபளன்னு இருந்தார் கண்ணாயிரம்.
அவருக்கு தூக்கம் கண்ணைக்கட்டியது. வாயை அஷ்டக்கோணலாக பிளந்து கொட்டாவிவிட்டபடி கையை தலையணையாக வைத்துக்கொண்டு குறட்டைவிட்டார்.
பத்து நிமிடம் கழித்திருக்கும்.மீண்டும் ஹாலிங்பெல் கிர் கிர் கிர் கிர் என்று ஒருவித இசையோடு ஒலித்தது.கண்ணாயிரம் குறட்டைவிடுவதில் குறியாக இருந்ததால் கவனிக்கவில்லை. பூங்கொடிக்கு அந்த சத்தம் கேட்டது. அட..என்னடா இது..பனிரெண்டு மணி நேரத்திலே கிர்ரு கிர்ருன்னுக்கிட்டு..நேரம் காலம்தெரியாதா…என்று கண்களை கசக்கிக்கொண்டு எழுந்தார். கண்ணாயிரம்..சுருண்டுபடுத்தபடிருந்தார். அவர்முதுகில் பூங்கொடி ஓங்கி ஒரு அடி கொடுத்து …என்ன தூக்கம்..ஹாலிங்பெல் சத்தம் கேட்கலையா..என்று அதட்டினார். கண்ணாயிரம் எனக்கு கேட்கலை…யாருன்னு கேளு என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டார். பூங்கொடி கோபத்தில் யாருங்க…ஹாலிங்பெல்லை அடிக்கிறது..நாங்க சாதாரண ஆள் இல்லை..தெரியுமா வெளியேவந்தா வெளுத்திடுவோம்.. ஜாக்கிரதை..என்ன சேட்டை..ஆள் தெரியாம விளையாடாதீங்க..என்று ஏசினார்.அவ்வளவுதான் ஹாலிங்பெல் சத்தம் நின்றது.
பூங்கொடிக்கு மகிழ்ச்சி..அப்பாட..நம்ம குரலுக்கு தனிமரியாதை இருக்கு..ம்..இந்த ஆளை வச்சிக்கிட்டு என்ன பண்ணுறது..ஒரு சுக்கும் ஆகாது என்று புலம்பிவிட்டு படுத்துக்கொண்டார். கண்ணாயிரம் எதையும் கண்டுகொள்ளாமல் வாயை பிளந்தபடி படுத்திருந்தார். கொசுக்கடிக்காமல் இருக்க உடம்பு முழுவதும் எண்ணை தேய்த்திருந்தார். அவரது விதி..கொசு அவரை நெருங்கவில்லை. ஆனால் எண்ணைவாடைக்கு எறும்பு அவரைத்தேடிவந்தது. முதுகில் ஒரு கடி கடித்தது.கண்ணாயிரம்..ஆ..என்ன இது..கொசு கடிக்காதுன்னாங்க…பிறகு என்ன கடிக்குது…என்றவாறு முதுகை தடவினார்.
பெரியவம்பால்லா இருக்கு.. என்று முதுகை தடவிப்பார்த்தார்.ஓடிவந்த ஒரு எறும்பை பிடித்துக்கொண்டார்.ஆஹா..கொசு போயி..எறும்பு வேற வந்துட்டா..அப்போ இன்னைக்கு தூங்குன மாதிரிதான்..என்று எழுந்தார். எறும்பு எங்கெல்லாம் இருக்கு தெரியலையே..என்றவாறு மின்விளக்கை எரியவிட்டார். போர்வையைப்பார்த்தார்.. எறும்புகள் அணிவகுத்து சென்றன. அம்மாடி..இவ்வளவும் கடித்தா நான் என்ன ஆவேன் என்றபடி எறும்புகளை கூர்ந்துபார்த்தார்.
இதை என்ன செய்யலாம் என்று கன்னத்தில் விரல்வைத்துயோசிக்கத் தொடங்கினார். கண்விழித்த பூங்கொடி..என்னங்க விளக்கை போட்டிருக்கிய..அணைங்க என்று கத்த கண்ணாயிரமோ..பூங்கொடி போர்வையிலே எறும்புவந்துட்டு..கடிக்குது என்று அலற பூங்கொடி ஆத்திரத்தில் அதை தூக்கிவெளியே வுசுங்க..என்றார். வெளியவே…ஏற்கனவே ஹாலிங்பெல்லை அடிக்கிறது யாருன்னு தெரியல..நான் கதவை திறந்து வெளியே போனா என்ன ஆகும்..அடி ஆத்தாடி ஏதாவது பிடிச்சிட்டுபோயிட்டுன்னா…என்ன ஆவுறது..பேசாம போர்வையை மடக்கி ஓரமா வச்சிட்டு துண்டைவிரிச்சி படுப்போம் என்று நினைத்தார். போர்வையை சுருட்டி ஓரத்தில் வைத்துவிட்டு துண்டைவிரித்தார். விளக்கை அணைத்துவிட்டு மீண்டும்வந்து படுத்தார். பத்து நிமிடம் கழிந்திருக்கும்.மீண்டும் ஹாலிங்பெல் சத்தம்…ஏற்கனவே எறும்புக்கடி வலி வேற..இதுல மறுபடியும் ஹாலிங்பெல் சத்தமா….கண்ணாயிரம் வெறுப்பின் உச்சிக்கு சென்றுவிட்டார். பூங்கொடியும் காதைப்பொத்திக்கொண்டு..அடடா..பெரிய தொந்தரவா போச்சுங்க…யாரோ வேணுமுன்னே ஹாலிங்பெல்லை அடிச்சி சேட்டைப் பண்ணுறாங்க..விடக்கூடாது..லைட்டை போடுங்க..கதவை திறந்து இரண்டு போடு போடுவோம்..அப்பதான் சரியாவரும் என்றார். அதுவும் சரிதான்..விடக்கூடாது..கொஞ்சம் சிலம்பு படிச்சிருக்கோம்..இப்போ அது கைகொடுக்கும் என்று வீரமாக எழுந்தார். வேட்டியை மடக்கிக்கட்டிதார் பாயாச்சினார். கையில் குடையை மடக்கி எடுத்துக்கொண்டார். பூங்கொடி கையில் ஒரு பாத்திரத்தை ஆயுதமாக எடுத்துக்கொண்டார். விளக்கை போட்டார். ஹாலிங்பெல் சத்தம் நின்றது. படாரென்று பூங்கொடி கதவை திறந்து வெளியே சென்றார். அவரைத்தொடர்ந்து கண்ணாயிரமும் வேகமாக கையில் குடையுடன் பாய்ந்துவந்தார். இருவரும் வெளியே அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தார்கள். யாரையும் காணவில்லை. என்ன… யாரையும் காணம்..அப்போ ஹாலிங்பெல்லை அழுத்துனது யாரு..என்று கண்ணாயிரம் பயத்துடன் கேட்டார். பூங்கொடி தெரியலங்க..உயிரை வாங்காதீங்க என்று அதட்டினார்.
அப்போது குப் என்று மல்லிகை பூவாசம் வீசியது..ஆஹா…பூங்கொடி ஹாலிங்பெல்லை அழுத்துறது யாருன்னு தெரிஞ்சிப்போச்சு..என்று கண்ணாயிரம் கத்தினார். உடனே பூங்கொடி உற்சாகத்தில் யாருங்கஹாலிங்பெல்லை அடிச்சது…சொல்லுங்க என்று கேட்டார். கண்ணாயிரம் மெல்ல..நான் சொன்னா பயப்படக்கூடாது…ஹாலிங்பெல்லை அழுத்துறது யார்தெரியுமா பேய் என்று சொல்லிவிட்டு கண்களை உருட்டினார்.பூங்கொடி கோபத்தில் முறைக்க…கண்ணாயிரமோ…..என் மேல கோபப்படக்கூடாது..ஒதிலும் ஒருஉண்மை இருக்கான்னு பார்க்கணும்…நான் மதுரையிலே உனக்கு மல்லிகை பூவாங்கிக்கொடுத்தேனே இல்லையா..அந்த மல்லிகை பூவை பெடிக்குள்ளே பூட்டிவச்சிருக்கியா இல்லையா.. அந்த பூவாசத்தை தேடிட்டு பேய்வந்து ஹாலிங்பெல்லை அழுத்துது..புரியுதா..என்று பூங்கொடியை பார்த்தார். அவர் கோபத்தில் நீங்களும் உங்கள் யோசனையும். ஏங்கநீங்க மதுரையிலே வாங்கிக்கொடுத்த மல்லிகை பூவை நெல்லையிலே தாமிரபரணி ஆற்றிலே குளிக்கும்போதே எடுத்து போட்டுட்டுவந்துட்டேன் என்றார். அப்படின்னா மல்லிகை பூவாசம் அடிக்குதே..எல்லாம் சுடிதார்சுதாவாகத்தான் இருக்கும். அவாதான் மல்லிகைபூ வச்சிக்கிட்டு தூங்குவா..பேய் அட்ரஸ் தெரியாம நம்ம அறை ஹாலிங்பெல்லை அடிக்குதே என்றார். பூங்கொடி..ஏங்க சும்மா கதைவிடாதீங்க என்று அதட்ட..கண்ணாயிரமோ…சும்மா சொல்லலை பூங்கொடி…அன்னாபாரு பேய் தூரத்தில் ஊ..ஊ..ஊ..என்று கத்துறதை என்று பயத்துடன் சொன்னார்.
பூங்கொடி எரிச்சலுடன்..ஏங்க அது..அருவி விழுற சத்தமுங்க..சும்மா பயம்காட்டாதீங்க என்க அந்த நேரத்தில் ஜில் ஜில் ஜில் என்று சத்தம் கேட்டது.கண்ணாயிரம் மெதுவாக உடல் நடுங்கியபடி பூங்கொடி உள்ளே போயிடுவோம்..சலங்கை சத்தம் கேட்குது என்றார்.
பூங்கொடி அதை நம்பவில்லை. ஏங்க காத்து அடிக்குதல்லா..ஏதோ காஞ்ச இலை காற்றுல அசையுறது அப்படி கேட்குது என்றார்.சரி..சரி..எதுவாக இருந்துவிட்டுப்போகட்டும்..உள்ளேவா..பயமா இருக்கு என்றார் கண்ணாயிரம். பூங்கொடியும் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு..ஓண்ணுமில்லை என்றபடி உள்ளே வந்தார்.கண்ணாயிரமும் ஓடிவந்து கதவை லாக் பண்ணினார்.ஆடடா..இந்த போர்வையை வெளியே உதறாம போயிட்டோமே..ஏறும்பு தின்னுடுமே என்று நெளிந்தார்.சரிவிளக்கை அணைத்துவிட்டு படுங்க என்றார்.
பூங்கொடி.கண்ணாயிரமும் விளக்கை அணைத்துவிட்டுவந்து விரித்த துண்டின்மேல் படுத்தார்.தூக்கமாக வந்தது.இனி என்ன ஆனாலும் கண்டுக்கக்கூடாதுன்னு நினைத்தபடி கண்களை இறுக்கமாக மூடி தூங்கினார். பூங்கொடியும் எதுவானாலும் காலையிலே பார்த்துக்கொள்ளலாம் என்றபடி படுக்கையில் தலைசாய்த்தார். பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும். மறுபடியும் ஹாலிங்பெல் அடிக்கும் ஓசை கேட்டது. கண்ணாயிரமும் பூங்கொடியும் கண்டுகொள்ளாமல் விழித்துபார்த்தபடி படுத்திருந்தனர். சிறிது நேரத்தில் கதவை பலமாக தட்டும் சத்தமும் கேட்டது.அவ்வளவுதான் இருவரையும் அச்சம் சூழ்ந்துகொண்டது.

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.