May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ஓட்டல் ஊழியரை பயமுறுத்தியகண்ணாயிரம்/நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram who scared the hotel staff/Comedy story / Tabasukumar

3.1.2023
கண்ணாயிரம் நெல்லையிலிருந்து சுற்றுலாபஸ்சில் குற்றாலம் சென்றார். அங்கு ஒரு ஓட்டலில் கடைசியாக உள்ள தனி அறையில் கண்ணாயிரமும் அவரது மனைவி பூங்கொடியும் தங்கினார்கள்.இரவில் கொசுக்கடி அதிகமாக இருந்ததால் கண்ணாயிரம் உடம்பு முழுவதும் தேங்காய் எண்ணை தடவியவாறு போர்வையை விரித்து கீழே படுத்திருந்தார். நள்ளிரவு பனிரெண்டு மணியளவில் ஹாலிங்பெல் தொடர்ந்து அடித்ததால் கண்ணாயிரமும் பூங்கொடியும் கதவை திறந்துகொண்டு வெளியே சென்று யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தனர். யாரும் இல்லை. பேயாக இருக்குமோ என்று கண்ணாயிரம் சந்தேகத்தை கிளப்ப பூங்கொடியே அதுக்கு வாய்ப்பே இல்லை என்றார். இதையடுத்து அறைக்குள்வந்து கதவை லாக்செய்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டுவந்து படுத்தனர். சிறிது நேரத்தில் ஹாலிங்பெல் சத்தமும் கதவை ஓங்கி தட்டும் சத்தமும் கேட்டது.
அதைப்பார்த்ததும் கண்ணாயிரமும் அவர் மனைவியும் அச்சத்தில் கண்களை உருட்டினர். பூங்கொடி எழுந்து விளக்கை எரியவிட்டார். யாரா இருக்கும்..என்று பற்களை கடித்தார். கண்ணாயிரத்தை பார்த்து ஏங்க..விழிக்காதீங்க.. ஏதாவது சத்தம் கேட்டா இண்டர்ஹாமில் தகவல் சொல்லுங்கன்னு ஓட்டல் ஊழியர் சொன்னாரில்லையா…அவருக்கு இண்டர்ஹாமி ல் தகவல் சொல்லுங்க என்று கத்தினார்.
கண்ணாயிரம் கண்களை கசக்கியபடி இண்டர்ஹாமை கையில் எடுத்தார். அவருக்கு கையெல்லாம் நடுங்கியது. அதைப்பார்த்த பூங்கொடி..என்ன நடுக்கம்..நீங்க பயப்படுறதும் இல்லாம என்னை பயம்காட்டிவிட்டிருவிங்க..கொடுங்க என்று இண்டர்ஹாமை பிடுங்கினார். வரவேற்பறைக்குரிய நம்பரை அழுத்தினார்.. ரிங் போனது. ஆனால் யாரும் எடுக்கவில்லை.
என்னடா இது பெரிய வம்பா போச்சு..யாரும் எடுக்கமாட்டேங்கிறாங்க…எரிச்சலா இருக்கு..என்றபடி இண்டர்ஹாம் ரிசீவரை கீழேவைத்தார்.
அப்போது கதவை தட்டும் சத்தம் நின்றது. ஹாலிங்பெல்லை அழுத்தும் சத்தம் கேட்டது. பூங்கொடி தனது மனதை திடப்படுத்திக்கொண்டார்.
பூங்கொடி…இது உன் வீரத்துக்குவந்த சோதனை…மனம் தளராதே. இரண்டில் ஒன்று போட்டுப்பாரு…என்றது.
பூங்கொடி மீண்டும் இண்டர்ஹாமில் நம்பரை அழுத்தினார்..ரிங்போனது. ஆனால் யாரும் எடுக்கவில்லை. என்னடா…இது சோதனை..என்றவாறு ரீசிவரை கீழே வீசினார். மீண்டும் கதவை தட்டும் சத்தம் கேட்டது.
பூங்கொடி பொங்கி எழுந்தார். ஏங்க…பொறுத்தது போதும் பொங்கி எழுங்க…என்று கத்தினார். மனோகரா படத்தில் இந்த வசனத்தை கண்ணம்பாள் சொன்னதும் ஆவேசம் அடைந்தது கண்ணாயிரத்துக்கு நினைவுக்கு வந்தது.
ஆனாலும் கண்ணாயிரம் அதிர்ச்சியில் அட்டேன்சன்..என்று சொல்லியபடி வணக்கம் போட்டார்.
ம்..வேட்டியை மடிச்சி தார்பாயுங்க. உடம்புல இன்னும் கொஞ்சம் தேங்காய் எண்ணை தடவுங்க..அப்போதுதான்..யாரும் உங்களை பிடிக்கமுடியாது..வழுவிக்கிட்டு ஓடிவந்திடுவீங்க..என்றார்.
உடனே கண்ணாயிரமும் ம்..பூங்கொடி ஆணை என்றவாறு வேட்டியை மடிச்சிக்கட்டி தார்ப்பாய்ச்சினார். தேங்காய் எண்ணை பாட்டிலை எடுத்து உடம்பு முழுவதும் தேங்காய் எண்ணையை தடவினார். வலது கையை மடக்கி பலம்பார்த்தார். உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்தார். அவருக்கு கொஞ்சம் வீரம் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
அடுத்து என்னசெய்யவேண்டும்..பூங்கொடி..ஆணையிடு என்று கண்களை விரித்து கேட்டார்.ம்..அந்த குடையை எடுத்து வாள் மாதிரி வச்சிக்கிங்க…எவன் வந்தாலும் விளாசுங்க .உடைஞ்சு போயிடுமுன்னு கவலைப்படாதீங்க…ஏற்கனவே அது உடைஞ்சுபோய்தான் இருக்கு..என்று சொன்னார்.
அடுத்த நிமிடம் கண்ணாயிரம் அந்த குடையை மடக்கி துப்பாக்கி போல் தோளில்வைத்துக்கொண்டார். குயிக் மார்ச்..லெப்ட் ரைட்டு…லெப்ட்ரைட்டு…என்று வேகமாக நடந்தார். பூங்கொடியும் போருக்கு தயாரானார். சேலையை தூக்கிக்கட்டினார். இரண்டு கைகளிலும் இரண்டுபாத்திரங்களை எடுத்துக்கொண்டார். கண்ணாயிரத்தைப்பிர்த்து..ஏங்க நான் ஒண் டூ திரி சொல்லுவேன்..திரி சொன்னதும் கதவை திறந்துகொண்டு வெளியே போகணும். யார் நின்னாலும் அடிங்க..விடாதீங்க..என்று சொன்னார்.
கண்ணாயிரமும் ம்..எனக்கு வீரம் வந்துட்டு…சீக்கிரம் ஆணையிடு என்றார். பூங்கொடி…சரி எதுவும் சொதப்பிடக்கூடாது..எப்படியாவது ஆளைபிடிச்சாகணும் என்று கத்தினார்.
கண்ணாயிரமும் ஓட்டப்பந்தய வீரரைப்போல வலது காலை முன்னேவைத்து இடது காலை பின்னேவைத்து ..தயாராக நின்றார்.
பூங்கொடி ஒண் டூ …டூ..டூ…திரி என்றதும் கண்ணாயிரம் வேகமாக கதவை நோக்கி ஓடினார். காலில் எண்ணை தேய்த்திருந்தலால் வழுக்கி பொசுக்கென்று கீழே விழுந்தார். பூங்கொடி கோபத்தில் .எழுந்திரிங்க….ச்சோ..என்று கத்தினார்.
கண்ணாயிரம்….எழுந்தார்..மீண்டும் வழுக்கிவிழுந்தார். பூங்கொடி கோபத்தில் எழும்புங்க என்று அவர்கையை பிடித்து தூக்கினார்.ம்..ம் என்று சத்தமிட்டவாறு கண்ணாயிரம் எழுந்தார்.
பூங்கொடி கோபப்படாதே..காலில் எண்ணை தேய்த்திருந்ததால் வழுக்கிவிழுந்துட்டேன். இனி உஷாரா இருப்பேன். மீண்டும் ஒன்டூதிரி சொல்லு என்றார்.அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நேராவாங்க கதவை திறப்போம்..எதிரே யார் இருந்தாலும் அடிங்க என்றார் பூங்கொடி. அதைக்கேட்டதும் கதவை நோக்கி செல்ல கண்ணாயிரம் தயாரானார்.
பூங்கொடி படக்கென்று கதவை திறந்து வெளியே சென்றார். கண்ணாயிரமும் பயத்தில் பின்னால் குடையுடன் ஓடிச்சென்று குடையை சுற்றி யாருன்னாலும் வாங்கடா..யாருன்னாலும் வாங்கடா என்று கத்தினார்.
யாரும் இல்லை. பூங்கொடியும் சுற்றி சுற்றிப்பார்த்தார். யாரையும் காணவில்லை. யாரும் கண்ணுக்கு தெரியல..பிறகு எப்படி ஹாலிங்பெல் சத்தம் போடுது..புரியலையே..கீழே இறங்கிப்போயி வரவேற்பறையில் ஓட்டல் ஊழியரிடம் சொல்லுறேன் என்று பூங்கொடி சொன்னார்.
கண்ணாயிரம் உடனே..ம் நான் இங்கே தனியா நிக்கமாட்டேன்..எனக்கு பயமா இருக்கு..நானும் வாரேன் என்றார்.
பூங்கொடியும்..சரி..சரி வாங்க கதவை பூட்டுங்க என்றார். கண்ணாயிரம்..சரி..சரி..பூட்டுனா பிறகு திறக்காதே என்று இழுத்தார். உடனே பூங்கொடி..நாமத்தான் கீழே இருந்து ஓட்டல் ஊழியரை கூப்பிட்டுவருவோமே..அவங்க திறந்திடுவாங்க என்றார்.
கண்ணாயிரம்..அப்பம் சரி என்றவாறு சாவியை எடுத்து வந்து பூட்டமுயன்றார். பூட்டவில்லை. பூங்கொடி சாவியை வாங்கி எப்படியோ முயன்று கதவை பூட்டினார்.
ம்..வாங்க சீக்கிரம் கீழே போவோம் என்றார். கண்ணாயிரமும் சரி..சரி ..நான்வர்ரேன் என்றார். உடனே பூங்கொடி கோபத்தில் தலையைவிரித்து போட்டபடி சேலையை தூக்கிக்கட்டியபடி கைகளில் பாத்திரத்தை தூக்கியபடி நடந்தார். ஓட்டல் சாவி அவர் இடுப்பில் தொங்கியது. கண்ணாயிரமும் முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு வேட்டியை தார்பாயாச்சிக்கட்டிக்கொண்டு உடம்பு முழுவதும் எண்ணை பளபளக்க..குடையை தோளில் வைத்துக்கொண்டு..வேகமாக நடந்தார்.ம்..பார்த்து வாங்க..கீழே வழுக்கிவிழுந்திடப்போறீங்க…என்று பூங்கொடி திட்டினார்.
ஒவ்வொரு அறையிலும் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தார்கள்.ஒரு அறையில் ஜன்னலை திறந்துவைத்தபடி பால்நிலாவை ரசித்தபடி சுடிதார் சுதா நின்று கொண்டிருந்தார். அவள் கூந்தலில் சூடிய மல்லிகை பூ..கம கம என்றுவாசம் வீசியது. அவள் தூங்காமல் விழித்திருந்தாள். கண்ணாயிரம் அதைப் பார்த்தார். பூங்கொடி அப்பவே நான் சொல்லலை…இந்த சுடிதார்சுதாதான் மல்லிகை பூ வச்சிருப்பான்னு சொன்னல்ல..அதோ பாரு என்றார்.
பூங்கொடி கோபத்தில் பேசாம வாங்க..அங்கே இங்கே எட்டிப்பார்க்காதீங்க..எப்பப் பார்த்தாலும் அவ நினைப்புதான்… என்று சத்தம் போட்டார்.
கண்ணாயிரம் முகத்தை திருப்பிக்கொண்டு வேகமாக நடந்தார்.
பூங்கொடியும் கண்ணாயிரம் வேகமாக செல்வதை சுடிதார்சுதாவும் பார்த்தாள்.என்ன இது நள்ளிரவில்…இப்படி ஆவேசமா போறாங்க என்று சந்தேகத்துடன் நினைத்துப்பார்த்தாள்.
கண்ணாயிரம் பூங்கொடியைத் தொடர்ந்து வேகமாக நடந்தார். குடையை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். 66 அறைகளை தாண்டி..வரவேற்பு அறையை நெருங்கினார்கள்.

வரவேற்பறையில் யார் இருக்கா என்று ஆவேசத்தூடன் நெருங்கினார்கள்.அங்கே மேஜையில் தலைவைத்து குறட்டை விட்டு படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். ஆ…இண்டர்ஹாமை எடுக்காம…இப்படி தூங்குறானே..என்று பூங்கொடி ஆவேசம் அடைந்தாள். மேஜையில் இரண்டு தட்டு தட்டினார். அப்போதும் எழவில்லை. கோபம் தலைக்கேற…பூங்கொடி கையிலிருந்த பாத்திரத்தை வைத்து ஓட்டல் ஊழியரின் தலையில் நச்சென்று அடித்தார். வலி தாங்காத ஊழியர்..ஆ யாரது என்று திடுக்கிட்டு எழுந்து கண்களை கசக்கியவாறு எதிரே நிற்கும் பூங்கொடியைப் பார்த்தார். தலைவிரி கோபத்தில் கையில் பாத்திரத்துடன் நின்ற பூங்கொடியை கண்டு..அய்யோ பேய்..அய்யோ பேய் என்று கத்தினார்.
கண்ணாயிரம் முன்னே வந்து ..ஆ இது பேய் இல்லை..பூங்கொடி..என்றார்.அவர் உடம்பெல்லாம் எண்ணை பளபளக்க..தார்பாய்ச்சியபடி கையில் குடை வைத்தவாறு நிற்பதைப்பார்த்த ஊழியர் தவறாக புரிந்து கொண்டு…ஆ..திருடன்…திருடன் ..என்று கத்தியவாறு மயங்கிவிழுந்தார். ஆ..திருடனா..நான் கண்ணாயிரம்..உங்க. கஸ்டமர் என்று சொல்லிப்பார்த்தார். அவர் எழவில்லை.
-வே.தபசுக்குமார்.புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.