May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய வலைதளம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

1 min read

M.K.Stalin launched a new website to monitor the activities of PSUs

27.1.2023
பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய வலைதளத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வலைதளம்

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நிதித்துறை சார்பில் தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தொடங்கி வைத்து முதற் கட்டமாக ஐந்து நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதி கடிதங்களை வழங்கினார். மேலும், தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள வலைதளத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் துறைகளில் உள்ள புத்தொழில் மற்றும் தொழில் துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக “தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியம்” தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து, வளர்ந்து வரும் துறைகளான மேம்பட்ட உற்பத்தி, எந்திரவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, உயிர் தொழில்நுட்பம், வெப் 3.0., ஆழமான தொழில்நுட்பம், காலநிலை தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முதலீடு செய்யப்படும். இந்த நிதியமானது, தமிழ்நாடு அரசின் நிதித்துறை மற்றும் தொழில் துறையின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தில் தமிழ்நாடு அரசு 50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் டைடெல் பூங்கா ஆகியவை 50 கோடி ரூபாய் முதலீடு செய்ய உறுதி செய்துள்ளது. தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியமானது, அதன் நிதியை 2023-24-ம் நிதியாண்டில் 5௦௦ கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தின் மூலமாக நிறுவனங்களுக்கு முதலீடுகள் வழங்கிட விளம்பரங்களின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தன்னாட்சி முதலீட்டுக் குழுவால் முதல் 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடு அனுமதி கடிதங்களை வழங்கினார். அதன் விவரங்கள்: பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இ-சந்தை நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள வியாபாரிகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை விநியோகிக்க இணையச் சந்தை உருவாக்கி நடத்தி வருகிறது. இந்த நிதியிலிருந்து இ-சந்தையில் முதலீடு செய்ய 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கைகள் நிறுவனம் இணைய அடிப்படையிலான டிஜிட்டல் தளம் மூலம் அடிப்படை தொழிலாளரையும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் இணைக்கிறது. இந்த இணையதளம் தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் இயங்குமாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து கைகள் நிறுவனத்தில் முதலீடு செய்ய 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ. மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் அமைந்துள்ள பிளானிடிக்ஸ் நிறுவனம், சுகாதாரத் துறை சார்ந்த நிறுவனங்களில் உள்ள விநியோக சங்கிலியை திட்டமிடவும், இருப்புக் கணக்கினை நிர்வகிக்கவும் மென்பொருளினை உருவாக்கி நடத்தி வருகிறது. இந்த நிதியிலிருந்து பிளானி டிக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுசெய்ய தேயிலை அறுவடை செய்யும் தானியங்கி இயந்திரத்தை சூரிநோவா நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனத்திற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புற்றுநோய், இதயநோய், சிறுநீரக நோய் போன்ற தீவிர நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிற விலையுயர்ந்த மருந்துகளை மலிவான விலைகளில் இணையம் மூலம் வழங்க ஒரு டிஜிட்டல் தளத்தை மிஸ்டர் மெட் நிறுவனம் உருவாக்கி நடத்தி வருகிறது. இந்நிறுவனத்திற்கு 3.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 66 மாநில பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் செயல்படுவதை கண்காணிப்பதற்காக நிதித்துறையால் உருவாக்கப்பட்டுள்ள “நிறுவனங்களின் விதிகளை பின்பற்றுதல் மற்றும் நிதி கண்காணிப்பு முறைமை” www.ccfms.tn.gov.in என்ற வலைதளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இப்புதிய வலைதளம், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்களின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை அரசிடம் எளிதாக பகிர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மென்பொருள் பல்வேறு தகவல்களை சேகரிக்கவும், நிறுவனங்கள் சட்டம் 2013-ன் இன் விதிமீறல்களை அடையாளம் காணவும், அந்தந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் தொடர்புடைய முக்கிய அலுவலர்களுக்கு தானியங்கி எச்சரிக்கை குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் செய்திகளை உருவாக்கவும், அதன்மூலம் அத்தகைய விதிமீறல்களை சரிசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர், தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் அருண்ராய், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.