April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

சுற்றுலாத் துறை மூலம் குற்றாலம் அருவிகளை சீரமைக்க நடவடிக்கை

1 min read

Action taken to rehabilitate Kurdalam waterfalls by tourism department

1.3.2023
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிப்பகுதிகளும் சுற்றுலாத்துறை மூலம் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடிநீர் தட்டுப்பாடு

தென்காசி மாவட்டம் இயற்கை வளம் மிகுந்தது. இருப்பினும் சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதிகள் வறட்சி பகுதியாக இருக்கிறது. வரும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 20 கிராமங்களில் குடிநீர் விநியோகம் இல்லாமல் இருக்கிறது. இக்கிராமங்களில் தற்காலிகமாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதிய பருவமழை பெய்யாததால் மாவட்டத்தில் உளுந்து சாகுபடி குறைந்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு தென்காசி, சங்கரன்கோவிலில் புறவழிச்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசி புறவழிச் சாலை அமைப்பதற்காக இடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சாமில் வைத்திருக்கும் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால் புறவழிச்சாலை பணி தாமதமாகிறது. சாமில் உரிமையாளரிடம் பேசி வழக்கை வாபஸ் பெற வைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தென்காசி புறவழிச்சாலை பணிக்கு ரூ.42 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தென்காசி நகர பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் நகர பகுதிக்குள் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கனிம வளங்கள் ஓவர் லோடு ஏற்றிச் செல்வது குறித்த புகார்கள் வந்ததை அடுத்து 3 செக்போஸ்ட்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குற்றாலம் அருவி

குற்றாலத்தில் சீசன் காலங்களில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு சுற்றுலாத்துறை மூலம் நிதி உதவி எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு வசதியாக ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி ஆகியவை சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

வனவிலங்குகள் வேளாண் பயிர்களை சேதப்படுத்தி வருவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து மாவட்ட வன அலுவலர் அலுவலகம் தென்காசியில் செயல்படும்.
தென்காசியில் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டிட பணிக்கு வருவாய் துறை அமைச்சரிடம் சிறப்பு அனுமதி பெறப்படும். மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்து உள்ள கால்வாய்கள் தூர் வாரப்படும். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

மருத்துவக் கல்லூரி

தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தனியார் ஒருவர் 18 ஏக்கர் நிலத்தை தருவதாக தெரிவித்து உள்ளார். இருப்பினும் அரசு இறுதி முடிவு எடுக்க வேண்டும். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேவைப்படும் மருத்துவ சிகிச்சை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தென்காசியில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட துவங்கும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.