May 26, 2024

Seithi Saral

Tamil News Channel

கடந்த ஆண்டு சென்னையில் ரெயில் மோதி பலியானவர்கள் எண்ணிக்கை 755 ஆக அதிகரிப்பு

1 min read

The number of people killed in train collisions in Chennai last year has increased to 755

5.3.2023
கடந்த ஆண்டு சென்னையில் ரெயில் மோதி பலியானவர்கள் எண்ணிக்கை 755 ஆக அதிகரித்துள்ளது.

ரெயில் மோதி பலி

சென்னை நகர மக்களின் போக்குவரத்துக்கு மின்சார ரெயில் சேவை மிகவும் கைகொடுத்து வருகிறது. சென்னை கடற்கரை- தாம்பரம்-செங்கல்பட்டு, சென்ட்ரல்-திருவள்ளூர்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சென்னை நகருக்குள் வருவதற்கும், நகர் பகுதியில் இருந்து புறநகர் பகுதிக்கு செல்பவர்களும் பெரும்பாலும் மின்சார ரெயில் சேவையையே பயன்படுத்தி வருகிறார்கள். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பயணிகள் போதிய விழிப்புணர்வு இன்றி தண்டவாளங்களை கடக்கும் போது விபத்துக்களால் ஏற்படும் உயிர்ப்பலி கடந்த 2021-ம் ஆண்டை விட கடந்த ஆண்டு அதிகரித்து உள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ரெயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 576 பேராக இருந்த நிலையில் இது கடந்த ஆண்டு 755 பேராக உயர்ந்து உள்ளது. ரெயில்வே போலீசாரும், சமூக ஆர்வலர்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதத்தொகை விதிப்பது அதிகரிக்கப்பட்டு இருந்தாலும் உயிர்பலியும் உயர்ந்து வருவது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாலான பயணிகள் காதுகளில் ஹெட்போன் அணிந்து பாட்டு கேட்டபடி தண்டவாளத்தை கடப்பது, அலட்சியமாக ரெயில்கள் வரும்போது தண்டவாளத்தை கடப்பது உள்ளிட்டவற்றால் விபத்துக்களில் சிக்கி உயிர்ப்பலி ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாம்பரம் அருகே இரும்புலியூரில் செல்போனில் பேசிய படி தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி ஒருவர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் புறநகர் ரெயில் நிலையங்களில் பல இடங்களில் பயணிகள் பலர்,பிளாட்பாரங்களில் ரெயில்கள் நெருங்கிவரும் போது தண்டவாளத்தின் குறுக்கே குதித்து கடப்பதால் விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக அதிகாரிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, ரெயில் நிலையங்களில் வசதியான இடங்களில் மேம்பாலங்கள் இருந்தாலும் பயணிகள் அதனை பயன்படுத்துவதில்லை. தண்டவாளத்தின் குறுக்கே குதித்து கடந்து செல்வதால் விபத்தில் சிக்கி பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான விபத்துக்கள் ரெயில் நிலையங்களுக்கு அருகில் நடக்கிறது. செல்போனில் பேசிய படியும், பாட்டுகேட்டபடி செல்லும் போதும் ரெயில் வருவதை அறியாமல் பல பயணிகள் விபத்துக்களில் சிக்கிக்கொள்கிறார்கள். ரெயில் நிலையங்களில் விதிமுறைகளை மீறுபவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என்பதால் அபராதம் விதிக்க அதிகாரிகள் சிரமப்படுகிறார்கள்’ என்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.