மேகாலயா முதல்-மந்திரியாக சங்மா பதவியேற்பு; பிரதமர் மோடி பங்கேற்பு
1 min read
Sangma sworn in as Meghalaya Chief Minister; Prime Minister Modi will participate
7.3.2023
மேகாலயா முதல்-மந்திரியாக சங்மா முறைப்படி இன்று பதவியேற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்று சிறப்பித்து உள்ளார்.
மேகாலயா
60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி நடந்து முடிந்தது. இதில், தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) தலைவரான, மாநில முதல்-மந்திரி கன்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில் இருந்து போட்டியிட்டார். ஆளும் கூட்டணியில் என்.பி.பி. மற்றும் பா.ஜ.க. என இரண்டு கட்சிகளும் இருந்தபோதும், தேர்தலில் அவை தனித்தனியாகவே போட்டியிட்டன.
மேகாலயா தேர்தலில் தொங்கு சட்டசபை அமைய கூடும் என தேர்தலுக்கு பின்னான கருத்து கணிப்புகள் தெரிவித்தன. வாக்கு எண்ணிக்கைக்கு முன், பா.ஜ.க.வை சேர்ந்த அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வாவை, சங்மா நேரில் சந்தித்து அரை மணிநேரம் வரை பேசினார். ஆட்சி அமைக்க பா.ஜ.க.வின் ஆதரவை பெற இந்த சந்திப்பு நடந்தது என கூறப்பட்டது.
இந்த சூழலில், மேகாலயாவில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் முடிவில் சங்மாவின் கட்சி 26 இடங்களை கைப்பற்றியது. இதுபற்றி, முன்னாள் துணை முதல்-மந்திரி மற்றும் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வான பிரெஸ்டோன் டின்சாங் செய்தியாளர்களிடம் கூறும்போது, மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான அரசின் பதவியேற்பு விழா வருகிற 7-ந்தேதி நடைபெறும் என கூறினார்.
அதன்படி மேகாலயாவின் ஷில்லாங் நகரில் ராஜ் பவனில் முதல்-மந்திரி பதவியேற்பு நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதில், முதல்-மந்திரியாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கன்ராட் சங்மா முறைப்படி இன்று பதவியேற்று கொண்டார். பதவி பிரமாணமும் எடுத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்று சிறப்பித்து உள்ளார். இதேபோன்று, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க. மற்றும் எச்.எஸ்.பி.டி.பி. கட்சியின் தலா 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 32 பேரின் ஆதரவு அக்கட்சிக்கு உள்ளது. அக்கட்சி தனியாக மொத்தம் 26 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், ஆட்சி அமைக்க போதிய உறுப்பினர்கள் எண்ணிக்கையை அக்கட்சி பெற்று உள்ளது. எனினும், பிற கட்சிகளிடமும் அக்கட்சி ஆதரவு கேட்டு வருகிறது. அதனால், ஆதரவு உறுப்பினர்கள் எண்ணிக்கை 38 முதல் 40 ஆக அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.