பீகார் தொழிலாளர்கள் குறித்து போலி செய்தி பதிவிட்ட பா.ஜ.க. நிர்வாகிக்கு முன்ஜாமீன்
1 min read
BJP posted fake news about Bihar workers. Anticipatory Bail to Administrator
7.3.2023
தேசிய செய்தி நிறுவனங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே டுவிட்டரில் பதிவிட்டதாக பிரசாந்த் உம்ராவ் தெரிவித்துள்ளார். அவருக்கு டெல்லி ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
பீகார் தொழிலாளர்கள்
தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவ், தனது டுவிட்டர் பக்கத்தில் போலி செய்தியை பகிர்ந்தார். அந்த பதிவில், தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்த 12 புலம்பெயர் தொழிலாளர்கள் அடித்துக்கொல்லப்பட்டதாக தவறான தகவலை பதிவிட்டிருந்தார்.
வடமாநிலங்களில் உள்ள பா.ஜ.க. கட்சியின் சமூகவலைதளங்களில் இந்த போலி செய்தி பரப்பப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் அடித்துக்கொலை செய்யப்படுவதாக இந்தி நாளிதழான தினிக் பாஸ்கர் என்ற செய்திதாளில் போலியாக செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து போலி செய்திகளை பரப்பியதற்காக உத்தரபிரதேச பா.ஜ.க. செய்திதொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ், இந்தி நாளிதழ் தினிக் பாஸ்கர் தலைமை ஆசிரியர், தன்வீர் போஸ்ட் என்ற டுவிட்டர் கணக்கின் உரிமையாளர் முகமது தன்வீர் ஆகிய 3 பேர் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்காலிக முன்ஜாமீன் கோரி பிரசாந்த் உம்ராவ், டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தேசிய செய்தி நிறுவனங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே டுவிட்டரில் பதிவிட்டதாகவும், கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பிரசாந்த் உம்ராவ் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தமிழ்நாடு காவல்துறை தரப்பு வழக்கறிஞர், பேச்சுரிமை என்பது பீதியை உருவாக்குவது அல்ல என்று வாதிட்டார்.
தமிழ்நாடு காவல்துறை தரப்பின் வாதத்தை நிராகரித்த நீதிபதி, பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு மார்ச் 20-ந்தேதி வரை தற்காலிக முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.