June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கனிம வளம் கடத்தல் பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு ரவிஅருணன் பாராட்டு

1 min read

ADMK has brought a resolution drawing attention to mineral resource smuggling. Ravi Arunan praised the MLA

26.3.2023
தமிழகத்திலிருந்து நாள்தோறும் கேரளாவிற்கு சட்டவிரோதமாக கடத்தப்படும் கனிமவளக் கடத்தலை தடுத்து நிறுத்த கூறி தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ள கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ணமுரளிக்கு முன்னாள் தென்காசி அம்பாசமுத்திரம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்
கே. ரவி அருணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

கவனதீர்ப்பு தீர்மானம்

கடையநல்லூர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ணமுரளி சட்டசபையில் இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது..
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் இதற்காக முயற்சி எடுத்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது . அவருக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த சட்டமன்ற கூட்ட தொடரிலேயே இதுபோன்று அவர் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது என்பதை நினைவு கூற விரும்புகிறேன். ஆகவே கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு எளிதில் அனுமதி கிடைக்கும் என்று தோன்றவில்லை.

கனிமவள கொள்ளை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவர சட்டசபையில் பல்வேறு வழிமுறைகள் உள்ளது. அதன் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அதை தடை செய்ய அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பூஜ்யம் நேரம்

பட்ஜெட் விவாதத்தின்போது மக்கள் பிரதிநிதிகள் பேசும் வாய்ப்பு கிடைக்கும் போது இது குறித்து பேசலாம்
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் பூஜ்யம் நேரம் என்று சொல்லக்கூடிய நேரமில்லா நேரத்தில் இந்த பிரச்சனை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சபாநாயகரிடம் சிறப்பு அனுமதி வாங்கி பேசலாம். அரசு அனுமதி மறுத்தால் வெளிநடப்பு செய்து கூட அரசின் கவனத்தை ஈர்க்கலாம்.

கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை ஆகியவை தொழில் துறையின் கீழ் வருவதால் அத்துறை மானிய கோரிக்கையின் போது இதுகுறித்து பேசி அரசின் கவனத்தை ஈர்க்கலாம்

போலி எடை சீட்டை வைத்துக்கொண்டு அதிக அளவில் கனிமங்கள் கடத்துவதை கண்காணிக்க வேண்டிய தொழிலாளர் நல வாரியம் தனது கடமையை செய்ய தவறுவதால் தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கையிலும் இப் பிரச்சனையை எழுப்பலாம்.
கனிமவள கடத்தலால் அரசுக்கு ஏற்படுகின்ற பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை கண்டுகொள்ளாத வருவாய்த்துறை மானிய கோரிக்கையிலும் பிரச்சினை எழுப்பலாம். அளவுக்கு மீறிய பாரத்தை கனரக வாகனங்களில் ஏற்றி சாலைகளில் செல்வதால் சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி துறை மானிய கோரிக்கையின் போது பிரச்சினையை எழுப்பலாம்

அளவுக்கு அதிகம்

கனரக வாகனங்களால் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதை கண்டு கொள்ளாத குடிநீர் வடிகால் வாரியத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பான மானிய கோரிக்கையிலும் இப்பிரச்சனையை சுட்டிக் காட்டலாம்.
குவாரிகளில் அனுமதிக்கப்பட்டதை விட அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் அடியோடு வற்றி விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதை வேளாண்மை துறை மானிய கோரிக்கையிலும் தெரிவிக்கலாம்.
சாலை பாதுகாப்பு விதிகளை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து துறை மானிய கோரிக்கையிலும், கனிமவளை கொள்ளை குறித்து காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருப்பதால் காவல்துறை மானிய கோரிக்கையின் போதும், குவாரிகளில் சக்தி வாய்ந்த வெடி பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பை கண்டுகொள்ளாத மாசுகள் ககட்டுப்பாடு வாரியத்தின் கவனத்தை ஈர்க்க வனத்துறையின் மானிய கோரிக்கையின் போதும் இப்பிரச்சினையை எழுப்பலாம்.

ஒவ்வொரு துறையும் மானியக் கோரிக்கையின் போது தங்கள் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டமன்ற ஒப்புதலுக்கு தாக்கல் செய்வார்கள் அந்த நிதி ஒதுக்கீட்டை உறுப்பினர்கள் வெட்டு தீர்மானம் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு வரலாம்.
இப்படி பல வழிகளில் முயற்சி செய்து கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டுகிறேன் இப்படி ஒவ்வொரு துறைகள் சம்பந்தப்பட்ட மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போதும் இது குறித்து சுட்டிக் காட்டி அரசின் கவனத்தை ஈர்ததால் அதற்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அண்டை மாநிலமான கேரளாவிற்கு தமிழகத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள காய்கறிகள், மலர்கள், பல்லாயிரம் லிட்டர் பால், கால்நடைகள், வைக்கோல் ஆகியவை கொண்டு செல்லப்பட்டுகிறது.
இந்த வகையான பொருட்களை நம்மால் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உற்பத்தி செய்து கொள்ள முடியும். ஆனால் இயற்கை அளித்த நன்கொடையான கனிம வளங்களை ஆயிரம் ஆண்டுகளானாலும் நம்மால் உற்பத்தி செய்ய முடியாது. கேரளாவில் காய்கறிகள், மலர்கள், பால் போன்றவை கேரளாவில் கிடைப்பதில்லை. அதனால் அதை அனுப்புவதில் ஒரு நியாயம் உண்டு.
ஆனால் அம் மாநிலத்தில் நம்மை விட அதிக கனிம வளங்ககள் இருந்தும் இயற்கையை பாதுகாக்கும் பொருட்டு அம் மாநில அரசு குவாரிகளை மூடி தடை விதித்துள்ள நிலையில் நமது இயற்கை வளத்தை வெட்டி அங்கு அனுப்புவதில் என்ன நியாயம் இருக்கிறது? அவர்கள் வாழ நம் வருங்கால சந்ததியினர் பலிகடா ஆக வேண்டுமா என்ன?

இறைச்சி கழிவு

மேலும் கனிம வளங்களை இறக்கிவிட்டு மீண்டும் தமிழகம் வரும் லாரிகளில் மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள் கொண்டுவரப்பட்டு தமிழக கிராமங்களில் கொட்டப்படும் அவலமும் தொடர்கிறது.
இதை மனதில் கொண்டு சட்டமன்றத்தில் குரல் கொடுங்கள். உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.அதன் மூலம் நமது இயற்கை வளம் காக்கப்படட்டும் என ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.
இவ்வாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே ரவி அருணன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.