September 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் ரூமுக்குள் வந்த வெள்ளம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Flood in Kannayiram Room/ Comic Story/ Tabasukumar

2.4.2023
குற்றாலத்தில் வெள்ளம் என்பதால் அங்கு குளிக்கமுடியாத கண்ணாயிரம் தன் மனைவி பூங்கொடியுடன் ஓட்டலுக்கு வந்தார். குற்றால அருவியில் குளிக்கமுடியவில்லையே என்று வருந்திய கண்ணாயிரத்திடம் ஓட்டலில் ஷவரில் குற்றால அருவி தண்ணீர்தான் வருகிறது. யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக குளியுங்கள் என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் உற்சாகத்துடன் பாத்ரூமுக்குள் சென்று கதவை பூட்டினார்.
ஷவரில் தண்ணீர் வருவதற்காக குழாயை திருக்கியபோது அது கையோடு கழன்றுவர தண்ணீர் பாத்ரூமுக்குள் கொட்டோ கொட்டென்று கொட்டி ரூமுக்குள்ளும் பெருகி ஓடியது. குற்றால அருவியில் வெள்ளம் என்பதால் ஷவரிலும் தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது என்று கண்ணாயிரம் நினைக்க பூங்கொடியோ அறைக்குள் தண்ணீர்பெருகி ஓடியதால் பயந்துபோய்.. ஏங்க பாத்ரூமில் என்ன பண்ணுனிங்க.. தண்ணீ பெருகி ஓடுது. கதவை திறங்க என்று சொல்ல கண்ணாயிரம் கதவை திறந்தார்.பூங்கொடி ஓடிவந்து பார்த்தபோது அங்கே கண்ணாயிரம் உடைந்த குழாயின் கீழே அமர்ந்து அந்த குழாய் வழியாக கொட்டிய தண்ணீரில் தலையை நன்றாக தேய்த்து குளித்தபடி குற்றால அருவியிலே குளித்ததுபோல் இருக்குதா என்று பாட்டுபாடியவாறு இருந்தார்.
அதைப் பார்த்ததும் பூங்கொடி டென்சனாகி.. ஏங்க..என்ன அநியாயம் பண்ணுறீங்க..குழாயை திருக்கிறதுக்கு பதிலாக.. உடைச்சி எடுத்திட்டியளா.. அய்யோ..அய்யோ..ரூம்பெல்லாம் தண்ணியா போச்சு..போங்க ஒரு துணியை எடுத்துட்டுவாங்க தண்ணியை அடைப்போம் என்று கத்தினார்.
கண்ணாயிரம்..அதிர்ச்சியாக..என்ன சொல்லுற.. பூங்கொடி..குற்றால அருவியிலே வெள்ளம் என்பதால்தானே ஷவரில் தண்ணீர் கொட்டுது.. அதுக்கு நான் என்ன செய்வேன் என்க.. பூங்கொடி கோபமாக..போங்க.. எரிச்சலை ஊட்டாதீங்க.. போயி துணியை எடுத்துட்டுவாங்க என்று கத்த கண்ணாயிரம்..ம்.. சுகமா குளிக்கவிடமாட்டேங்கிறாங்களே..என்று முணங்கியவாறு துணியை எடுக்க பாத்ரூமை விட்டு வெளியே வந்தார்.

அங்கே அறையெல்லாம் தண்ணி பெருகி ஓடியது.. இது என்ன ரூம்பெல்லாம் தண்ணி..அடடே..என்றபடி ஒரு கர்ச்சிப் துணியை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் ஓடினார்.
பூங்கொடியைப்பார்த்து..பூங்கொடி..வேகமாக இந்த கர்ச்சிப்பை வைத்து குழாயை அடை.. அப்பத்தான் ரூமுக்குள் தண்ணிவராம இருக்கும் என்று சொல்ல பூங்கொடி ஆத்திரத்தில்…உங்க பாதிவேட்டியை கொடுங்க என்று சொல்ல. .பூங்கொடி நான் வேற எதுவும் போடல.. துண்டை உடுத்திட்டு வேட்டி தர்ரேன் என்றபடி வெளியே ஓடிவந்தார்.
அடி ஆத்தே..சுத்தி சுத்தி வேட்டிக்குத்தான் ஆபத்துவருது..ம் ஆபத்துக்கு பாவம் இல்லை என்றபடி ஒரு துண்டை எடுத்து உடுத்தபடி வேட்டியை உருவி பூங்கொடியிடம் கொடுத்தார்.
அவர் அதை வாங்கி உடைந்த குழாயினுள் திணித்தபோதும் தண்ணீர் வருவது நிற்கவில்லை.
என்னடா வம்பா போச்சு..குழாயை வேற உடைச்சுப்புட்டாரு.. என்னசெய்யுறது என்றபடி வேட்டியை முழுமையாக குழாயினுள் திணித்தார்.
வேட்டிதான் உள்ளே போனதே ஒழிய தண்ணீர் கொட்டுவது குறையவில்லை. கண்ணாயிரம் துண்டை கட்டியவாறு அங்கும் இங்கும் நடந்தவாறு என்ன செய்யலாம் என்று யோசித்தபடி இருந்தார்.
அப்போது..யாருங்கே ரூமிலே என்று கதவை தட்டும் சத்தம் பலமாக கேட்டது. கண்ணாயிரம் பதிலுக்கு நான்தாங்க கண்ணாயிரம் பேசுறேன்.. என்னவேணும் என்று உள்ளிருந்து குரல்கொடுக்க வெளியில் நின்ற ஓட்டல் ஊழியர்கள்.. யோவ் ரூமுக்குள்ளிருந்து தண்ணீர் பெருகிவந்து..வெளியே வாசல்வரைக்கும் வந்து கொட்டுது..என்னய்யா ஆச்சு..கதவை திறய்யா என்று கத்தினர்.
கண்ணாயிரம் சலிப்புடன்.. என்னங்கடா..உங்களால வம்பா இருக்கு என்றவாறு கதவை திறந்தார்.
வெளியே நின்ற ஓட்டல் ஊழியர்கள்..என்னய்யா..ரூமிலே இவ்வளவு தண்ணி என்று கண்ணாயிரத்திடம் எகிற அவரோ..என்னங்க..குற்றாலத்திலே வெள்ளமுன்னா ஓட்டல் ஷவரிலே குற்றல அருவி வெள்ளமா வராதா.. விவரம் தெரியாதவங்களா இருக்கியளே என்று கண்ணாயிரம் திட்டினார்.
அதைக்கேட்ட. ஊழியர்கள் கோபத்தில் யோவ்..அருவி வெள்ளம் ஷவரிலே வருதுன்னு யாருய்யா சொன்னா…ஓட்டல் பக்கத்திலே போர்போட்டிருக்கு.. அங்கிருந்து ஓட்டல் பாத்ரூமுக்கு தண்ணி வருது..புரியுதா என்றனர்.
கண்ணாயிரம்..அப்படியா..பிறகு ஏன் ஷவரில் தண்ணி கொட்டுது..குழாயை திருக்கினா..கையோடு ஏங்க கழன்று வருது.. உருப்படியில்லாத குழாயைவச்சிருக்கியே.. என்ன நினைச்சிக்கிட்டிருக்கிய என்று கண்ணாயிரம் தன்பங்குக்கு சத்தம்போட்டார்.
என்ன குழாய் கழன்றுட்டா…போச்சுடா..அதை ஏன்யா அழுத்தி திறந்த…மெதுவா திறக்கவேண்டியதுதானே.. என்றபடி பாத்ரூமுக்கு செல்ல முயல..கண்ணாயிரமோ..அங்கே லேடீஸ் இருக்காங்க போகாதீங்க.. குழாயை அடைச்சிக்கிட்டு இருக்கா..போகாதீங்க என்று மிரட்டினார்.
யோவ் புரியாம பேசாதய்யா..தண்ணி ஓட்டல் வாசல்வரைக்கும் வந்துட்டு.. நாங்க உடனடியா குழாயை சரிபண்ணணும்.இல்லைன்னா இந்த ரூம்பே தண்ணியிலே மூழ்கிடும்..உள்ளே இருக்கிறவங்களை வெளியே வரச்சொல்லுங்க என்று கத்த பூங்கொடி.. யாருங்க சத்தம்போடுறது என்றபடி கழன்ற பாதி குழாயுடன் வெளியே வந்தார்.
என்னங்க குழாய் வச்சிருக்கிய..ஒரு திருக்கு திருக்குன்னா கையோடு வருது.. இன்னாங்க குழாய் என்று ஓட்டல் ஊழியர்களிடம் பூங்கொடி கொடுக்க..ஓட்டல் ஊழியர்கள் தலையில் அடித்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தனர்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.