May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

மகாபாரதக் கதைகள்/2. ரிஷியின் கட்டளையால் கண்பார்வை இழந்த சீடர்/அமுதன் என்ற தனசேகரன்

1 min read

Stories of Mahabharata/2. A disciple who lost his sight at the behest of a Rishi. / Amuthan/ Dhanasekaran

2/4/2023
கங்கை நதியின் தாராள குணத்தால் அந்தப் பகுதி வனப்பு மிக்கதாக இருந்தது. அங்கே மிகப் பெரிய குளம். அந்தக் குளத்தில் இருந்து சற்றுத் தொலைவில் ஒரு ரிஷியின் அழகான ஆசிரமம் அமைந்து இருந்தது. அந்த ஆசிரமத்தின் தலைவர் தவுமியர் என்ற புகழ் பெற்ற ரிஷி. அவரிடம் உபமன்யு, ஆருணி, பைதன் என்ற மூன்று பேர் சீடர்களாக இருந்தார்கள். இதில் ஆருணி என்ற சீடர் குளத்தின் உடைந்த கரையை அடைத்த கதையை ஏற்கனவே பார்த்துவிட்டோம். இனி ரிஷின் கட்டளையால் கண் பார்வை இழந்த சீடர் கதையை காணலாம்.

ரிஷி தவுமியரின் மற்றொரு சீடரான உபமன்யுவுக்கு வேறு ஒரு வகையான அனுபவம் கிடைத்தது.
ஒரு நாள் ரிஷி தவுமியர், தனது சீடர்களில் ஒருவரான உபமன்யுவை அழைத்து, ‘’நீ போய் நமது பசுக்களை மேய்த்துவிட்டு வா’’ என்று உத்தரவிட்டார்.
ஆசிரமத்தின் ஒரு பகுதியில் இருந்த பசுக்களை பகல் முழுவதும் மேய்த்த உபமன்யு, மாலையில் ரிஷியை சந்தித்து, ‘’பசுக்களை மேய்த்துவிட்டு இப்போது தான் திரும்பி வருகிறேன்’’ என்றார்.
அப்போது உபமன்யு சிறிதும் களைப்பு, பசி இன்றி உற்சாகமாக இருப்பதைப் பார்த்த ரிஷி தவுமியர், ‘’உபமன்யு, நீ இவ்வளவு வேலைகள் செய்த பின்னரும் எப்படி உற்சாகமாக இருக்கிறாய்? உனக்குப் பசிக்கவில்லையா?’’ என்று கேட்டார்.
‘’நான் பசுக்களை மேய்த்த இடத்தில் அங்கே இருந்தவர்களிடம் பிஷை எடுத்துச் சாப்பிட்டேன். அதனால் இப்போது பசிக்கவில்லை’’ என்று உபமன்யு கூறினார்.
‘’இனிமேல் என்னிடம் காட்டாமல் எதனையும் நீ சாப்பிடக் கூடாது’’ என்று ரிஷி கண்டிப்புடன் கூறினார்.
மறுநாள் பசுக்களை மேய்த்துவிட்டுத் திரும்பிய உபமன்யு, தனக்குக் கிடைத்த பிஷையை குருவிடம் கொடுத்துவிட்டார்.
ஆனால் அப்போதும் அவர் பசி இல்லாமல் உற்சாகமாக இருப்பதைப் பார்த்த குரு அவரிடம், ‘’நீ பிஷை எடுத்ததை என்னிடம் கொடுத்துவிட்டாய். ஆனாலும் நீ பசி இல்லாமல் இருப்பது எப்படி?’’ என்று வினவினார்.
அதற்கு உபமன்யு, ‘’முதலில் எடுத்த பிஷை முழுவதையும் தங்கள் கட்டளைப்படி தங்களுக்குக் கொடுத்துவிட்டேன். இரண்டாவது முறை எடுத்த பிஷையை நான் உட்கொண்டேன்’’ என்றார்.
‘’நீ இரண்டு முறை பிஷை எடுத்ததால், மற்றொருவருக்குக் கிடைக்க இருந்த பிஷையை தடுத்துவிட்டாய். எனவே இனிமேல் ஒரு முறைக்கு மேல் பிஷை எடுக்கக் கூடாது’’ என்று உபமன்யுவுக்கு ரிஷி தடை விதித்துவிட்டார்.

ஆனால் அதனைத் தொடர்ந்து வந்த நாட்களிலும், பசுக்களை மேய்த்துவிட்டுத் திரும்பிய உபமன்யு, பசி இல்லாமல் வழக்கம்போல உற்சாகமாகவே இருப்பதை அறிந்த தவுமியர், ‘’இப்போது நீ எப்படி சாப்பிடுகிறாய்? பசியின்றி காணப்படுவது எப்படி?’’ என்று கேட்டார்.
அதற்கு உபமன்யு, ‘’நான் மேய்க்கும் பசுக்களின் பாலைக் குடித்துப் பசியாறினேன்’’என்றார்.
‘’பசுக்களை மேய்ப்பதுதான் உனது வேலை. அந்த பசுக்களின் பாலைக் குடிக்க நான் உனக்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே இனிமேல் பசுக்களின் பாலைக் குடிக்கக் கூடாது’’ என்று தவுமியர் உத்தரவிட்டார்.
அதன் பிறகும் உபமன்யு, பசுக்களை மேய்த்து விட்டு வரும் போது உற்சாகமாகவே இருந்தார்.
‘’பிஷையும் எடுப்பது இல்லை. பசுக்களின் பாலையும் குடிப்பது இல்லை. இப்போதும் நீ பசி இல்லாமல் இருப்பது எப்படி?’’ என்று உபமன்யுவிடம் தவுமியர் கேட்டார்.
‘’பசுக்களின் மடியில் பாலைக் குடித்த கன்றுகளின் வாய் அருகே ஒதுங்கி இருக்கும் நுரையைக் குடித்தேன். இதனால் எனது பசி அடங்கியது’’ என்று உபமன்யு கூறினார்.
‘’கன்றுக் குட்டிகள் உன் மீது உள்ள பாசத்தால் பாலைக் குடிக்கும்போது, அதிக நுரையை வாயில் தள்ளுகின்றன. இது கன்றுகளுக்கு நீ செய்யும் துரோகம். எனவே இனிமேல் கன்றுகளின் வாயில் உள்ள நுரையையும் சாப்பிடக் கூடாது’’என்று தவுமியர் கண்டிப்புடன் கூறினார்.
குருவின் கட்டளையால், பசுக்களை மேய்த்தபோது எதுவும் சாப்பிடாமல் இருந்த உபமன்யு, பசியால் வாடினார். பசியைத் தணிப்பதற்காக, வேறு வழி இல்லாமல் அங்கே கிடைத்த எருக்க இலைகளைச் சாப்பிட்டார்.
உப்பும், கைப்பும், காரமும் கொண்ட எருக்க இலை, ஜீரண சமயத்தில் அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும் என்பதால், அதனைச் சாப்பிட்ட உபமன்யு, கண் பார்வையை இழந்தார்.
பார்வை தெரியாததால், மாலை நேரத்தில் தட்டுத் தடுமாறி ஆசிரமம் திரும்பியபோது அவர், வழி தவறி அங்கே இருந்த பாழும் கிணற்றில் விழுந்துவிட்டார்.
இரவு வெகு நேரமாகியும் உபமன்யு ஆசிரமத்துக்குத் திரும்பாததால் ரிஷி தவுமியர் மற்ற சீடர்களிடம். ‘’எதுவும் சாப்பிடக் கூடாது என்று உபமன்யுவுக்கு நான் தடை விதித்தேன். இதனால் அவன் கோபித்துக் கொண்டு ஆசிரமம் திரும்பாமல், வேறு எங்காவது சென்று இருக்கலாம்’’ என்று சொன்னார்.
இதனைத் தொடர்ந்து அனைவரும், உபமன்யுவைத் தேடுவதற்காகப் புறப்பட்டனர்.
அந்தச் சமயத்தில் தவுமியர், ‘’உபமன்யுவே நீ எங்கே இருக்கிறாய்’’ என்று சப்தம் போட்டுக் கூப்பிட்டார்.
அப்போது கிணற்றுக்குள் இருந்த உபமன்யு, ‘’ குருவே. நான் எருக்க இலைகளைச் சாப்பிட்டதால் பார்வை இழந்து இந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்டேன்’’ என்று குரல் கொடுத்தார்.
இதைக் கேட்ட தவுமியர் வருத்தம் அடைந்தார்.
‘’நீ அங்கே இருந்தபடியே, அஸ்வினீ தேவர்களைத் துதி செய். அவர்கள் உனக்குப் பார்வையை அளிப்பார்கள்’’ என்று ரிஷி தவுமியர் ஆலோசனை கூறினார்.
இதனைக் கேட்ட உபமன்யு, அஸ்வினீ தேவர்களைத் துதி செய்தார். அஸ்வினீ தேவர்கள் உள்ளம் மகிழ்ந்து, உபமன்யுவுக்குப் பார்வையை வழங்கினார்கள்.
பார்வை கிடைத்த உபமன்யு, அந்தக் கிணற்றில் இருந்து வெளியே வந்து, நடந்த அத்தனை விவரங்களையும் தனது குருவிடம் கூறினார்.
தனது ஒவ்வொரு கட்டளையையும் சிரமேற்கொண்டு அப்படியே கடைபிடித்த உபமன்யுவுக்கு ரிஷி தவுமியர் ஆசி வழங்கினார்.
இதன் காரணமாக உபமன்யு வேதங்கள், சாஸ்திரங்களில் சிறந்தவர் ஆனார்.
இதே போல, தவுமியரின் மற்றொரு சீடரான பைதன், தனது குரு கூறிய அத்தனை கட்டளைகளையும், சிரமமான வேலைகளையும் சலிக்காமல் செய்து அவரிடம் நல்ல பெயர் பெற்றார். அவரையும் தவுமியர் ஆசி கூறி மகான் ஆக்கினார். பைதன் என்ற இந்தச் சீடரின் அனுபவம் வித்தியாசமானது.
அதனைத் தொடர்ந்து பார்க்கலாம்.(தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.