May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆஸ்கார் விருது படத்தில் இடம்பெறற பாகன் தம்பதியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டு

1 min read

Prime Minister Modi personally met and praised the Bagan couple who will be featured in the Oscar award film

9.4.2023
ஆஸ்கார் விருதுபெற்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற முதுமலை பாகன் தம்பதியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

புலிகள் காப்பகம்

பிரதமர் மோடி இன்று காலை மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு வந்தார். அங்கு புலிகள் காப்பகத்தை பார்வையிட்டார். பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள பல்வேறு வனப்பகுதிகளை அவர் வாகனத்தில் 22 கிலோ மீட்டர் தூரம் சென்று சுற்றி பார்த்தார். பின்னர் பிரதமர் மோடி பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் காலை 10.30 மணிக்கு முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு வந்தார்.
அங்கு முகாமில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை பிரதமர் மோடி பார்வையிட்டு அந்த யானைகளுக்கு கரும்பு, பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்கினார்.

ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி யானைகளை நேரில் பார்வையிட்டதுடன் அந்த யானைகளுக்கும் பழங்கள் வழங்கினார். மேலும் தாயில்லா குட்டி யானைகளை பராமரித்த தம்பதியும், ஆஸ்கர் விருதினை வென்ற ஆவணப்படத்தில் இடம் பிடித்தவர்களுமான பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார்.
அப்போது அவர்களை பாராட்டி, பரிசுகள் வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் கவுரவப்படுத்தினார். அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். தெப்பக்காடு யானைகள் முகாமில் மூத்த பாகன்களாக பணியாற்றி வரும் திருமாறன், மாரிக்கன், மாறன், குள்ளன், தேவராஜ் ஆகிய 5 பேரை சந்தித்து, அவர்களிடம் காட்டு யானைகளை பிடிக்கும்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து கேட்டறிந்தார். யானைகளுக்கு கொடுக்கப்படக்கூடிய உணவு வகைகள் குறித்தும், அவற்றை பராமரித்து வரும் முறை குறித்தும் பாகன்களிடம் கேட்டறிந்தார்.
புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட மீன் காளன், பொம்மன், மாதன் ஆகியோரிடம் பேசி, அந்த புலியை பிடித்தது குறித்தும், அதனை பராமரித்து வருவது குறித்தும் கேட்டறிந்தார்.
முகாமில் சிறப்பாக பணியாற்றி வரும் 12 கள பணியாளர்களுக்கும், 8 முன் கள பணியாளர்களுக்கும் பிரதமர் மோடி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பின்னர் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை மற்றும் புலிகள் பாதுகாப்பு குறித்து வனத்துறையினரிடம் கேட்டறிந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த புலிகள் காப்பகங்களின் கள இயக்குனர்களுடன் புலிகள் பாதுகாப்பு திட்டம் குறித்து பிரதமர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, கலெக்டர் அம்ரித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதுமலையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி மீண்டும் மைசூர் செல்வதற்காக தெப்பக்காடு முகாமில் இருந்து மசினகுடியில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிகாப்டர் தளத்திற்கு காரில் வந்தார். அப்போது அவருக்கு பாரம்பரிய உடை அணிந்த பழங்குடியின மக்கள் மற்றும் நீலகிரி மாவட்ட பா.ஜ.கவினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் மசினகுடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் பிரதமர் மோடி மைசூர் சென்றார்.
அழிவின் பட்டியலில் இருந்த புலிகளை காக்கும் நோக்கில் கடந்த 1973-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் புராஜெக்ட் டைகர் திட்டம் என்ற புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு இந்த மாதத்துடன் 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து புலிகள் காப்பகங்களிலும் 50-வது ஆண்டு புலிகள் பாதுகாப்பு திட்ட பொன் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இன்று மைசூருவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கர்நாடக அரசு சார்பில், புலிகள் பாதுகாப்பு திட்ட 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். பிரதமர் வருகையையொட்டி முதுமலை, கூட லூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி சங்கர் தலைமையில், மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் மேற்பார்வையில் 1700 போலீசார் பிரதமர் நிகழ்ச்சிகள் நடந்த இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.