உத்தரபிரதேசத்தில்முன்னாள் எம்.பி. அத்திக் அகமதுவின் மகன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
1 min read
Former MP in Uttar Pradesh Atiq Ahmed’s son shot dead in an encounter
13.4.2023
உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அத்திக் அகமதுவின் மகன் மற்றும் அவரது கூட்டாளி போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
எம்.எல்.ஏ. கொலை
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான அத்திக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் அத்திக் அகமது மற்றும் அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். ஆசாத், குலாம் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.
சுட்டுக்கொலை
இந்நிலையில், அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோர் நேற்று போலீசாரால் நடத்தப்பட்ட என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜான்சியில் அவர்களை மாநில அதிரடிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு டிஜிபி தெரிவித்தார்.
உமேஷ் பால் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் அத்திக் அகமது மற்றும் அவரது கூட்டாளிகள் கான் சவுலத், தினேஷ் பாசி ஆகியோருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.