June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

அரசு அதிகாரிகள் மீது முன்னாள் எம்எல்ஏ கே.ரவி அருணன் முதல் அமைச்சருக்கு புகார்

1 min read

Former MLA K. Ravi Arunan complained to the Chief Minister against the government officials

9.5.2023
தமிழ்நாடு முதலமைச்சருக்கு முன்னாள் தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ
கே. ரவிஅருணன் தென்காசி மாவட்ட அரசுத்துறை அதிகாரிகள் மீது புகார் தெரிவித்து புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கனிமங்கள்

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம். தென்காசி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் கனிம வளம் அடியோடு அழிந்து விடும் அபாயம் இருக்கிறது . சாலையில் பயணம் செய்யவே பொதுமக்களும் பள்ளி செல்லும் குழந்தைகளும் அச்சப்படும் அளவிற்கு சாலை விதிகளை மீறி அதிக பாரத்துடன் கனரக வாகனங்கள் அதிவேகமாகவும் பயணிக்க போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர் . இரண்டு யூனிட் பாஸ் வைத்துக் கொண்டு 15 யூனிட் வரை கனிம வளங்கள் கடத்தப்படுவதால் அரசுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது .

நமது எதிர்கால சந்ததியின் நலன் காக்க இந்த கனிம வளத்தை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தங்களிடம் முறையிட்டிருக்கிறோம் . இந்த கனிம வளக்கொள்ளையை கண்டுபிடித்து தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகள் அதற்கு உறுதுணையாக இருப்பது வேடிக்கையாக மட்டுமல்ல வேதனையாகவும் இருக்கிறது.

போராட்டம்

இந்நிலையில் இந்த கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி அரசின் கவனத்தை ஈர்க்கவும் ஜனநாயக ரீதியில் எங்களது எதிர்ப்பை தெரிவிக்கவும் இம்மாதம் 13 ஆம் தேதி தென்காசி மாவட்ட கனிம வள இயக்கம் சார்பில் தமிழக கேரள எல்லை பகுதியான புளியரையில் மாபெரும் மறியல் போராட்டம் ஒன்றை நடத்த இருக்கிறோம் . கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே இது குறித்து முடிவு செய்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் இதை முறைப்படி தெரியப்படுத்தி இருக்கிறோம் .

தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளில் நாங்கள் தீவிரமாக இருந்து வருகிறோம் . ஜனநாயக ரீதியில் அறவழியில் நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு உரிய அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கும் விண்ணப்பித்திருக்கிறோம் .

இந்த நிலையில் எங்களது போராட்டத்தை ஒடுக்கும் விதமாக காவல்துறையினர் கோட்டாட்சியர் மூலம் எங்களது அமைப்பின் நிர்வாகிகள் சிலருக்கு 107 பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பி அவர் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் . என்று கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார்கள் . இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும் . நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடவில்லை. காந்திய வழியில் அமைதியான முறையில் எங்களது எதிர்ப்பை தெரிவிக்க இருக்கிறோம். இந்த போராட்டத்தின் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கூறப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது . ( இதற்கு முன் இது போன்ற போராட்டத்தை நாங்கள் ஏற்கனவே நடத்தியுள்ளோம் அப்போது ஒரு சிறு அசம்பாவித மோ சட்டம் ஒழுங்கு பிரச்சனையோ ஏற்படவில்லை என்பதையும் தங்களது மேலான கவனத்திற்கு தெரியப்படுத்துகிறோம் ) போராட்டத்தில் யார் கலந்து கொள்வார்கள் என்று உறுதிபட தெரியாத நிலையில் குறிப்பிட்ட சிலரை அழைத்து காவல்துறையினர் மிரட்டி போராட்டத்தை ஓடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது . இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது போன்றதாகும்.
இதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன் . மேலும் எங்களது போராட்டம் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்காது .
எங்களது போராட்டத்தின் நோக்கம் எதிர்ப்பு தெரிவித்து சிறைக்கு செல்வதுதான் . இந்த நிலையில் இதுபோன்று போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அதிகாரிகள் செயல்படுவது கண்டனத்துக்குரியது- ஆகவே தாங்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சாத்வீகமான எங்களது போராட்டத்திற்கு எந்த இடையூறும் ஏற்படா வண்ணம் உத்தரவிட வேண்டும் என்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை தடை செய்ய ஆவண செய்ய வேண்டும் என்றும் மீண்டும் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன் .. நன்றி
இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *