சோதனைக்கு வந்த வருமானவரித் துறை அதிகாரிகளுடன் திமுகவினர் தள்ளுமுள்ளு
1 min readDMK’s tussle with Income Tax officials who came for inspection
26.5.2023
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
வருமானவரி சோதனை
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்களான துணை மேயர் தாரணி சரவணன், கொங்கு மெஸ் மணி வீடுகள் உள்பட 10 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருப்பவர் வி .செந்தில் பாலாஜி. கரூர் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு ரத்தான நிலையில் மீண்டும் இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று காலை அமைச்சரின் சகோதரர் அசோக் குமார் வசிக்கும் ராமகிருஷ்ண புரத்தில் உள்ள அவரது வீடு மற்றும் ராயனூரில் வசிக்கும் அமைச்சரின் ஆதரவாளரும் கரூர் மாநகராட்சியின் துணை மேயருமான தாரணி சரவணன் மற்றும் கொங்கு மெஸ் மணி, கட்டிட காண்ட்ராக்ட் ஒப்பந்ததாரரான எம் சி எஸ். சங்கரின் அலுவலகமான 80 ரோட்டில் உள்ள அலுவலகம் உள்பட பத்து இடங்களில் சென்னையைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 100 பேர் கொண்ட குழுவினர் குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
வாக்குவாதம்
இதனிடையே ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சரின் தம்பி அசோக் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரி பெண் ஒருவர் சோதனை நடத்த முயன்ற போது அவரிடம் அங்கு குழுமியிருந்த திமுகவினர் அடையாள அட்டை காண்பிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் அதிகாரிக்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் திமுக தொண்டர் குமார் என்பவரை பெண் அதிகாரி தாக்கியதாக கூறப்படுகிறது. அப்பொழுது குமாருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அங்கிருந்த திமுக தொண்டர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே திமுக தொண்டர் குமாரை தாக்கியதாக பெண் அதிகாரியை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் பெண் அதிகாரி வந்த காரை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரூர் நகர காவல் நிலையத்தினர் சம்பவத்திற்கு வந்து பெண் அதிகாரியை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி பெண் அதிகாரியை கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் அரசியல் வட்டாரத்தில் மிகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.