September 18, 2024

Seithi Saral

Tamil News Channel

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கக் கூடாது: செந்தில்பாலாஜியின் 6 முக்கிய உத்தரவு

1 min read

Tasmac shops should not sell liquor at extra cost: Senthilbalaji’s 6 key directives

26/5/2023
டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும், மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட 6 முக்கிய உத்தரவுகளை அமைச்சர் செந்தில்பாலாஜி பிறப்பித்துள்ளார்.

டாஸ்மாக்

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை துணை ஆட்சியர்களின் ஆய்வுக் கூட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் விசாகன் மற்றும் தலைமை அலுவலக அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் 6 அறிவுரைகளை அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கி உள்ளார். இதன் விவரம் வருமாறு:-

அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் நண்பகல் 12.00 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10.00 மணிக்கு மூடப்பட வேண்டும் இதில் எந்தவித விதிமீறல்கள் இருக்கக் கூடாது தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும், அனைத்து பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்கப்பட வேண்டும். மாவட்ட மேலாளர்கள் அனைவரும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விலைப்பட்டியல்

மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களின் கூடுதல் விற்பனை விலைப் பட்டியல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாக தெரியும்படி மதுபானக் கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும். இதனை அனைத்து மாவட்ட மேலாளர்களும் உறுதி செய்ய வேண்டும்.

முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல அளவிலான பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் தத்தம் மாவட்டங்களில் சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் ஏதேனும் செயல்படும்பட்சத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலி மதுபானம்

அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாரயம், போலி மதுபானங்கள் விற்கப்படுவதை கண்டறியவும் மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களை கண்டறிந்து, காவல் துறைக்குத் தெரிவித்து, காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட மேலாளர்கள் தினம்தோறும் எந்தவொரு மாவட்டத்திலும் மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக் கூடாது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட வேண்டும், அப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.