August 3, 2026

Seithi Saral

Tamil News Channel

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி

1 min read

10 people, including Yuvraj, have been sentenced to life imprisonment in the Gokulraj murder case

2.6.2023
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

கோகுல்ராஜ் கொலை

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், கோகுல்ராஜ் இறப்பு விவகாரம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணைக்கு பின்பு, இது தொடர்பாக சங்ககிரியை சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடக்கத்தில் நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட இந்த கொலை வழக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இங்கு 2 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜோதிமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவர் மீதான வழக்கு மட்டும் நாமக்கல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் கைதானவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண், குமார் என்ற சிவகுமார் (43), சதீஷ்குமார் (33), ரகு என்ற ஸ்ரீதர் (29), ரஞ்சித் (29), செல்வராஜ் (39) ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு (51) ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகிய இருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் அவர்கள் அனைவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சம்பத்குமார் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேல்முறையீட்டு மனு

பின்னர் ஓரிரு நாட்கள் கழித்து முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட யுவராஜ் மட்டும் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர், இந்த வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நேரில் வரவழைத்து விசாரித்தனர். அப்போது அவர் கோகுல்ராஜ் கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கோகுல்ராஜ் தன்னுடைய வகுப்பு தோழர் மட்டும்தான். வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும், வாக்குமூலம் அளித்தார்.

அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததாக கூறி, அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குபதிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரை ஐகோர்ட்டின் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று சுவாதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆனது.

இதற்கிடையே தண்டனை பெற்றவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அதன் மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.

உறுதி

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் கூறுகையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேலும் 5 பேர் விடுதலையில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி தீர்ப்பளித்துள்ளனர்.

தீர்ப்பு விவரம்

வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவரம்: கோகுல் ராஜ் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனையை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 2022-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. போதிய சாட்சிகள் இல்லாததால், 5 பேரை விடுதலை செய்தது. யுவராஜ், அருண், குமார் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதில், யுவராஜ் மற்றும் அருண் ஆகிய இருவருக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதாவது சாகும் வரையில் சிறை தண்டணை அளிக்கப்பட்டது. குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. பிரபு மற்றும் கிரிதர் ஆகிய இருவருக்கும், குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுத்ததால் ஆயுள் மற்றும் கூடுதலாக 5 ஆண்டுகளுடன் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *