April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

பாராளுமன்றத் தேர்தல் எதிர்க்கட்சிகள், பாஜக வியூகம்

1 min read

Parliamentary election opposition parties, BJP strategy

8.76.2023
பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் வியூகம் அமைக்கிறது. அதை முறியடிக்கும் நோக்கில் பாஜகவும் நடவடிக்கையி்ல் இறங்கி உள்ளது.

பாராளுமன்றத் தேர்தல்

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முதல்கட்ட ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்யத் தொடங்கிவிட்டது. குறிப்பாக பாராளுமன்றத் தேர்தலுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணக்கிடும் பணி அனைத்து மாநிலங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த மாதம் மாவட்டம் வாரியாக மின்னணு எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக உள்ளன. எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் செய்து வருகிறார்.
வருகிற 23-ந் தேதி பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார். இதில் 15 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிய வந்துள்ளது.

பொதுவேட்பாளர்

தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் அடுத்தடுத்து மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பொது வேட்பாளரை நிறுத்தி பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வியூகம் வகுக்க உள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா கட்சியும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக தொடங்கி இருக்கிறது.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த சில தினங்களாக டெல்லியில் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்கொள்ள வேண்டிய கூட்டணி மற்றும் போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து அவர் பட்டியல் தயாரித்துள்ளார். இதன் அடிப்படையில் கூட்டணி ஒப்பந்தங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதால் கூட்டணியில் சில புதிய கட்சிகளை சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

கூட்டணி

தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், கர்நாடகாவில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுடன் கூட்டணி அமையும் என்று தெரிகிறது.
அதுபோல அகாலிதளம் கட்சியும் மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இணைய சம்மதித்துள்ளது. தெலுங்கானாவில் சந்திர சேகரராவ், ஒடிசாவில் நவீன் பட்நாயக் ஆகியோர் காங்கிரசுடன் சேரமாட்டார்கள் என்பதால் அந்த மாநிலங்களிலும் வேறு வகையான கூட்டணிக்கு பா.ஜனதா ஆலோசித்து வருகிறது.

மந்திரிசபை மாற்றம்

இந்நிலையில் டெல்லியில் அடுத்தடுத்து நடந்த ஆலோசனை கூட்டங்களின் அடிப்படையில் சில அதிரடி மாற்றங்களுக்கும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். ஆட்சியிலும், கட்சியிலும் சில முக்கிய மாற்றங்கள் செய்வதன் மூலம் பாராளுமன்றத் தேர்தலை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்று அவர் கருதுகிறார்.
அதன்படி மத்திய மந்திரி சபையில் சிறு மாற்றம் செய்யலாமா? என்று பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார். வருகிற 22-ந் தேதி மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்னதாக மத்திய மந்திரி சபையில் அவர் மாற்றம் செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சில மூத்த மந்திரிகளின் நிர்வாகப் பணிகளில் பிரதமர் மோடிக்கு ஏற்கனவே அதிருப்தி உள்ளது. அவர்களை மந்திரி சபையில் இருந்து விலக்கி விட்டு புதியவர்களை நியமிக்க ஆலோசித்து வருகிறார். நீக்கப்படும் மத்திய மந்திரிகள் கட்சிப் பணிக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
வேளாண்மை, விமானப் போக்குவரத்து, நிதி, நீர்ப் பாசனம், சுற்றுச்சூழல், மின்சாரம், ஊரக மேம்பாடு ஆகிய அமைச்சகங்களில் மாற்றங்கள் செய்ய மோடி விரும்புவதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப மந்திரி சபை மாற்றங்கள் அமையும் என்று சொல்கிறார்கள். மந்திரி சபை மாற்றம் முடிந்ததும் நாடு முழுவதும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் மாற்றங்கள் செய்ய பா.ஜ.க. தீர்மானித்துள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம், சத்தீஷ்கர், கேரளா ஆகிய 10 மாநிலங்களில் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பா.ஜ.க. மாநில தலைவர் நலீம்கத்தில் பதவி காலம் நிறைவு பெறுகிறது. எனவே புதிய தலைவரை நியமிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதுபோல மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவராக மத்திய மந்திரி பிரகலாத்சிங் படேல் நியமனம் செய்யப்படுவார் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சவுகானுக்கும், தற்போதைய மாநில தலைவர் வி.டி.சர்மாவுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. எனவே சர்மாவுக்கு பதில் மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேலை கொண்டு வந்து தீரவேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக உள்ளார்.
தென் மாநிலங்களில் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு கூடுதல் கவனம் செலுத்த அமித்ஷா தீர்மானித்துள்ளார். எனவே தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் சஞ்சய் குமாரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் குமாருக்கு தேசிய அளவில் பதவி கொடுத்துவிட்டு புதிய மாநில தலைவரை நியமிக்க உள்ளனர். இதைத் தவிர பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்களை மேலும் அதிகப்படுத்தவும் ஆலோசித்து வருகிறார்கள். எனவே காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் அதே நேரத்தில் பா.ஜனதாவும் அதிரடி காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.