பத்திரிக்கையாளர் நலனில் அக்கறை கொண்டவர் மு.க.ஸ்டாலின்-அமைச்சர் மனோ தங்கராஜ் பெருமிதம்
1 min read
M.K.Stalin-Minister Mano Thangaraj Perumitam was concerned about the welfare of journalists
20.6.2023
தமிழகத்தில் முதன்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துப் பெருமை சேர்த்துள்ளார். அதனடிப்படையில் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் “பத்திரிகையாளர் நல வாரியம்” அமைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கை ஊடக செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு பத்திரிக்கையாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பத்திரிக்கையாளர்களுக்கு, பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர் அட்டையினை வழங்கி பேசுகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர் நலனில் அக்கறை கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கென்று முதல் முறையாக பத்திரிக்கையாளர் நலவாரியத்தை தொடங்கி வைத்தார், பத்திரிக்கையானது ஜனநாயகத்தின் நான்காவது தூண்களில் ஒன்றாக இருந்தாலும் ஜனநாயகம் தளைப்பதற்க்கு பத்திரிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கிறது, பத்திரிக்கை என்பது சுதந்திரமாக செயல்பட வேண்டிய ஒன்று, நம் நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு பத்திரிக்கைகளின் பங்கு என்பது மிக பெரிய பங்கு ஆகும், சமூகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட மிக முக்கிய காரணம் பத்திரிக்கைகளாகும்காந்தியடிகள், நேரு. அம்பேத்கர் போன்றவர்கள் பல நல்ல கருத்துக்களை எழுத்தின் மூலமாக கூறியுள்ளார்கள். பத்திரிக்கை துறை என்பது அன்றும் இன்றும் மதிப்புமிக்க துறையாக செயல்பட்டு வருகிறது இந்த துறையில் நீங்கள் எல்லோரும் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது, திராவிட மாடல் அரசு பத்திரிக்கையாளர் நலனில் என்றும் துணை நிற்க்கும்.
பத்திரிக்கையாளர் நல வாரியத்தின் வாயிலாக ஊடக செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களின் வாரிசுதாரர்களில் பத்தாம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1000-மும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இரு பாலருக்கும் ரூ.1000-மும், 11ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1000-மும், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1500-ம், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இரு பாலருக்கும் ரூ.1500-ம், முறையான பட்டப் படிப்புக்கு ரூ.1500-ம், மாணவர் விடுதி வசதியுடன் முறையான பட்டப்படிப்பிற்கு ரூ.1700-ம், முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.2000-மும், மாணவர் விடுதி வசதியுடன் முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.3000-ம், தொழில்நுட்ப படிப்பிற்கு ரூ.2000-மும், மாணவர் விடுதி வசதியுடன் முறையான தொழில்நுட்ப படிப்பிற்கு ரூ.4000-மும், தொழில்நுட்பம் பட்டம் மேற்படிப்புக்கு ரூ.4000-மும், மாணவர் விடுதி வசதியுடன் தொழில்நுட்பட்ட மேற்படிப்பிற்கு ரூ.6000 – மும். ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்புக்கு ரூ.1000-ம் மாணவர் விடுதி வசதியுடன் ஐடியா அல்லது பாலிடெக்னிக்கல் படிப்புக்கு ரூ.1600-ம். வழங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.
மேலும் திருமண உதவித் தொகை ரூ.3000-மும், பெண் உறுப்பினருக்கு மகப்பேறு உதவித்தொகை ரூ.6000-மும், பெண் உறுப்பினருக்கு கருசிதைவு கரு கலைப்பு ரூ.3000-மும், மூக்கு கண்ணாடி செலவுத் தொகையை ஈடு செய்தல் (ஒரு முறை உறுப்பினருக்கு மட்டும்) ரூ.500-ம், இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.50,000-மும், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5000-ம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிறைட் தொகுத்து வழங்கினார்,உதவி மக்கள் தொடர்பு அலுவர் லெனின் பிரபு நன்றியுரையாற்றினார், நிகழ்ச்சியில் பத்திரிக்கை ஊடக செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.