கரூர் நகைக்கடையில் 2வது நாளாக வருமான வரித் துறை சோதனை
1 min readIncome tax department raids Karur jewelery shop for 2nd day
24.6.2023
கரூர் நகைக்கடையில் 2வது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரி சோதனை
செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே 26-ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை 8 நாட்கள் நடைபெற்றது. சோதனையின் போது சில இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
வருமான வரித் துறை சோதனையை தொடர்ந்து ஜூன் 13-ம் தேதி கரூரில் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் அலுவலகமாக பயன்படுத்தி வந்த ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.
கடந்த முறை வருமான வரித் துறை சோதனையில் கரூர் கோவை சாலையில் உள்ள சக்தி மெஸ் மற்றும் பங்குதாரர்கள் கார்த்திக், அதிபர் ரமேஷ் வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனையின் போது கார்த்திக், ரமேஷ் வீடுகளில் தலா ஒரு அறை, மேலும் காமராஜபுரத்தில் உள்ள பொறியாளர் பாஸ்கர் அலுவலகம், காந்திபுரத்தில் உள்ள ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த் வீடு உள்ளிட்ட இடங்களில் சீல் வைத்தனர்.
இந்நிலையில், கரூர் ஈரோடு சாலையில் கோதை நகர் அபார்ட்மெண்டில் உள்ள கார்த்திக், அதிபர் ரமேஷ் வீடுகள், காமராஜபுர பொறியாளர் பாஸ்கர், வையாபுரி நகர் 4வது குறுக்குத் தெருவில் உள்ள ஆடிட்டர் சந்திரசேகர் அலுவலகங்கள் ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர், காளிபாளையம் பெரியசாமி ஆகியோர் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றி வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் நேற்று மாலை 6.50 மணிக்கு கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள பழனி முருகன் நகைக்கடையில் வருமான வரித் துறையினர் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன் சோதனை மேற்கொண்டனர். நள்ளிரவு வரை சோதனை நீடித்த நிலையில் அதன் பிறகு சோதனையை முடித்துக்கொண்டு வருமான வரித் துறையினர் புறப்பட்டனர்.
இன்று
இந்நிலையில் இன்று (ஜூன் 24ம் தேதி) காலை 9.20 மணிக்கு கரூர் ஜவஹர் பஜார் பழனி முருகன் ஜூவல்லரியில் 2வது நாளாக வருமான வரித் துறையினர் மத்திய பாதுகாப்புப் படையினர் துணையுடன் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு குழுவினர் மாயனூர் சென்றுள்ளனர். ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்தின் பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனையிட அவர்கள் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.