May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் கண்ணாயிரத்தை திகைக்கவைத்த செண்டுவிலை

1 min read

Centu price-Kannayiram stupefied in Kadayam

25.6.2023
கண்ணாயிரம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு குளிக்கமுடியாததால் அங்கிருந்து பாபநாசத்துக்கு சுற்றுலாபஸ்சில் வந்துகொண்டிருந்தார். வழியில் பதனீர் மற்றும் நுங்கு சாப்பிட்டு வந்த அவர் பஸ்சில் ஓரத்தில் இருந்தபோது பாட்டில்தண்ணீர் முகத்தில் அடித்ததால் கண்கள் சிவக்க..அதை மெட்ராஸ்ஐ என்று கருதிய அவரது மனைவி பூங்கொடி அவரது கண்களை துண்டால் கட்ட அப்போதுகள்ளநோட்டு கும்பல் வாலிபரை தேடிவந்த போலீஸ் கண்ணாயிரத்தை சந்தேகப்பட்டு சோதனையிட.. அவரது கண்கட்டை பூங்கொடி அவிழ்த்துவிட சந்தேகம் தீர்ந்த போலீசார் கண்ணாயிரத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டு அங்கிருந்து செல்ல ஒரே பரபரப்பாக இருந்தது.
பஸ் பாபநாசத்தை விரைந்து சென்று கொண்டிருந்தது.வழியில் கடையம் உங்களை அன்போடு வரவேற்கிறது என்ற போர்டு அவர்களை வரவேற்றது. கே.எஸ்.நகரில் காமெடி மன்னன் கண்ணாயிரம் ரசிகர் மன்ற பேனருடன் சில இளைஞர்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் கைகாட்டி நிறுத்தியபோது காமெடி மன்னன் கண்ணாயிரம் வாழ்க என்ற கோஷம் எழுந்தது. இது என்ன புது கலாட்டா என்று பஸ்டிரைவர் பஸ்சை நிறுத்த பயில்வான் எழுந்துவந்து பஸ்சைவிட்டு இறங்கி என்ன…என்று கேட்க.. இளைஞர்கள் உற்சாகத்துடன்..நாங்க காமெடி மன்னன் கண்ணாயிரத்துக்கு ரசிகர் மன்றம் வச்சிருக்கோம். அவருக்கு மாலை அணிவித்து அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறோம் என்றனர்.
அவர்களிடம் கண்ணாயிரம் வந்திருக்கிறாருன்னு எப்படி தெரியுமுன்னு பயில்வான் கேட்க..அதுவா செய்தி சாரலில் அவரது காமெடியை படிச்சிட்டுவர்ரோம். அவர் குற்றாலத்திலிருந்து பாபநாசம் வர்ரதா அவரது டூர் புரோகராம் போட்டிருந்தது. அதைவச்சி தெரிஞ்சிக்கிட்டோம் என்று சொல்ல பயில்வானுக்கு.. அடேங்கப்பா பயில்வானுக்கு அவ்வளவு மவுசா என்று ஆச்சரியப்பட்டார்.
பஸ்சில் ஏறி..கண்ணாயிரம் பஸ்சிலிருந்து இறங்கு…உன்னுடைய ரசிகர்மன்றத்தினர் உன்னை பாக்கணுமாம்… இறங்கும் என்க.. கண்ணாயிரம்.. என்ன ரசிகர் மன்றமா…என்னைவச்சி காமெடிகிமெடி பண்ணலையே என்று கேட்க பயில்வான்.. யோவ் உண்மைதான்யா…யாருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்…இறங்கும் என்று சொல்ல பூங்கொடி கொஞ்சம் பொறுங்க…தலையை சீவுங்க…கொஞ்சம் பவுடர் போட்டுக்குங்க… அந்த கறுப்பு கண்ணாடியை எங்கே.. அதை எடுத்துப்போட்டுக்குங்க…என்று ஆணையிட கண்ணாயிரம் தலைசீவி பவுடர் பூசி கண்ணாடி போட்டு தயாரானார்.
பூங்கொடியும் தலையை சீவி பொட்டுவைத்து பவுடர் போட்டு கையில் சின்னபேக்கை எடுத்துக்கொண்டு தயாரானார்.
அதைப்பார்த்து சுடிதார் சுதாவும் மேக்கப்பண்ணிக்கொண்டு பொட்டுவைத்து கண்ணாடியில் அழகுபார்த்தார்.
பூங்கொடி மனதில் சற்றுக்கோபத்துடன்…கண்ணாயிரத்தைப்பார்த்து…சீக்கிரம் கிளம்புங்க…உங்களுக்குத்தான் வரவேற்பு.. வேற யாருக்கும் கிடையாது..என்று சொல்ல கண்ணாயிரம் கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டு பஸ்சில் வீர நடைபோட்டு கீழே இறங்கினார்.
பூங்கொடியும் அவரைப்பின் தொடர்ந்து வந்தார். சுடிதார்சுதாவும் இளைஞர்களும் வேடிக்கைப்பார்க்க இறங்கினார்கள்.
கண்ணாயிரத்தைப் பார்த்ததும் காமெடி மன்னன் கண்ணாயிரம் வாழ்க என்று இளைஞர்கள் கோஷமிட..கண்ணாயிரம் வெட்கத்துடன் அமைதி…அமைதி என்றார். இளைஞர்கள் புன்னகையுடன் உற்சாக போட்டிப்போட்டுக்கொண்டு கண்ணாயிரத்துக்கு மாலை அணிவித்தனர்.
தினத்தந்தியில் ஆசிரியராக இருந்து பணி நிறைவுபெற்ற வேல்முருகன் சார் வந்து கண்ணாயிரம் நீங்க மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறீங்க என்றார். அதன்பின் புளி கணேசன், கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் எலுமிச்சம்பழம் கொடுத்து வரவேற்றனர். ஒன்றிய கவுன்சிலர் மாரிகுமார், சா.கண்ணன், அ.கண்ணன், கவி, டிஸ்கோ செல்வராஜ், சத்திய குமார், இரா.இசக்கி ஆகியோர் கண்ணாயிரத்தை பாராட்டினார்கள். தாமரைச்செல்வி அக்கா தலைமையில் பெண்கள் பலர் அங்கு வந்தனர். கண்ணாயிரத்தை பார்த்து சிரித்தபடி இருந்தனர்.
கண்ணாயிரம் தனக்கு போட்ட மாலையை கழற்றி தன்மனைவியிடம் கொடுக்க..சால்வைகள் வந்து குவிந்தன.அவைகளையும் கண்ணாயிரம் வாங்கி மனைவியிடம் கொடுத்தார். அவர் அனைத்தையும் வாங்கி பஸ்சில் ஏறி இருக்கையில் கொண்டுவைத்துவிட்டு கீழே இறங்கினார்.
இளைஞர்கள், பெண்கள் அவரது கைகளை குலுக்கி கண்ணாயிரத்தோடு போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.
காமெடி உங்களுக்கு இயல்பாக வருகிறதா…இல்லை தயார்பண்ணி சிரிக்கவைக்கிறீர்களா என்று கேட்க..கண்ணாயிரம்..நான் எங்கே தயார் பண்ணுறது..அதா..வருது..நான் செய்யுற தப்புதான் காமெடி.. வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும் என்பாங்க..எல்லோரும் சிரிங்க…என்று கண்ணாயிரம் பேசியதும் எல்லோரும் கைத்தட்டினார்கள்.
கண்ணாயிரம் போதும் போதும் என்க இளைஞர்கள் மீண்டும் கைத்தட்ட.. கண்ணாயிரம் உதட்டைகடித்து கைவிரலை காட்டி எச்சரிக்க..அங்கு சிரிப்பலை பொங்கியது. இந்த நேரத்தில் சில இளைஞர்கள் சுடிதார் சுதாவிடம் ஆட்டோகிராப்வாங்க..அதைப்பார்த்த பூங்கொடி உஷ்ணமாகி என் புருஷன்மட்டும் என்ன மட்டமா.. என்று சொல்லியபடி ஏங்க நீங்களும் ஆட்டோகிராப் போடுங்க என்று அதட்ட.. என்ன சொல்லுற ..எனக்கு சும்மாவே தமிழ் எழுதவராது.. நீ வேற என்க.. பூங்கொடி விடவில்லை.சும்மா பேனாவை வைத்து ஏதாவது கிறுக்குங்க…அவங்க பாத்துக்குவாங்க என்று சொல்ல..பாவம் ரசிகர்கள் என்றபடி நிற்க.. அவரை ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்டு ரசிகர்கள் சூழ்ந்தனர்.
கண்ணாயிரம் பேனாவை வாங்கி..தன் மனம் போனபடி பேப்பரில் கிறுக்கிவிட்டார்.
அதைப்பார்த்தவர்கள்…ஆ…ஒவ்வொரு கிறுக்கலும் ஆயிரம் கதை சொல்லுது…சும்மா சொல்லக்கூடாது என்று புகழ்ந்தனர். சுடிதார்சுதா..வோ..சிரித்துவாழவேண்டும் என்று கையெழுத்துப் போட்டுக்கொடுத்தார்.

அங்கு நின்ற இளைஞர்களிடம் இது என்ன ஊர் என்று கேட்க..அவர்கள் கடையம் என்றனர்.அப்படியா.கடையம் பெரிய ஊரா என்று கண்ணாயிரம் என்று கேட்க.. இளைஞர்கள் கடையத்தின் பெருமைகளை அடுக்கினார்கள். கடையம் சாதாராண ஊர் இல்லைங்க…இது பெரிய நகரம்..தெரியுமா..இங்கே ஒரு செண்டு ஐந்து லட்சம்..என்றனர்.
அதைக்கேட்ட கண்ணாயிரத்துக்கு தூக்கிவாரிப்போட்டது. என்னங்க..சொல்லுறீங்க. .எங்க ஊரிலே சண்டே மார்க்கெட்டிலே ஒரு செண்ட் ஐம்பது ரூபாதான்.. நீங்க என்ன உங்க ஊரூல.. ஒரு சென்டு ஐந்துலட்சமுன்னு சொல்லுறீங்க.. ஏமாறாதீங்க. என்று சொல்ல.. அங்கிருந்தவர்கள்..அய்யோ..அய்யோ..கடையத்திலே நாங்க சொல்லுறது நிலம் செண்டுவிலை ஐந்து லட்சம்.. நீங்க சொல்லுறது.. மேல அடிச்சிக்கிற வாசனை செண்டு ஐம்பது ரூபா…ஓ..ஒரே சிரிப்பய்யா என்று குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
கண்ணாயிரமும்..ஓ நீங்க அதைச்சொல்லுறீயளா…அய்யோ அய்யோ என்று சிரிக்க..அந்த இடம் கலகலப்பாக இருந்தது.( தொடரும்)
வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.