May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் அரக்கியை தேடிய கண்ணாயிரம்/நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram searching for Araki in the shop/Comedy story/ Tabasukumar

2.7.2023
கண்ணாயிரம் குற்றாலத்திலிருந்து பாபநாசத்துக்கு சுற்றுலா பஸ்சில் சென்றார்.வழியில் கடயத்தில் அவருக்கு ரசிகர் மன்றம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட அவர் திக்குமுக்காடினார்.
அந்த நேரத்தில் கடயத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால்..கண்ணாயிரம் …அப்பப்பா..என்ன வெயில்…என்ன வெயில் என்று முகத்தில் வழிந்த வியர்வையை கைகுட்டையால் துடைத்தார்.
அப்போது ஒரு இளைஞர் உற்சாகமாக…இது என்ன பெரிய வெயில்..எலுமிச்சம்பழம் ஜூஸ் குடிச்சிங்கின்னா..சும்மா ஜில்லுன்னு இருக்கும் என்றார். அப்படியா என்ற கண்ணாயிரம்..ஜூஸ் எங்கே கிடைக்கும் என்று கேட்க அருகில் உள்ள கடைக்கு அழைத்துச்சென்றார்கள்.
கண்ணாயிரத்துக்கு குளிர்ச்சியா ஒரு லெமன் ஜூஸ் என்றார் ஒரு இளைஞர்.
கண்ணாயிரம் உஷாராக..எனக்கு எலுமிச்சம் பழம் ஜூஸ் போதும் என்க.. கடைக்காரர் புன்னகையுடன் லெமன் ஜூசும் எலுமிச்சம் பழ ஜூசும் ஒண்ணுதான் என்றபடி எலுமிச்சம் பழத்தை கத்தியால் வெட்டினார்.
அதைப்பார்த்த கண்ணாயிரம்..என்னங்க.. இந்த வெயிலுக்கு எலுமிச்சம் பழம் காய்ஞ்சிபோயிருக்காதா என்று கேட்க.. கடைக்காரரோ…ஏங்க…கடையம் எலுமிச்சம் பழத்தை சாதாரணமாக நினைச்சிங்களா… ஒருவாரம் ஆனாலும் வாடாது..அப்படியே அன்னைக்கு பறிச்ச மாதிரி இருக்கும் என்று சொல்லியபடி ஜூஸ் பிழிந்து பனிக்கட்டி போட்டு நன்னாரி ஊற்றி கலக்கி..ம் குடிங்க..சூடு பறந்து போகும் என்றார்.

கண்ணாயிரம் ஜூஸ் கண்ணாடி டம்ளரை வாங்கி ..கண்ணை மூடிக்கொண்டு குடிக்க..குளிர் அதிகமாக இருந்ததால்..ஆ..குளிரா இருக்கு என்று குடிப்பதை நிறுத்தினார்.
கடைக்காரர் அவரிடம் கண்ணைத் திறந்து குடிங்க என்க..கண்ணாயிரமோ எங்க அம்மா எப்போ மருந்து கொடுத்தாலும் கண்ணை மூடிட்டு குடின்னு சொல்வாங்க…அதனாலே நான் எதைக்குடிச்சாலும் கண்ணை மூடிக்கிட்டுதான் குடிப்பேன் என்க..சரி எப்படியும் குடிங்க என்று கடைக்காரர் சொல்ல கண்ணாயிரம் மடக் மடக் என்று குடித்தார்.

ஆ..நல்லா இருக்கு..என்று சொல்லியபடி கண்ணாயிரம் சிரித்தபடி..எவ்வளவு காசு என்று கேட்க..நீங்க விருந்தாளி..பிரி என்றார்.
கண்ணாயிரம் அவரிடம் நான் கண்ணாயிரம் பிரி கிடையாது என்க கடைக்காரர் சிரிக்க பூங்கொடி காசை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்து.. ஓசியெல்லாம் வேண்டாம்..வியாபாரம் நல்லா நடக்கட்டும் என்று சொன்னார்.
அப்போது கண்ணாயிரம்..அட..இங்கேயே வெயில் இப்படி அடிக்கே பாபநாசத்திலே எப்படி இருக்குமோ என்க..கடைக்காரர்..ம் கவலைப்படாதீங்க… நாலு எலுமிச்சம் பழம் வாங்கிட்டுப்போங்க தலையிலே…நல்லா அரக்கி தேய்க்கணும்..அப்புறம் அகஸ்தியர் அருவியிலே குளிங்க…சும்மா..குளு குளுன்னு இருக்கும் என்றார்.
கடைக்காரர் சொன்னதைக் கேட்ட கண்ணாயிரம் அழ ஆரம்பித்தார். கடைக்காரர் பயந்துபோய்..ஏங்க நான் சொல்லிட்டேன்..அழுறீங்க என்று கேட்க கண்ணாயிரம் கண்களை துடைத்தபடி ..ஏங்க.. எலுமிச்சம் பழத்தை தலையில் அரக்கி தேய்க்கணுமுன்னு சொன்னீங்க… நான் அரக்கிக்கு எங்கே போவேன் என்று சிணுங்கினார்.
கடைக்காரர் அவசரப்பட்டு உங்க மனைவி வரலையா என்று கேட்க.. அருகில் நின்ற பூங்கொடி ஆவேசமாக…என்னையா அரக்கின்னு சொல்லுறீங்க…ஆ..ஊ..என்ற கத்த அங்கு கூட்டம் கூடியது.
ஒருவர் ஓடிவந்து என்ன பிரச்சினை என்று கேட்க..பூங்கொடி அவரிடம்..கடைக்காரர் என்னை அரக்கின்னு சொல்லுறாரு..இது நியாயமா..என்று கண்களை உருட்டி பற்களை கடித்தபடி கேட்டார்.
கடைக்காரர் ஏண்டா கேட்டோம் என்று மிரண்டுபோயிருக்க..பஞ்சாயத்து பேசவந்தவர் இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தார். கடைக்காரரைப் பார்த்து.. ஏங்க..நீங்க இவங்களை அரக்கின்னு சொன்னது தப்புதான். ஏன்னா.. அரக்கிக்கு பற்கள் நீளமா வெளியே நீட்டிக்கிட்டு இருக்கும். நாக்கு நீளமா தொங்கும்…முடி ஒழுங்கா இருக்காது….இந்த அம்மா அப்படியில்லையே..அழகாகத்தானே இருக்கு என்று சொல்ல பூங்கொடி அமைதியானார்.
கடைக்காரரும் சரி..சரி என்க பூங்கொடி சிரித்தார்.கண்ணாயிரமோ விடவில்லை.ஏங்க..எனக்கு ஒரு பதில் சொல்லுங்க..எலுமிச்சம் பழத்தை அரக்கி தேய்க்கணுமுன்னு கடைக்காரர் சொன்னார்.நான் அரக்கியை எங்கேபோய் தேடுவேன் என்க.பஞ்சாயத்து பேசியவர் பிரச்சினையை புரிந்துகொண்டு..ஏங்க..அரக்கியெல்லாம் இங்கே கிடைக்காது..சும்மா அழுந்த தேய்த்து குளிங்க போதும் ஏன்க..கண்ணாயிரம் புன்னகையுடன் அப்படி சொல்லுங்க..இதுக்குத்தான் ஊரிலே பெரிய ஆளு வேணுமுன்னு சொல்லுறது…அரக்கி கடைக்காட்டா அழுந்த தேய்த்தா போதும்..இது நல்லாயிருக்கு என்று பாராட்டினார்.
பஞ்சாயத்து பேசியவரும் அப்பாட..பிரச்சினை தீர்ந்தது என்று நினைத்தபோது கண்ணாயிரம் மெதுவாக..அழுந்த தேய்க்கணுமுன்னா யார் தேய்க்கணுமுன்னு கேட்க..பஞ்சாயத்து பேசியவர்..மறுபடியும் முதலில் இருந்தா என்று நினைத்தவர் அவரவர் தலையை அவங்களே அழுந்த தேய்த்தா போதும் என்றபடி அங்கிருந்து ஓட்டம்பிடித்தார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.