May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்கட்டால் கண்ணாயிரத்துக்கு வந்த சோதனை/ நகைச்சுவை/ தபசுகுமார்

1 min read

Kankattal is an experiment/comedy/ Tabasukumar

15.6.2023
கண்ணாயிரம் குற்றாலத்திலிருந்து பாபநாசத்துக்கு சுற்றுலா பஸ்சில் வந்தார். வழியில் பஸ்சை நிறுத்தி பதனீர் குடித்த அவர் நுங்கு சாப்பிட்டுவிட்டு பஸ்சில் ஏறினார்.சுடிதார் சுதா மற்றும் இளைஞர்கள் நுங்கில் மேல்பக்கம் சீவி கையில் எடுத்துக்கொண்டு பஸ்சில் ஏறிவந்தார்கள். சுடிதார்சுதா நுங்கை கையால் குத்தி தின்பதை பார்த்த கண்ணாயிரம் நாக்கில் எச்சில் ஊற சுடிதார்சுதா நுங்கு வேண்டுமா என்று கேட்க கண்ணாயிரம் வேண்டாம் என்று கையை அசைக்க அவரது மனைவி பூங்கொடி அதை தவறாக புரிந்துகொண்டு சுடிதார்சுதாவை ஏச.. அது பரபரப்பானது.
இந்த நேரத்ததில் பஸ்சின் ஜன்னலோர சீட்டுக்கு தள்ளப்பட்ட கண்ணாயிரம் வெளியே எட்டிப்பார்க்க.. முன்சீட்டில் இருந்தவர் பாட்டில் தண்ணீரை வெளியே கொட்ட அது கண்ணாயிரம் முகத்தில்வந்து அடிக்க.. அவரது கண்கள் சிவந்தன. இதைப்பார்த்த பூங்கொடி அவரை ஜன்னலோர சீட்டிலிருந்து எழுந்துவர சொல்லி அவர் கண்கள் சிவந்திருந்ததால் மெட்ராஸ்ஐ என்று துண்டால் அவரது கண்களை கட்டினார்.
கண் கட்டோடு கண்ணாயிரம் இருப்பதைப்பார்த்த பயில்வான்..என்ன ஆச்சு கண்ணாயிரத்துக்கு என்று கேட்க அவருக்கு மெட்ராஸ்ஜ என்று பூங்கொடி சொல்ல அப்படியா..ஆ..ஆபத்தாச்சே என்று அவர் மெல்ல நழுவினார் மற்றவர்களும்..அடே..கண்ணாயிரம் எங்களை கண்ணை அவிழ்த்துப் பார்க்காதே..எங்களுக்கும் அது வந்திடும் என்று திரும்பிக்கொண்டார்கள். கண்ணாயிரம்..எனக்கு ஒண்ணும் இல்லை.. என்று சொல்லிப்பார்த்தார். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை.
என்ன பூங்கொடி…எனக்கு ஒன்றும் இல்லை.. தண்ணி பட்டதாலே கொஞ்சம் கண் கலங்கியிருக்கு..கட்டை அவிழ்த்துவிடு என்றார்.
பூங்கொடியோ..ம்…எங்கிட்ட நடக்காது.. நீங்க கண்ணை வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டிய… அப்படியே வாங்க.. ஒண்ணும் கெட்டுப்போகாது என்று அதட்டினார்.
சரி என்று கண்ணாயிரம் பஸ் சீட்டில் சாய்ந்து படுத்துக்கொண்டார்.

கண்ணாயிரம் துண்டை லேசாக உயர்த்தி நைசாக பார்த்தார். ஆ.. மூடுங்க..எங்கே விளையாட்டு காட்டுறீங்க…என்று பூங்கொடி அவரது கண்களை துண்டால் இறுக்கினார்.
சிறிது தூரம் சென்றதூம் போலீசார் அந்த பஸ்சை வழிமறித்து ஏறினார்கள். கள்ளநோட்டு கும்பல் வாலிபர் போட்டாவை வைத்துக்கொண்டு..பஸ்சில் அந்த வாலிபர் இருக்காரா என்று நோட்டமிட்டார்கள்.
கண்ணாயிரம் எதுவும் அறியாமல் கண்ணில் கட்டுடன் தூங்கிக்கொண்டிருந்தார். முன்பகுதியில் சோதனையிட்ட போலீசார் பின்பகுதிக்கு வந்தார்கள். கண்ணாயிரம் கண்ணை துண்டால் கட்டியிருப்பதைப் பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.. ஆ..சிக்கிட்டான்.. அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக.. கண்ணை துண்டால் கட்டி மறைச்சிருக்கான் என்று நினைத்தவர்கள் கண்ணாயிரம் மீது பாய்ந்து ஒரே அமுக்காக அமுக்கினார்கள்.
ஆ..எங்கக்கிட்ட தப்ப முடியுமா.. துண்டாலெ கட்டிக்கிட்டா எங்களுக்குத்தெரியாதா.. ஆ.. என்று அதட்டினர்.
யோவ்.. இனி நீ தப்ப முடியாது.. துண்டை கழற்று என்று அதட்டினர்.
அதைப்பார்த்த பூங்கொடி..ஏங்க..அவருக்கு மெட்ராஸ்ஜ அதான் கண்ணை துண்டால் கட்டியிருக்காரு..என்று சொல்ல.. போலீஸ்காரர்களோ நம்பவில்லை.
ஏம்மா..எங்களை காதிலே பூவச்சிருக்கோமுன்னு நினைச்சியா.. கண்களை மூடியிருக்கிற துண்டை அவரு என்று அதட்டினர்.
பூங்கொடியோ..அது முடியாது என்க…போலீசார் டென்சனாகி..யோவ்..கண்கட்டை அவருய்யா என்று கண்ணாயிரத்தை மிரட்டினர்.
கண்ணாயிரமோ…என் பொண்டாட்டி சொன்னாதான் கண்கட்டை அவிழ்ப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார்.
என்னய்யா வம்பு பண்ணுற..போலீஸ்காரங்க பெரிசா..பொண்டாட்டி பெரிசா.. நாங்க சொல்லுறதை கேட்கமாட்டியா.. ஸ்டேசனுக்கு கொண்டுபோய் முட்டிக்கு முட்டி தட்டிறுவோம் என்று எச்சரித்தனர்.
கண்ணாயிரமோ..ம்..மனைவி சொல்லே மந்திரம்..மனைவி சொல்லாம கண்கட்டை அவிழ்க்கமாட்டேன்..என்றார்.
போலீசாரோ..ம்.. இவன்பிடிவாதம்.. பண்ணுறானே.. ஒருவேளை அவனாத்தான் இருக்கும். ஸ்டேசனுக்கு கொண்டுபோய் இன்ஸ்பெக்டர் அய்யாக்கிட்ட விட்டாத்தான் உண்மையைக் கக்குவான்.. விடக்கூடாது.. எந்திரியா ஸ்டேசனுக்கு..உம்மேல எங்களுக்கு சந்தேகம் இருக்கு.. எழும்பு.. என்று கண்ணாயிரம் தோளை உலுக்கினார்கள்.
கண்ணாயிரமோ என்மனைவி சொல்லாமல் நான் எங்கும் வரமேட்டேன் என்க. போலீசார் கோபமாகி கண்ணாயிரம் தலையில் ஒரு தட்டு தட்டினார்கள்.
கண்ணாயிரம் ஆச்..ஆச் என்று தும்மினார்.
எழும்புய்யா..ம்..என்று கையை பிடித்து தூக்கினர். கண்ணாயிரம்..ம்.. கிச்சம்காட்டாதீங்க… கிச்சம் காட்டாதீங்க..கூச்சமா இருக்கு என்று சிரிக்க..போலீசார் ஆத்திரத்தில்.. கண்ணாயிரம் முதுகில் இரண்டு போடு போட்டனர்.
உடனே பூங்கொடி எழுந்து..எதுக்காக என் கணவரை அடிக்கிறீங்க… அவர் என்ன தப்பு பண்ணினார் என்று கேட்க.. கள்ளநோட்டு கும்பல் வாலிபனா என்று சந்தேகமாக இருக்கு.. அதான் ஸ்டேசனுக்கு கொண்டுபோய் விசாரிக்கப்போறோம் என்று போலீசார் சொல்ல.. பூங்கோடியோ.. ஏங்க.. இவர் வாலிபர் இல்ல.. ஐம்பது வயசு ஆச்சு என்றார்.
நாங்க எப்படி நம்புவது என்று போலீசார் கேட்க..பூங்கொடி உடனே கண்ணாயிரம் கண்ணில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து..பாருங்க.. இவரா வாலிபர்… இந்த பால்வடியும் முகத்தைபாருங்க.. இவரா கள்ளநோட்டு வாலிபர்..சொல்லுங்க..சொல்லுங்க என்று கேட்டார்.
கண்கட்டு அவிழ்க்கப்பட்ட கண்ணாயிரம் ஆ..ஹா..ஹா என்று வாய்விட்டு சிரிக்க…போலீசார் பதட்டமானார்கள்.
ஒரு அப்பாவியை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று அவர்கள் மனம் வருந்த.. ஒரு போலீஸ்காரர் காதில் கண்ணாயிரம் ஏதோ சொன்னார். தான் பையில்வைத்திருந்த ஒரு போட்டோவை காட்டினார்..
அவ்வளவுதான் அவர்கள்..சரிசார்…சாரிசார் என்றபடி போலீசார் பஸ்சைவிட்டு இறங்கினார்கள்.
கண்ணாயிரம் நிமிர்ந்து உட்கார்ந்தார். இந்த பயல எப்படியாவது பிடிச்சாகணும்..நம்மகாகிட்டையே ஆட்டையப்போட்டுட்டு போயிட்டான். நாம ரகசிய சிஐடி..விடக்கூடாது என்று நினைத்தார்.
பூங்கொடி மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் கண்ணாயிரத்தை ஆச்சரியமாக பார்த்தார்கள்.

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.