பஞ்சாக பறந்த கண்ணாயிரம் தலை முடி/ நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min readThe hair that flew like a feather/ comic story / Tabasukumar
3.9.2023
கண்ணாயிரம் அகத்தியர் அருவியில் குளிக்க தயாரான போது அவரது மனைவி பூங்கொடி அவருக்கு தலையில் எலுமிச்சம் பழத்தை தேய்க்க கண்ணாயிரம் அடிச்சி தேயி என்று சொல்ல பூங்கொடி கண்ணாயிரத்தின் கன்னத்தில் பளார் பளார் என்று அடித்தார். இதில் கண்ணாயிரத்தின் கன்னங்கள் சிவந்து காணப்பட்டன.
அப்போது அங்கு வந்த பயில்வான்..என்ன கண்ணாயிரம் கன்னம் சிவந்திருக்கு. அதில் கைத்தடம் பதிஞ்சிருக்கு என்று கேட்க.. கண்ணாயிரம்.. உங்களுக்கு தெரியாததா.. இந்த தலையிலே அரக்கி தேய்க்கணுமுன்னு சொல்லுறதுக்கு வேறு ஒரு வார்த்தை இருக்கு.. அது மறந்து போச்சு சொல்லுங்க. என்று உங்களிடம் கேட்டேன்.. நீங்களும் சொல்லாம ஓடிட்டிங்க.. நான் அடிச்சி தேயின்னு சொல்லப் போயி கன்னம் பழுத்து போச்சு…என்று கண்களை கசக்கினார்.
பயில்வான் ஏம்பா..அது தெரிஞ்சா நான் சொல்லப் போறேன்…சரி..கன்னம் சிவந்து போயிருக்கு.. நல்லா கையாலே அழுத்தி தேயுங்க என்று சொல்ல.. கண்ணாயிரம் உற்சாகமாகி..ம்..இன்னொரு முறை சொல்லுங்க என்க…பயில்வான் உடனே..கையாலே நல்லா அழுத்தி தேயுங்க.. என்று சொல்ல..கண்ணாயிரம் மகிழ்ச்சியில்.. ஆ.. அதான்.. அதேதான்.. அழுத்தி தேய்க்கணும்.. ஆ.. நல்ல வேளை சொன்னீங்க. அந்த வரி மறந்துபோயி ..அடிச்சி தேயின்னு சொல்லப் போயி.. கன்னம் சிவந்து போயி… என்ற கண்ணாயிரம்… பூங்கொடியை பார்த்து.. பூங்கொடி.. என் கன்னம் சிவந்து போச்சு.. கொஞ்சம் அழுத்தி தேய்ச்சுவிடு என்றார்.
பூங்கொடி..போங்க..எனக்கு வெட்கமாக இருக்கு..நாலு பேர் முன்னாலே உங்க கன்னத்தை தொட்டு தேய்கிறது நல்லாவா இருக்கும் என்று இழுக்க.. கண்ணாயிரம்..ம்.. வெக்கத்தை பாரு. .கன்னத்திலே பளார் பளார் என்று அடிக்கும் போது வெக்கமா இல்லையா… அழுத்தி தேயுன்னு சொல்லும் போது மட்டும் வெக்கம் வருதா.. பாருங்களே.. என்று கண்ணாயிரம் கலாய்க்க.. பூங்கொடி வெட்கத்துடன் அங்கிருந்து நகர்ந்தார்.
என்னடா..இது..கன்னதுக்கு வந்த சோதனை.. கன்னத்தை அழுந்த தேய்க்க சொன்னா. .மாட்டேங்கிறா… என்றபடி கண்ணாயிரம் நிற்க, சுடிதார் சுதா அங்கு வந்து.. என்ன கண்ணாயிரம் கன்னத்தில் ரத்தக் கட்டு. இப்படியே விடக் கூடாது. அழுத்தி தேயுங்க என்று சொல்ல… கண்ணாயிரம் எப்படி தேய்க்கணுமுன்னு தெரியலையே என்று சொல்ல.. சுடிதார் சுதா … நான் தேய்ச்சு காட்டுறேன்..அதே மாதிரி தேயுங்க. .என்றபடி தன் கன்னத்தில கையை வச்சு தேய்க்க… கண்ணாயிரம் கீழே இருந்து கையால் மேலே தேய்க்க… அப்படி செய்யக் கூடாது.. மேல இருந்து கீழே தேய்க்கணும் என்றவாறு கண்ணாயிரம் கன்னத்தில் தேய்த்து … இப்படி தேய்க்கணுமுன்னு செய்து காட்ட… இதை தூரத்தில் இருந்து பார்த்த பூங்கொடி .ஆ..ஆபத்து என்றவாறு ஓடி வந்தார்.
உனக்கு வெட்கமே கிடையாதா என்று சுடிதார் சுதாவை விரட்டிவிட்டு கண்ணாயிரத்திடம் இந்த கன்னத்தை தேய்க்கக் கூட உங்களுக்கு தெரியாதா. .எப்படி தேய்க்கணும் தெரியுமா என்றபடி கையால் கண்ணாயிரம் கன்னத்தை அழுத்தி தேய்க்க. .கண்ணாயிரம் அய்ய…காந்துது காந்துது என்று கத்தினார்.
ம் .மூச்சு. சத்தம் போடக்கூடாது… சுடிதார் சுதா கன்னத்தை தேய்க்கும் போது அமைதியா இருந்துட்டு. .இப்போ காந்துனா இருக்கு என்றபடி மீண்டும் அழுந்த தேய்க்க…கண்ணாயிரம்..அம்மா..ஆளைவிடு போதும்…நான் குளிக்கப் போறேன் என்று ஓடினார்.
கண்ணாயிரம் எலுமிச்சம் பழத்தை தலையில் தேய்த்து குளிக்க புறப்பட்டதால் சுடிதார் சுதாவும் தான் கொண்டு வந்த எலுமிச்சம் பழத்தை துண்டாக்கி தலையில் தேய்த்துக் கொண்டு குளிக்க புறப்பட்டார்.
பூங்கொடியும் அருவியில் குளிக்க தயாரானார். கண்ணாயிரம் ..அப்பா. குற்றாலத்திலே குளிக்க முடியல.. இங்கே நல்லா குளிச்சிரணும்..விடக்கூடாது என்றபடி அருவியில் நடுப்பகுதியில் போய் குளிக்கணும் என்று நினைத்தார். அப்பத்தான் தலையில் நடுவில் அருவி தண்ணி விழும்..மூளை உற்சாகம் ஆகும் என்று நினைத்தார். ஆனால் கூட்டமாக இருந்ததால்…அவரை நடுப்பகுதிக்கு செல்ல விடாமல் மற்றவர்கள் தடுத்து தள்ளினர்.
இதில் தள்ளாடிய கண்ணாயிரத்தை பயில்வான் தாங்கி பிடித்து… என்ன.. கீழே விழுந்தா.. என்ன ஆயிருக்கும்… ஏன் இந்த அவசரம் என்று கேட்க.. கண்ணாயிரம்..ம்.. அருவி நடுவில் குளிக்கணும் என்று சொல்ல.. அப்படியா.. என்றபடி மற்றவர்களை விலக்கிவிட்டு கண்ணாயிரத்தை அருவியில் நடுவில் பயில்வான் குளிக்க வைத்தார்.
கண்ணாயிரமும்..ம் . இதுக்குத்தான் ஒரு பயில்வான் வேணும் என்று சொல்லுறது. பயில்வான்..என்றவுடன் எல்லோரும் வழிவிட்டு விட்டார்களே என்றபடி கண்ணாயிரம் அருவியில் நடுவில் அமர்ந்து குளிக்க தொடங்கினார்.
ஆ..ஹா..என்ன குளிர்ச்சி. என்ன குளிர்ச்சி. .. என்றவாறு ஒரு பாட்டை முணுமுணுத்தார். குத்தால அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா. .என்று அவர் பாட… மற்றொரு குரல்…யார்ரா அது. . அகத்தியர் அருவியில் வந்து குத்தால அருவியை பத்தி பாடுறது என்று அதட்ட. கண்ணாயிரம் பாட்டை நிறுத்தினார்.
என்னங்கடா…சுதந்திரமா..ஒரு பாட்டு கூட பாட முடியல.. என்று முணுமுணுத்தபடி குளித்தார்.
தலையின் நடுவில் அருவி தண்ணீர்..பனிக்கட்டி போல விழ. .ஆஹா. ஆஹா. என்றவாறு தலையை நன்றாக தேய்த்தார்.. எனக்கு நல்ல அறிவு வரணும்…எல்லோரும் என்னை புத்திசாலின்னு பாராட்டணும். ..என்று வேண்டிக்கொண்டார்.
சுடிதார் சுதா பூங்கொடி ஆகியோர் பெண்கள் பகுதியில் குளிக்க…கண்ணாயிரம்.. அப்பாட… நமக்கு பிரச்சினை இல்ல… நாம நிம்மதியா குளிக்கலாம் என்றவாறு கண்ணாயிரம் கண்களை மூடிக்கொண்டு குளித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் குளித்த பின்பும் கண்ணாயிரத்துக்கு திருப்தி வரவில்லை. இன்னைக்கு முழுவதும் இங்கே இருந்து குளிக்கலாம் போலிருக்கு என்றபடி கண்ணாயிரம் மெல்ல கண்ணை திறந்து பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடி குளித்தார்.
அருவியில் குளித்த ஒவ்வொருவரும்.. வெளியேறினார்கள்.ஆனால் கண்ணாயிரம் மட்டும் குளித்துக் கொண்டே இருந்தார். இதை பார்த்த பயில்வான் உரத்த குரலில் ..என்ன கண்ணாயிரம். ..குளிச்சது போதாதா … ஜன்னி வரப் போகுது என்று கண்டிக்க .. கண்ணாயிரம் பயந்துபோய் எழுந்து மெல்ல வெளியே வந்தார்.
அவரை பார்த்த பயில்வான் ..என்ன கண்ணாயிரம். நல்லா குளிச்சியா.. முடி பஞ்சு போல இருக்கு என்றார்.
அதைக் கேட்டதும் கணணாயிரத்துக்கு தூக்கிவாரிப் போட்டது. என்ன..குளிக்க போகும் போது முடி கருப்பாத்தானே இருந்துச்சு. அருவியிலே குடிச்ச பிறகு வெள்ளையாக மாறிவிட்டதா.. தெரியலையே என்று விழித்தார்.
அப்போது மற்றொருவர். என்னங்க. எலுமிச்சம் பழம் தேய்ச்சு குளிச்சியளா. முடி சும்மா பஞ்சு பத்தி போல இருக்கு என்று சொல்ல கண்ணாயிரம். அடடா. அருவியிலே குளிச்சது தப்பா போச்சோ.. அருவியில் குடிச்ச மற்றவங்க தலை முடி கருப்பா தான இருக்கு. நமக்கு மட்டும் எப்படி வெள்ளையா பஞ்சாச்சு எலுமிச்சம் பழம் வேலையை காட்டிட்டோ என்று விழித்தபடி கண் கலங்கினார்.
அதைப் பார்த்த ஒருவர்.. கண்ணாயிரம்.. முடி பஞ்சா பறக்கே. என்ன பண்ணுனே என்று கேட்க. கண்ணாயிரம்… முடி பறந்துவேற போகுதா… ஏதோ தப்பு நடந்து போச்சே.. பூங்கொடி கருகருன்னு இருக்கு என்று என் முடியை பாராட்டுவாளே. .இப்போ…என்ன முடி இப்படி ஆயிட்டுன்னு கேட்பாளே. பஞ்சு பஞ்சா போச்சே நான் என்ன செய்வேன் என்று புலம்பினார் .அதைப்பார்த்து அனைவரும் சிரிக்க. கண்ணாயிரத்துக்கு கோபம் கோபமாக வந்தது. (தொடரும்)
-வே.தபசுக்குமார், புதுவை.