May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

எலுமிச்சம் பழத்தில் கண்ணாயிரத்துக்கு விழுந்த அடி/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram was hit by a lemon fruit / comic story / Tabasukumar

1.9.2023
கண்ணாயிரம் பாபநாசத்திலிருந்து அகத்தியர் அருவிக்கு குளிக்க சென்ற போது அவரது மனைவி பூங்கொடி கண்ணாயிரம் தலையில் தேய்த்து குளிக்க எலுமிச்சம் பழத்தை எடுக்க…எலுமிச்சம் பழத்துக்கு பெயர் வந்தது எப்படி என்று கண்ணாயிரம் கேட்டு அதிரவைத்தார். எலி கடிக்காமல் மிச்சம் வைத்த பழம் எலுமிச்சம் பழம் என்று பயில்வான் சொன்ன கருத்தை மனைவி பூங்கொடி ஆதரித்ததால் கண்ணாயிரம் ஏற்றுக்கொண்டார்.
இந்த நேரத்தில் பூங்கொடி..ஏங்க.. இனி அது இதுன்னு கேட்டு குழப்பம் பண்ணக் கூடாது.. பேசாம குளிக்கணும் சரியா.. என்று கண்ணாயிரத்தை கண்டித்தார்.

கண்ணாயிரமும் சரி என்று தலையை அசைக்க. பூங்கொடி எலுமிச்சம் பழத்தை தனது பெரிய நகத்தால் துளை போட்டு கண்ணாயிரம் தலையில் தேய்த்தார். கண்ணாயிரம் தலையில் இரண்டு தட்டுத் தட்டி அங்கும் இங்கும் அசைத்தார்.
கண்ணாயிரத்துக்கு தலை வலித்ததால் ஏய் ஏய் மெதுவா என்று கத்த.. பூங்கொடி அவருக்கு வலிக்கக் கூடாது என்று நினைத்து.. மெதுவாக தலையில் எலுமிச்சம் பழத்தை தேய்க்க… கண்ணாயிரம் உடனே.. என்ன .. மெதுவா தேய்க்க.. அரக்கி… அரக்கி.. அரக்கி… என்று சொன்னார்.
அதைக் கேட்ட பூங்கொடி கோபத்தில்.. என்னையா அரக்கி என்கிற.. என்றபடி ஓங்கி ஒரு குட்டு குட்டினார்.
கண்ணாயிரம் அய்யோ நான் அப்படி சொல்லல.. அரக்கி தேய்க்க சொன்னேன் என்க..ம் மறுபடியும் அரக்கின்னு சொல்லுறீயளா.. நான் உண்மையிலே அரக்கியா மாறி விடுவேன் ஒழுங்கா சொல்லுங்க என்று எச்சரிக்க.. கண்ணாயிரம் அய்யோ..அரக்கிக்கு பதிலா வேறு ஏதோ ஒண்ணு சொல்லச் சொன்னாங்க.. அது என்னதுன்னு மறந்து போச்சே.. நான் என்ன செய்வேன்.. என்று கண்களை கசக்க.. பயில்வான் அருகில் வந்து என்ன கண்ணாயிரம் குளிக்கலையா என்று கேட்க.. அதுவா.. இந்த எலுமிச்சம் பழத்தை அரக்கி தேய்க்க சொன்னேன். அரக்கி என்றவுடன் பூங்கொடி கோபப்படுறா.. அரக்கி என்பதற்கு பதிலாக வேறு என்ன வார்த்தை சொல்லலாம் என்று கண்ணாயிரம் கேட்க.. பயில்வானோ. …அ .. ஆளை விடுப்பா…ஏற்கனவே பட்டபாடு போதும்.. நீயா ஏதாவது சொல்லு நான் வர்றேன் என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்.
அய்யோ..யாரும் உதவி பண்ண மாட்டேங்கிறாங்க..என்ன செய்வேன்..என்று புலம்ப.. பூங்கொடி மெல்ல.. சத்தம் போடாம இருங்க…. நான் தேய்ச்சி விடுறேன் என்க.. கண்ணாயிரம்…ம்..சும்மா தேய்ச்சா பத்தாது.. நல்லா தேய்ச்சி விடு என்று சொல்ல.. பூங்கொடி .அப்ப நான் தேய்க்கிறது நல்லா இல்லையா.. என்று கேட்க.. கண்ணாயிரம்.. ஓ…நான் என்ன சொல்வேன்.. அரக்கி என்கிறதுக்கு பதிலா வேறு ஒரு வார்த்தை சொன்னாங்க.. அது மறந்து போச்சே என்ன செய்ய என்று விழித்தார்.
அப்போது அங்குவந்த ஒருவர் என்னங்க.. எலுமிச்சம் பழம் தேய்க்கியளா.. நல்லா அரக்கி …. தேயிங்க என்று சொல்ல.. கண்ணாயிரம் யோவ்.. நீ வேற.. அந்த அரக்கி எனக்கு தெரியாது.. அதுக்கு பதிலா வேறு என்ன சொல்லுறது.. அதை சொல்லுய்யா என்று கண்ணாயிரம் கேட்க… அதுவா அடிச்சி தேயின்னு சொல்லுங்க என்றபடி அங்கிருந்து செல்ல.. கண்ணாயிரம்.. ஓ.. அப்படி சொல்லலாமா.. சொல்லலாம்.. மழை அடிச்சி பெய்துன்னு சொல்லுறமே.. அது மாதிரிதான் இதுவும் .. பூங்கொடிகிட்ட சொல்லி பார்ப்போம்.. என்று நினைத்த கண்ணாயிரம்.. பூங்கொடியிடம்..ஏய் அடிச்சி தேயி என்றார்.
அது போதாதா..ஏற்கனவே கோபத்தில் இருந்த பூங்கொடி வேகமாக கண்ணாயிரம் கன்னத்தில் பளார் பளார் என்று அடித்துவிட்டு தலையில் எலுமிச்சம் பழத்தை தேய்க்க.. பின்னர் கண்ணாயிரம் தோளில் இரண்டு அடித்துவிட்டு மீண்டும் எலுமிச்சம் பழத்தை தேய்க்க.. நிலமை விபரீதமாவதை அறிந்த கண்ணாயிரம்..ஏய்..ஏய் நிறுத்து..நிறுத்து.. என்ன இந்த அடி அடிக்கிற என்று கேட்க.. பூங்கொடியோ..ஏங்க..நீங்கதான அடிச்சி தேய்க்கச் சொன்னீய..இப்ப என் மேல தப்பு சொல்லுறீய.. என்று அதட்ட கண்ணாயிரம் மெல்ல.. கோபப்படாதே.. மழை அடிச்சி பெய்யுது என்று சொன்னா.. என்ன அர்த்தம்.மழை அதிகமா பெய்யுது அப்படின்னு அர்த்தம். மழை ஒவ்வொரு வரையும் வந்து அடிக்கவா செய்யும். இதை கொஞ்சம் படிச்ச நானே புரிஞ்சுக்கிட்டேன். உனக்கு புரியலையா என்று கேட்க..பூங்கொடியோ..புரியுது புரியுது.. உங்களைவிட நான் அதிகம் படிச்சவ..அடிச்சி தேயுன்னா அதிகம் தேய்க்கணுமுன்னு அர்த்தமா.. விடுங்க.. நான் பார்த்துக்கிறேன் என்றபடி இரண்டாவதாக ஒரு எலுமிச்சம் பழத்தை தனது கூர்மையான நகத்தால் கீறி கண்ணாயிரம் தலையில் வைத்து தேய்த்தார்.
அதிகமா தேய்க்கவும் என்றபடி மூன்றாவதாக ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து தனது நகத்தில் கீறி கண்ணாயிரம் தலையில் தேய்க்க.. அதைப் பார்த்த சுடிதார் சுதா ..ஏங்க.. ஏங்க..அதிகமா எலுமிச்சம் பழத்தை தேய்ச்சா.. ஜன்னி வந்திரும்.. சிக்கலாகிடும் என்று எச்சரித்தார்.
கண்ணாயிரம் அய்யோ..போதும்..போதும்.. ஜன்னி வந்தா நான் என்ன செய்வேன்.. அருவியில் குளிக்கக் கூடாது என்பாங்க.. அது சரிப்பட்டு வராது..தேய்ச்சது போதும் என்றபடி தலையில் இருந்த எலுமிச்சம் பழ துகள்களை கையால் தட்டிவிட்டார்.
அட..நல்ல வேளை தப்பிச்சேன்.. இல்லன்னா என்ன ஆயிருக்கும்.. சுடிதார் சுதா உயர்ந்த படிப்பு படிச்சதாலே..நாலு விசியம் தெரியுது.. பூங்கொடி..பள்ளிக்கூடம் படிச்சிருக்கா..ஆனா விவரம் இல்லை.. என்ன பண்ணுறது.. நாம கொடுத்துவச்சது அவ்வளவுதான்.. என்று சொல்ல அதைக் கேட்டபூங்கொடி அரக்கி போல் நின்றதை பார்த்ததும்.. உண்மையிலே ஜன்னி வந்தது போல் கண்ணாயிரம் நடுங்கினார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.