June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

சனாதன சர்ச்சைப் பேச்சு: உதயநிதி மீது மும்பை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு

1 min read

Sanatana Controversy: Case registered against Udayanidhi in Mumbai Police Station

13.9.2023
சனாதன தர்மம் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மும்பை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

மும்பையில் மிரா சாலையில் வசிக்கும் நாக்நாத் காம்ப்ளி (வயது 38) என்ற தனியார் நிறுவன ஊழியர், உதயநிதிக்கு எதிராகக் கொடுத்த புகாரின் பேரில் மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153A, 295A ஆகியவற்றின் கீழ் உதயநிதிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப் பிரிவுகள் சொல்வது என்ன?

மத, இன, மொழி ரீதியாக இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தும் விதமாகச் செயல்படுவதை பிரிவு 153A குற்றம் என கூறுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க இச்சட்டத்தில் இடம் உண்டு. ஒருவது மத நம்பிக்கையை காயப்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே ஒருவர் பேசினாலோ, எழுதினாலோ அதை குற்றம் என பிரிவு 295A கூறுகிறது. மதங்களை இழிவுபடுத்துவதைத் தடுக்கும் நோக்கிலான இந்த சட்டப்படி ஒருவர் குற்றம் இழைத்தது உறுதியானால், அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

உதயநிதி பேச்சு

சென்னையில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்” என தெரிவித்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *